“ரணில் விக்கிரமசிங்க இப்போது தீர்வைக் கோரும் தமிழர்களுக்கும், தீர்வை வழங்க மறுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் சமரசம் செய்து கொள்ள முயற்சிக்கவில்லை”
‘13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா போன்ற புற அழுத்தங்கள் இருந்தாலும், தமிழர்கள் அதனை முழுமையான தீர்வாக ஏற்கத் தயாராக இல்லை என்பதும் ரணிலுக்கு சாதகமானது’
“ரணிலை புகழாரம் செய்யும் ராஜபக்ஷக்களின் மறைமுக கூட்டை தாண்டுவதற்கு அவர் முயற்சிக்கவே மாட்டார். ஏனென்றால் ரணிலுக்கும் அரசியலில் எதிர்கால கனவுகள் உள்ளன”
13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக அறிவித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கத் தொடங்கியிருக்கிறார்.
முன்னதாக அவர், காணி, பொலிஸ் அதிகாரங்கள் அடங்கலாக, 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
சர்வகட்சிக் கூட்டத்தில் அவர் அதனை அறிவித்திருந்ததுடன், 13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பின் ஒரு பகுதி என்றும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டியது தனது கடமை என்றும் கூறியிருந்தார்.
13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றால், அதனை அரசியல் சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்குவதற்கு, 22 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருமாறும், அவர் சவால் விடுத்தார்.
13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக ரணில் விக்கிரமசிங்க கூறியதை அடுத்து, சிங்கள இனவாதிகள் கொதித்தெழுந்தனர்.
அவர்கள் மகாநாயக்கர்களிடம் ஓடிச் சென்று முறையிட்டனர். மகாநாயகர்களை சந்திக்க சென்ற ஜனாதிபதியின் கையில், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த கூடாது என்று வலியுறுத்தும் கடிதம் கொடுக்கப்பட்டது.
அதற்குப் பின்னர், அவர் 13 பற்றி குறிப்பிடுவதை தவிர்த்து வருகிறார். சுதந்திர தினத்தன்று மாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூட அவர் 13 பற்றி எதையும் கூறவில்லை.
இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குட்பட்ட அதிகபட்ச அதிகாரப் பகிர்வு பற்றியே பேசியிருந்தார்.
கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து நிகழ்த்திய அக்கிராசன உரையிலும், 13ஆவது திருத்தம் பற்றி அவர் குறிப்பிடவில்லை.
ஒற்றையாட்சி முறைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு என்பதை மாத்திரம் வலியுறுத்தியிருக்கிறார். காணி அதிகாரங்கள் பகிரப்படும் என்றும், ஆனால் பொலிஸ் அதிகாரங்களில் மாற்றம் இருக்காது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக கூறிய ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ் அதிகாரங்களில் மாற்றம் இருக்காது என்று இப்போது கூறுகிறார்.
அவ்வாறாயின், அது 13ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கமாக அது இருக்காது. அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதாகவும் இருக்காது.
ஒற்றையாட்சி முறைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு என்பது, மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களும் கூட இல்லாத அதிகாரப் பகிர்வு தான் என்பது உறுதியாகியிருக்கிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய போது, லண்டன் நகர சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் கூட, 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
லண்டன் நகர சபைக்கு பொலிஸ் அதிகாரங்கள் இருக்கிறது. ஆனாலும் அங்கு ஒற்றையாட்சி தான் நடக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால், ரணில் விக்கிரமசிங்க இப்போது, வேறு மாதிரிப் பேசத் தொடங்கியிருக்கிறார். ஒற்றையாட்சிக்குள் கூடுதல் அதிகாரப் பகிர்வு என்கிறார். ஆனால், பொலிஸ் அதிகாரங்களில் மாற்றம் இருக்காது என்றும் கூறுகிறார்.
இது எவ்வாறு கூடுதல் அதிகாரப் பகிர்வாக இருக்க முடியும்? இதனை எவ்வாறு அதிகாரப் பகிர்வு என்று ஒத்துக் கொள்ள முடியும்? என்ற கேள்வி எழுகிறது.
ரணில் விக்கிரமசிங்க இப்போது தீர்வைக் கோரும் தமிழர்களுக்கும், தீர்வை வழங்க மறுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் சமரசம் செய்து கொள்ள முயற்சிக்கவில்லை.
அவர் இரண்டு தரப்புகளையும் சமாளித்துக் கொண்டு பிரச்சினைக்கு வெளியே தப்பிச் செல்லவே முயற்சிக்கிறார்.
மகாநாயக்கர்களின் அழுத்தம் இனவாதிகளிடம் இருந்து கிளம்பும் எதிர்ப்பு என்பன அவரை அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்து வெளியே கொண்டு வந்திருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசியல் கனவுகள் இருக்கிறது. அவர் 1999இல் சந்திரிகாவுக்கு எதிராக, 2005இல் மஹிந்தவுக்கு எதிராக என, இரண்டு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி கண்டவர்.
இப்போது அவருக்கு எதிர்பாராத வகையில் ஜனாதிபதி பதவி கிடைத்திருந்தாலும், அவர் ‘மக்களாணையில் ஆட்சிக்கு வந்தவரில்லை’ என்ற பழிச்சொல் இருந்து கொண்டிருக்கிறது.
மக்களாணையைப் பெறாத அவருக்கு 13ஐ நடைமுறைப்படுத்தும் அதிகாரம் இல்லை, உரிமை இல்லை என்று சிங்கள இனவாதிகள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திட்டம் அவருக்கு இருக்கிறது. ஐ.தே.க.வின் தலைவர்கள் இதனை தெளிவாக கூறிவருகின்றனர்.
அடுத்த 20வருடங்களுக்கு அவர் தான் ஜனாதிபதி என்றும் அவர்கள் கூறுகிறார்கள். முன்னர் கோட்டாவுக்கும் இப்படித் தான், மொட்டுக் கட்சியினர் குழையடித்து, அவரது அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கினர்.
அதேநிலை ரணிலுக்கும் வந்திருக்கிறது. அவரது கட்சியினர் மாத்திரமன்றி, ப ஷில் ராஜபக்ஷவும், மஹிந்த ராஜபக்ஷவும் கூட ரணில் விக்கிரமசிங்க திறமைசாலி என்று பாராட்டுகிறார்கள்.
அவர் திறமையாக ஆட்சியைக் கொண்டு செல்வதாகவும், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்டு வருகின்றார் என்றும் அண்மைய நாட்களாக கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
மொட்டு கட்சி ரணில் விக்கிரமசிங்கவையே ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ராஜபக்ஷவினரின் இந்தப் புகழாரம், அவருக்கு மறைமுகமாக கால்கட்டுப் போட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது.
ஒருவரை உத்தரவு போட்டு கைக்குள் வைத்திருப்பது ஒரு வகை தந்திரம் என்றால், புகழ்ச்சி, பதவி ஆசையை தூண்டி விட்டு கட்டுக்குள் வைத்திருப்பது இன்னொரு தந்திரம்.
ராஜபக்ஷவினருக்கு இப்போது ரணில் தேவை. அவர் வேண்டாத வேலைகளில் சிக்கிக் கொண்டு பதவி இழந்தால், தங்களின் மீட்சிக்கான அவகாசத்தை தேடுவதில் சிக்கல் ஏற்படும்.
அதனால் ரணில் விக்கிரமசிங்கவை அவர்கள் காப்பாற்ற முனைகின்றனர்.
ரணில் ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு என்று அறிவித்ததும், பஷிலும், மஹிந்தவும் தெரிவித்துள்ள கருத்துக்கள் எதிர்மாறானவை அல்ல.
மஹிந்த சிந்தனையில் உள்ள விடயம் தான் இது. ‘13 பிளஸ்’ என்று அவர் அப்போது கூறியிருந்தார் என்று பஷில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
மொட்டின் கொள்கையுடன் இது அதிகம் முரண்படவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
இதன் மூலம், ரணிலுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று காண்பிக்க அவர்கள் முயன்றிருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், அவர்களின் இந்த மறைமுக எல்லைக் கோட்டைத் தாண்டிச் செல்வதற்கு ரணில் விரும்பவும் மாட்டார், அதற்கு முற்படவும் மாட்டார்.
அவ்வாறு செய்தால், யானை- மொட்டு கூட்டின் மூலம் மீண்டும் பதவிக்கு வரக் கூடிய வாய்ப்பை இழந்து விடலாம் என்ற பயம் அவருக்கு இருந்து கொண்டேயிருக்கும்.
அதேவேளை 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா போன்ற புற அழுத்தங்கள் இருந்தாலும், தமிழர்கள் அதனை முழுமையான தீர்வாக ஏற்கத் தயாராக இல்லை என்பதும் ரணிலுக்கு சாதகமானது.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலும் கூட தமிழர் தரப்பின் ஆதரவை அவரால் பெற்றுக் கொள்ள முடியாது.
இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தும் திட்டத்தில் இருந்து பின்வாங்கத் தொடங்கியிருப்பதில் ஆச்சரியம் இல்லை.
மகாநாயக்கர்களையோ பௌத்த பிக்குகளையோ, பகைத்துக் கொண்டால், சிங்கள மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும்.
அதனால் அவர் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாத, ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரம் என்ற கோசத்தை இப்போது கையில் எடுத்திருக்கிறார்.
இதற்குப் பின்னரும், 13 ஆவது திருத்தம், சமஷ்டி என்று தமிழ்க் கட்சிகளும், அரசியல்வாதிகளும் அவருக்குப் பின்னால் ஓடித் திரிவதில், அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.
-என்.கண்ணன்–