அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாடு பிளவுப்படும் என்ற சந்தேகம் நாட்டு மக்கள் இடத்தில் உள்ளது.

உண்மையில் 13 ஐ நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாடு நிச்சயம் பிளவுபடாது .  ஒற்றையாட்சிக்குள் ஒருபோதும் சமஷ்டிக்கு சாத்தியமில்லை என்றுகொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

11 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

13 ஐ நடைமுறைப்படுத்துவதன் மூலம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடு பிளவு படுவதற்கான ஏற்பாடுகளும் அதில் இல்லை.

குறிப்பாக இன்று பலருக்கு 13 ஆவது திருத்தம் தொடர்பில் போதிய அறிவு இன்மையே இதற்கான காரணமாகும்.

அதாவது இந்த திருத்தத்தில் சகல அதிகாரங்களையும் மத்திய அரசு மீள பெற்றுக்கொள்ள கூடியதாகவும், மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்த கூடியதாகவும் காணப்படுகிறது.

மாகண சபை முறைமையில் முதலமைச்சரை விட அதிகளவு அதிகாரம் கொண்டவராக ஆளுநர் காணப்படுகிறார்.  அவரை நியமிக்கின்றவர் ஜனாதிபதி. எனவே ஜனாதிபதி  தனக்கு விருப்பமான நபர் ஒருவரை ஆளுநராக நியமிக்க முடியும்.

நாடுப் பிளவுபட்டு விடும், இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும்,  இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கை சென்று விடும் அல்லது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இந்தியாவுடன் இணைந்து விடும்

என்று பலரும் கூறுகிறார்கள். இந்நிலையில் இந்த 13 இல் என்ன இருக்கிறது என்பது கூட அவர்களுக்கு தெரியாது.

குறிப்பாக காணி அதிகாரத்தை எடுத்துகொள்வோமாயின், காணி அதிகாரங்கள் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ளதா? என்பதே ஒரு கேள்வியாகும்.

இருப்பினும் இது தொடர்பில் முன்னர் சிக்கல் தோன்றி பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதன் தீர்ப்பு காணி அதிகாரங்கள் 13 க்கு சொந்தமானவையல்ல என்று நீதிமன்றம் தீரப்பு வழங்கியது.

மத்திய அரசு காணிகளை மாகாண சபைக்கு வாங்கியிருந்தால் அதை பயன்படுத்த மாத்திரமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இல்லாத ஒன்றை எவ்வாறு ஜனாதிபதி வழங்க போகிறார்? என்பதே எனது கேள்வியாகும்.

மேலும் ஒற்றையாட்சிக்குள் சமஷ்டிக்கு சாத்தியம் கிடையாது. இலங்கை என்பது ஒற்றையாட்சி  நாடாகும். சமஷ்டி என்பது அதிகாரங்கள் மத்திய அரசிற்கும்,

மாகாண அரசிற்கும் மாநிலங்களுக்கும் பகிரப்படவேண்டும். ஆனால் 13 ஆவது திருத்தத்தில் பகிரப்படவில்லை. மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றொரு திருத்தத்தை கொண்டு வந்து மீள பெற்றுக்கொள்ள முடியும். இங்கு அதிகாரங்கள்  பிரிபடவில்லை. ஆனால் சட்டவாக்க அதிகாரம் மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் அடுத்த மட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  அது அதிகார பரவலாக்கம் என்று கூறலாமே தவிர  அதிகார பகிர்வு என்று கூறமுடியாது.

சமஷ்டி எனும் போது அதிகாரப்பகிர்வும். அதாவது 13 ஆவது திருத்தத்தில் அதிகாரங்கள் பகிரப்படவில்லை. இலங்கை ஒற்றையாட்சி நாடாகும்.

இங்கு சமஷ்டிக்கு இடமே இல்லை.  ஆனால் தமிழ் மக்கள் சமஷ்டி என்பதே ஒரே தீர்வு என்கிறார்கள்.  இதற்காகவே பல தியாகங்களை செய்து இருக்கிறார்கள்.

தற்போது நாட்டில் அதிகாரமற்ற மாகாண சபை முறை ஒன்றே காணப்படுகிறது. தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு சமஷ்டி முறையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பாகும்.

இருப்பினும் தற்போது உள்ள நிலையில் அதற்கு சாத்தியமில்லை. இன்று நாட்டில் 13 ஆவது திருத்தத்திற்கு நாட்டில் பாரியதொரு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சமஷ்டி என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும் என்றார்.

Share.
Leave A Reply