திருமணத் தகவல் இணையதளத்தில் பதிவுசெய்துவைத்திருந்த முதியவரை, ஆபாச வீடியோ எடுத்து மர்மப் பெண் ஒருவர் ரூ.60 லட்சத்தை அபகரித்துவிட்டார்.
சோஷியல் மீடியா மூலம் நடைபெறும் மோசடிகள் வெகுவாக அதிகரித்துவருகின்றன. இது தவிர எஸ்.எம்.எஸ் மூலம் லிங்க் அனுப்பியும் மோசடிகள் நடந்துவருகின்றன.
மும்பையில் திருமணத்துக்காக, திருமணத் தகவல் இணையதளத்தில் பதிவுசெய்துவைத்திருந்த முதியவர் ஒருவரிடம் பெண் ஒருவர் மோசடி செய்துவிட்டார். மும்பை புறநகரான அந்தேரியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தன் மனைவி இறந்துபோனதால் தனியாக வாழ்ந்துவந்தார்.
கடைசிக்காலத்தில் தன்னைக் கவனித்துக்கொள்ள ஒரு துணை தேவை என்று நினைத்த அந்த முதியவர் தன்னைப் பற்றிய தகவல்களைத் திருமணத் தகவல் இணையதளத்தில் பதிவுசெய்திருந்தார்.
இந்தத் திருமண வெப்சைட்டில் அடிக்கடி முதியவர் தனக்கு ஏற்ற வரன் கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்படிப் பார்த்தபோது நான்சி என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் அடிக்கடி மொபைல் போன் மூலம் பேசிக்கொண்டனர்.
அதன் பிறகு வாட்ஸ்அப் வீடியோ காலிலும் பேசினர். அப்படிப் பேசிப்பேசி அவர்களுக்குள் நெருக்கம் உண்டானது.
இதையடுத்து, வீடியோ காலில் இருந்தபோது அந்தப் பெண் முதியவரிடம் ஆடைகளை கழற்றச் சொல்லியிருக்கிறார்.
முதியவரும் உடைகளை கழற்றி நிர்வாண போஸ் கொடுத்திருக்கிறார். அதை அந்தப் பெண் தன்னுடைய மொபைல் போனில் பதிவுசெய்துகொண்டார்.
பின்னர் அந்த வீடியோவைக் காட்டி பணம் கொடுக்கும்படி கேட்டு, அந்தப் பெண் மிரட்டினார். “அப்படி கொடுக்கவில்லையெனில் ஆபாச வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுவிடுவேன்.
அந்த வீடியோவை முதியவரின் மொபைல் போனில் இருக்கும் தொடர்பு எண்கள் அனைத்துக்கும் அனுப்புவேன்” என்று மிரட்டினார்.
இதனால் பயந்துபோன முதியவர் முதலில் அந்தப் பெண் சொன்ன வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்பினார். அப்படியிருந்தும் அந்தப் பெண் விடாமல் தொடர்ச்சியாகப் பணம் கேட்டுக்கொண்டே இருந்தார்.
தொடர்ந்து ரூ.60 லட்சம் வரை அந்தப் பெண்ணுக்கு முதியவர் கொடுத்துவிட்டார். அப்படி இருந்தும் அந்தப் பெண் விடவில்லை.
இதனால் ஏற்பட்ட மனஉலைச்சல், பண விரயம் போன்றவற்றால் இது குறித்து முதியவர் சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார்.
அதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதியவர் பணம் அனுப்பிய வங்கிக்கணக்கு யாருக்குச் சொந்தம் என்பது குறித்தும் விசாரித்துவருகின்றனர்.
இது குறித்து போலீஸார்,“ சோஷியல் மீடியாவில்தான் இது போன்ற மோசடிகள் அதிகம் நடைபெறும்.
ஆனால், முதல் முறையாகத் திருமண இணையதளத்தில் தகவல்களை எடுத்து அதன் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அறிமுகம் இல்லாதவர்களின் நட்பு கோரிக்கையை ஏற்காதீர்கள். அந்தரங்க விவகாரங்கள், தனிப்பட்ட புகைப்படங்களை ஆன்லைனில் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.
மிரட்டலாக வரும் இமெயில்களை டெலிட் செய்யாமல் ஆதாரத்துக்கு சேமித்துவைத்திருங்கள்.
மிரட்டல் மெயில் வந்தால் போலீஸாரிடம் தெரிவிக்க வேண்டும். போன் நம்பர், வீட்டு முகவரி, இ-மெயில் விபரங்களை ஆன்லைனில் பதிவிடக் கூடாது” என்றனர்.