உக்ரேன் போரில் தரையில் இருந்து வானிற்கு வீசப்படும் ஏவுகணைகள் (SAM – Surface to Air Missiles) அதிக அளவில் பாவிக்கப்படுவதுடன் இரு தரப்பினரிடமும் அவை அதிக அளவி கையிருப்பில் உள்ளன.
இரு தரப்பினரும் தமது போர் விமான இழப்புக்களை தவிர்க்க முயல்வதால் விமானப் பாவனை குறைந்த ஒரு போர்க்களமாக உக்ரேன் இரசியப் போர்க்களம் பார்க்கப்படுகின்றது.
இரசியாவிடம் உயர்ந்த விமானங்களும் சிறந்த விமானைகளும் இருந்த போதிலும் இரசியாவிடம் உரிய விமானப் பராமரிப்பு முறைமை இல்லை.
இதனால் இரசியாவால் அதிக அளவு போர் விமான ங்களை உக்ரேனுக்கு எதிராக இரசியாவால் பாவிக்க முடியவில்லை.
உக்ரேனியப் படையினரைத் திணறடிக்கக் கூடிய வகையில் அதிக அளவு தரைப்படையினரை புட்டீன் உக்ரேனுக்கு எதிராக களமிறக்கிக் கொண்டிருக்கின்றார்.
1853-ம் ஆண்டில் இருந்து 1856வரை நடந்த கிறிமியாப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் 1950முதல் 1953 வரை நடந்த கொடியாப் போரிலும் இரசியா அதிக அளவு உயிரிழப்பைச் சந்தித்தது.
உயிரிழப்பை பெரிதாக பொருட்படுத்தாமல் அதிக அளவு படையினரை களத்தில் இரசியா இறக்கக் கூடியது.
2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பமான உக்ரேன் போரில் 2022 டிசம்பர் வரை கடுமையாகக் காயப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட இரசியப் படையினரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் அதிகமானது எனச் சொல்லப்படுகின்றது.
இரசியக் குடியரசுத் தலைவர் புட்டீன் மூன்று இலட்சம் உயிரிழப்பு வரை செல்லத் தயாராக இருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.
தேவை புதிய தரமான போர்த்தாங்கிகள்
இரசியா பெருமளவு தரைப்படையினரை களத்தில் இறக்கும் போது உக்ரேன் படையினரின் உயிரிழப்பை மிக குறைக்கக் கூடிய வகையிலும் இரசியப் படையினரின் உயிரிழப்பை மிக அதிகரிக்கக் கூடிய வகையிலும் உக்ரேனியர்கள் போர் புரிந்தால் தான் அவர்கள் மேலும் நிலப்பரப்புக்களை இழக்காமல் தடுக்க முடியும் அத்துடன் இழந்த நிலப்பரப்பை மீளக் கைப்பற்றவும் முடியும்.
போலாந்து கொடுத்த பழைய சோவியத் ஒன்றிய காலத்து T-75 போர்த்தாங்கிகளை சிறப்பாக திருத்தி அவற்றைப் பாவித்து 2022 செப்டம்பரில் உக்ரேனியர்கள் வியக்கத்தக்க வகையில் துரிதமாக உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் உள்ள கார்க்கீவ் பிரதேசத்தை மீளக் கைப்பற்றினர்.
அதன் பின்னர் தம்மிடம் போதிய போர்த்தாங்கிகள் அதிலும் புதிய தரமான போர்த்தாங்கிகள் இருந்தால் இரசியப் படையினரைத் தோற்கடிக்க முடியும் என உக்ரேனியப் படையினர் நம்புகின்றனர்.
அதற்கு ஆதரவாக நேட்டோ நாட்டுப் படைத்துறை நிபுணர்களும் கருத்துக்களை வெளியிட்டனர்.
M1A1/2 Abrams Main Battle Tank
அதன் விளைவாக ஜேர்மனி, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தமது லெப்பார்ட்-2 சலெஞ்சர்-2, M1 Abrams ஆகிய போர்த்தாங்கிகளை அனுப்பினர்.
அவை தரத்தில் உயர்ந்தவையாக இருந்தாலும் எண்ணிக்கையில் போதுமானவையாக இல்லை என்பதுடன் அவற்றை அனுப்பி பயிற்ச்சி பெற மூன்று மாதங்கள் எடுக்கலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.
உக்ரேனியர்களின் அடுத்த வேண்டுகோள்
புதிய தர போர்த்தாங்கிகளைப் பெற்றுக் கொண்ட உக்ரேனியப் படையினர் மகிழ்ச்சியில் மிதக்கையில் உக்ரேனிய வான் படையினர் தமக்கு ஆகக் குறைந்தது நான்காம் தலைமுறைப் போர்விமானங்களாவது வேண்டும் என்கின்றனர்.
அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் F-16 போர் விமானங்கள் வேண்டும் என்கின்றனர். அமெரிக்கப் படைத்துறையினர் அதை ஆதரிக்கின்றனர். ஆனால் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் F-16 உக்ரேனுக்கு வழங்கப்பட மாட்டாது என்றார்.
உக்ரேன் போரில் அமெரிக்கா முதலில் இல்லை எனச் சொல்லப்பட்ட படைக் கலன்கள் எல்லாம் பின்னர் வழாங்கப்படுவது வழமையாக இருக்கின்றது.
ஏற்கனவே அமெரிக்கா உக்ரேனியர்களுக்கு F-16 ஓட்டுவதற்கான பயிற்ச்சிகளை வழங்க ஆரம்பித்து விட்டனர் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்காம் தலைமுறைப் போர்விமானங்களாவன: அமெரிக்காவின் F-15, F-16 பிரான்ஸின் ரஃபேல், ஐரோப்பாவின் யூரோ ஃபட்டர், இந்தியாவின் தேஜஸ், சீனாவின் J-20 ஆகியவை சிறந்த நான்காம் தலைமுறைப் போர்விமானங்கள் என்றாலும் F-16 நீண்டகாலமாக பாவனையில் உள்ளதும் பல போர் முனைகளைக் கண்ட போர்விமானமாகும்.
அமெரிக்கா தற்போது ஐந்தாம் தலைமுறை F-35, B-21 போர்விமானங்களை அதிகரித்து F-16ஐ குறைக்கவிருக்கின்றது.
F-16 இரசியாவிற்கு எதிராக சாதிக்குமா?
2015 நவம்பரில் துருக்கியின் F-16 விமானம் இரசியாவின் எஸ்யூ-24 போர் விமானத்தை சிரிய துருக்கி எல்லையில் வைத்து சுட்டுவீழ்த்தியது.
துருக்கி சுட்டு வீழ்த்திய இரசியாவின் எஸ்யூ-24 போர் விமானங்கள் 23மில்லி மீட்டர் துப்பாக்கிகள் மூன்று பொருத்தப்பட்டவை.
அத்துடன் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய நான்கு லேசர் வழிகாட்டி ஏவுகணைகளையும் கொண்டவை.
தேவை ஏற்படின் தொலைக்காட்சி வழிகாட்டி ஏவுகணைகளையும் எடுத்துச் செல்லக் கூடியவை. அதில் சிறந்த ரடார் வசதிகளும் உண்டு.
இப்படிப் பட்ட இரசிய விமானத்தை அமெரிக்கத் தயாரிப்பான F-16 விமானத்தைப் பாவித்து துருக்கி சுட்டு வீழ்த்தியது.
விமானத்தில் இருந்து இரு விமானிகள் பரசூட்டின் உதவியுடன் தரையிறங்க முற்பட்ட வேளையில் துருக்கிக்கு ஆதரவான சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் அவர்களில் ஒருவரை ஜெனிவா உடன்படிக்கைக்கு மாறாகச் சுட்டுக் கொன்றனர்.
இரசியாவின் Su-35, SU-57 ஆகிய போர் ளுக்கு எதிராக விமானங்கஅமெரிக்காவின் F-16 விமானங்கள் சிறப்பாக செயற்படும் என்று சொல்ல முடியாது.
ஆனால் Su-35, SU-57 இரசியாவிடம் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. SU-57 பத்து என்றும் SU-35 110 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதை இரசியா பெருமளவில் பயன் படுத்துவதும் இல்லை. ஒரு Su-35ஐ உக்ரேனியர் சுட்டு வீழ்த்தியதுடன் அதன் விமானியையும் கைப்பற்றினர்.
இரசிய Su-57ஐ பயன்படுத்தினால் அதை அமெரிக்கர்கள் எப்படியாவது சுட்டி வீழ்த்தி அவற்றின் இரகசியங்களைப் பெற அமெரிக்கர்கள் முயல்வது நிச்சயம் என்பதால் இரசியா அவற்றைப் பாவிக்க தயக்கம் காட்டுகின்றது.
மற்ற இரசியப் போர் விமானங்களை F-16 விமானங்கள் புதிய வானில் இருந்து வானிற்கு வீசும் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்த முடியும் F-16 விமானங்களின் புதிய வடிவமான F-16V விமானங்கள் உக்ரேனுக்கு பயனுள்ளதாக அமையும்.
இரசிய வான் பாதுகாப்பும் F-16
இரசியாவின் முதன்மை வான்பாதுகாப்பாக இருப்பது எதன் S-400 முறைமை. அதனால் நான்காம் தலைமுறைப் போர்விமானங்களை இனம் கண்டு அழிக்க முடியும்.
அது இதுவரை ஒரு முறையான போர்க்களத்தில் தேர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை, சிரியாவில் அது பாவிக்கப்பட்டது.
சிரியப் போரின் போது லெபனானுக்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் படைக்கலங்களை எடுத்துச் செல்ல முயன்ற போதெல்லாம் இஸ்ரேலின் F-16 அங்கு தாக்குதல் நடத்தின.
துருக்கியின் F-16ஐ கிரேக்கத்திடமிருக்கும் இரசியாவிடமிருந்து வாங்கிய S-300 வான் பாதுகாப்பு முறைமை இலகுவில் இனங் காண்பதாக துருக்கி அறிவித்துள்ளது.
உக்ரேன் – இரசிய எல்லையைத் தாண்டி உக்ரேனியர்களால் F-16 வானூர்தியை கொண்டு செல்ல முடியாது.
ஆனால் உக்ரேனுக்குள் இருக்கும் இரசிய வான் பாதுகாப்பு முறைமைகளை அமெரிக்காவின் HIMARS பல்குழல் ஏவுகணைச் செலுத்துகள் மூலம் அழித்த பின்னர் உக்ரேனில் உள்ள இரசியப் படை நிலைகளை F-16 மூலம் குண்டுகளை வீசி அழித்து தாங்கிகள் மூலம் இரசியப்படையினரைப் பின்வாங்கச் செய்யலாம்.
அமெரிக்கா தொலைதூர தாக்குதல் படைக்கலன்களை உக்ரேனுக்கு வழங்க் முன் வந்திருப்பதால் உக்ரேன் எல்லைக் அண்மையாக உள்ள இரசிய வான் பாதுகாப்பு முறைமைகளை மேலும் இரசியா எல்லையில் இருந்து விலக்கும் என எதிர்பாக்கலாம்.
பிரான்ஸ் தனது போர் விமானங்களை அனுப்புவதை தவிர்க்க மாட்டாது என அறிவித்துள்ளது.
உக்ரேனுக்கு புதிய போர்த்தாங்கிகளை வழங்க முடியாத பிரான்ஸ் தனது நிலையை உலக அரங்கில் நிலை நாட்ட உக்ரேனுக்கு போர்விமானங்களை அனுப்ப முயலலாம்.
அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்ற நேட்டோ நடுகளை F-16களை அனுப்ப அனுமதிக்கலாம்.
அவற்றை ஈடுகட்ட அந்த நாடுகள் அமெரிக்காவின் F-35 வாங்கும். அதனால் அமெரிக்க படைத்துறை உற்பத்தியாளர்களின் இலாபம் அதிகரிக்கும்.
இன்னும் ஓராண்டுக்குள் F-16 உட்பட்ட பல நான்காம் தலைமுறைப் போர்விமானங்கள் உக்ரேனுக்கு வழங்கப்படும்.