விடுதலை புலிகளின்  தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அவரது ஆதரவாளர்களும் எதிராளிகளும் ஒருபோதும் மறப்பதில்லை.

அதனால் அவர் செய்திகளில் இருந்து மறைவதில்லை. பிரபாகரனின்  பாதையில் செல்லமுடியாவிட்டாலும் , தமிழ் அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள்  அவரின் பெயரை தங்களுக்கு வசதியான முறையில்  பயன்படுத்துவது மாத்திரமல்ல, சிங்கள  அரசியல்வாதிகளும் தமக்கு தேவைப்படும்போது அவரை நினைவூட்டத் தவறுவதுமில்லை.

ஆனால்,பிரபாகரன் மீது ஆழமான பற்றுக்கொண்ட தமிழ்நாட்டின் தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ.நெடுமாறன் நீண்டகாலமாக இந்தியாவிலும்  இலங்கையிலும் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக செய்திகளில் அடிபடவில்லை.

முதுமைகாரணமாக அரசியல் செயற்பாடுகளில் முன்னரைப் போன்று அவரால் ஈடுபடமுடியாமல் இருப்பது அதற்கு ஒரு  காரணமாக இருக்கலாம்.

ஆனால், 89 வயதான நெடுமாறன் கடந்த வாரம் சடுதியாக இந்திய மற்றும் இலங்கை அளவில் மாத்திரமல்ல,சர்வதேச அளவிலும் ஊடகங்களை ஆக்கிரமித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

அதற்கு காரணம் கடந்த திங்கட்கிழமை தஞ்சாவூரில் அமைந்திருக்கும் ‘ முள்ளிவாய்க்கால்  முற்றத்தில் ‘ செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாகவும் ஈழத்தமிழர்களின் மீட்சிக்கான திட்டத்துடன் அவர் விரைவில் வருவார் என்றும் செய்த அறிவிப்பேயாகும்.

” பிரபாகரன் நலமே இருக்கிறார்.உலகம் பூராவும் வாழும் தமிழர்களுக்கு இதை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

அவரைப் பற்றி இதுவரை பரவிய வதந்திகளுக்கும் அச்சங்களுக்கும் இந்த செய்தி முற்றுப்புள்ளி வைக்கும்.

தற்போதைய சர்வதேச நிலைவரமும் இலங்கையில் ராஜபக்ச ஆட்சி மக்கள் கிளர்ச்சி மூலம் வீழ்த்தப்பட்ட சூழ்நிலையும் பிரபாகரன் பற்றிய செய்தியை அறிவிப்பதற்கு பொருத்தமான தருணமாகும்.

அவரின் குடும்ப உறுப்பினர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன்.அவர்களின் அனுமதியுடனேயே இந்த தகவல்களை எல்லாம்  நான் வெளியிடுகிறேன்.

” தமிழ் ஈழ மக்களுக்கான தனது திட்டத்தை பிரபாகரன் விரைவில் அறிவிப்பார்.ஈழத் தமிழர்களும் உலகம் பூராவும் வாழும் தமிழர்களும் அவருக்கு ஆதரவை ஆதரவை வழங்கவேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசாங்கமும் மாநிலத்தில் உள்ள சகல அரசியல் கட்சிகளும் அவருக்கு ஆதரவை வழங்குவதில் ஒன்றிணையவேண்டும்.

  “விடுதலை புலிகள் இருந்தபோது இந்திய விரோத சக்திகள் இலங்கை மண்ணைப் பயன்படுத்த அவர்கள்  ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

இந்தியாவின் எதிரி நாடுகளிடம் இருந்து எந்தவொரு காலப்பகுதியிலும் எந்த உதவியையும் பெறாமல் இருப்பதில் பிரபாகரன் உறுதியாக இருந்தார்.

சீனா இப்போது இலங்கையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.இந்தியாவுக்கு எதிராக இலங்கையை  சீனா பயன்படுத்துவதை தடுக்க இந்திய அரசாங்கம் உகந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்க அச்சுறுத்தலை தடுக்க இந்தியா தலையிடவேண்டும் ”  என்று நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறினார்.

அவருக்கு அருகில் இந்தியாவில் வாசம் செய்யும் கவிஞர் காசி ஆனந்தனும் கூட இருந்தார்.

பிரபாகரனின் மனைவி,மகள் குறித்து  கேட்டபோது அவர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என்று கூறிய நெடுமாறன் பிரபாகரனின் குண்டு துளைத்த சடலம் என்று காண்பித்து இலங்கை அரசாங்கம் 2009 மே 19 வெளியிட்ட காணொளி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறியிருப்பது இது முதற்தடவை அல்ல.

கடந்த வாரம் அவர் வெளியிட்ட தகவல்களுக்கு பிறகு இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் நோக்கும்போது முதலில் அவர் 2010 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது விடுதலை புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாகவும் ஈழத்தில் மீண்டும் போர் மூளும்.பிரபாகரனே அதற்கு தலைமை தாங்குவார் என்றும் கூறியதாக அறிய முடிகிறது.

பிறகு 2016 பெப்ரவரியில் கோயம்புத்தூரில்  செய்தியாளர்கள்  சந்திப்பில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் அவரது மரணத்தை இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

அடுத்து 2018 ஆம் ஆண்டில் ” பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.அவர் ஒருபோதும் பிடிபடவில்லை. தப்பி வெளியேறிவிட்டார்” என்று இந்தியன் எகஸ்பிரஸ் பத்திரிகைக்கு அவர் கூறினார் .அதை கடந்தவாரம் அந்த பத்திரிகையே மீண்டும் சுட்டிக்காட்டியிருந்தது.

அதேவேளை,   தமிழ்நாட்டில் விடுதலை புலிகளையும் பிரபாகரனையும் மையப்படுத்திய அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற அரசியல்வாதிகளில் முக்கியமான இருவரான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோவும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் நெடுமாறன் வெளியிட்ட தகவல்களுடன் உடன்படவில்லை.

தமிழ் தேசிய இயக்கத் தலைவர் கூறிய தகவல்களை தனக்கு இருக்கக்கூடிய தொடர்புகள் மூலமாக உறுதிசெய்யமுடியவில்லை என்று வைகோ கூறினார்.

கடந்த வருடம் நவம்பரில் லண்டனில் இருந்து தொலைபேசிமூலம் தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இதே போன்று அறிக்கையொன்றை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் தன்னுடன் அண்ணன் (பிரபாகரன் ) தொடர்புகொண்டு கேட்கட்டும்,அதற்கு பிறகு  அறிக்கையை வெளியிடுவதாக தான் பதிலளித்ததாகவும் சீமான் கூறியிருக்கிறார்.

போர்க்களத்தில் தமிழ் மக்களை கைவிட்டு தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொண்டு தப்பியோடுகின்ற கோழை அல்ல பிரபாகரன் என்றும் சீமான் சொன்னார்.

நெடுமாறனின் அறிவிப்பு குறித்து இந்திய மத்திய அரசாங்கத்திடமிருந்தோ அல்லது தமிழ்நாடு அரசாங்கத்திடமிருந்தோ இந்த பத்தி எழுதப்பட்டுக்கொண்டிருந்த தருணம் வரை பிரதிபலிப்பு எதுவும் வெளியாகியிருக்கவில்லை.

ஆனால், இந்திய ஊடகங்கள் இதற்கு பெருமுக்கியத்துவம் கொடுப்பதையும் அரசியல் அரங்கிலும் ஆய்வாளர்கள் மத்தியிலும் பெருமளவில் வாதப்பிரதிவாதங்கள் மூண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

நெடுமாறனின் அறிவிப்பு குறித்து தமிழ்நாடு அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும் என்று அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணியின் தலைவரான மனிந்தர்ஜீத் சிங் பிட்டா திருமலையில் செய்தியாளர்கள் மகாநாடொன்றில் வைத்து கேட்டதாக ‘ டெக்கான் ஹெரால்ட் ‘ பத்திரிகை வியாழக்கிழமை செய்தி வெளியிட்டது.

இந்த விவகாரத்தை இந்திய மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறிய முன்னைய சந்தர்ப்பங்களில் கொடுக்காத முக்கியத்துவத்தை இத்தடவை இந்தியாவின் பிரதான பத்திரிகைகளும் ஏனைய ஊடகங்களும் கொடுப்பது குறிப்பாக  கவனிக்கவேண்டிய  அம்சமாகும்.

எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவரின் அறிவிப்பை இலங்கை இராணுவம் உடனடியாகவே  நிராகரித்திருக்கிறது.

2009 மே 18 பிரபாகரன் இறந்ததை அன்றைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மரபணு சோதனை மூலம் உறுதிப்படுத்தியதாகவும்   அந்த தகவலை அன்றைய இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு ஜனாதிபதி மகிந்த தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதாகவும்  வெளியான செய்திகளையும் விடுதலை புலிகளின் சர்வதேச உறவுகள் பிரிவின் தலைவராக இருந்த செல்வராசா பத்மநாதன் (கே.பி.) 2009 மே 24 பி.பி.சி.க்கு வழங்கிய நேர்காணலில் ” எமது இணையற்ற தலைவர் வீரமரணமடைந்துவிட்டார் ” என்று கூறியதையும் அரசியல் ஆய்வாளர்களும் ஊடகங்களும் கடந்தவாரம் நினைவூட்டின.

 

தன்னால் வெளியிடப்பட்ட தகவல்களுக்கு ‘ சான்றாக ‘ நெடுமாறன் விடுதலை புலிகளின் தலைவரின் குடும்ப உறுப்பினர்களுடன் தான்  வைத்திருக்கும் தொடர்பையே முன்வைத்திருக்கிறார்.

அத்துடன் அவர் பிரபாகரன் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு தற்போதைய சர்வதேச நிலைவரமும் இலங்கையில் மக்கள் கிளர்ச்சியில் கடந்த வருடம் ராஜபக்ச ஆட்சி வீழ்த்தப்பட்டதற்கு பின்னரான சூழ்நிலையும் பொருத்தமான தருணம் என்று கூறிய கருத்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

அத்துடன் தற்போதைய அறிவிப்பும் முன்னைய அறிவிப்புக்களைப் போன்று இருந்ததே தவிர, பிரபாகரனின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறியதற்கு புறம்பாக வெளியுலகம் நம்பக்கூடியதாக புதிய தகவல்கள் எதையும் நெடுமாறன் வெளியிடவில்லை.

முன்னைய சந்தர்ப்பங்களை விடவும் இந்த தடவை ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் நெடுமாறனின் அறிவிப்பின் பின்னணியில் அரசியல் காரணிகள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை இயல்பாகவே எழுப்புகிறது.

தமிழ்நாடு  மாநில அரசியல் காரணிகள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டதற்கு அவ்வாறு எதுவும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக  மறுத்ததாக இந்து ஆங்கிலப் பத்திரிகையின் இணை ஆசிரியர் தி.இராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும்  நெடுமாறன் அடுத்து வரக்கூடிய எந்தவொரு தேர்தலையும் மனதிற்கொண்டு இந்த அறிவிப்பை செய்திருக்க வாய்ப்பில்லை.

வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கடசியின் தலைவர் வேல்முருகன் போன்ற ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் நேச அணியினருடன் சேர்ந்து தஞ்சாவூர் செய்தியாளர்கள் மகாநாட்டை நடத்தி தனது அறிவிப்புக்கு ஒரு பரந்த ஏற்புடைமையை தோற்றுவிப்பதற்கு நெடுமாறன் மேற்கொண்ட முயற்சி இறுதி நேரத்தில் பயனளிக்கவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த நிகழ்வுப்போக்குகள் எல்லாம் இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழர் அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது முக்கியமான ஒரு கேள்வி.

வடக்கு,கிழக்கு பகுதிகளில் இராணுவமயத்தை குறைக்கவேண்டும் என்ற தமிழ் மக்களின் இடையறாத கோரிக்கைக்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம் என்பது பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது.

அதேவேளை, அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தபோவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்த அறிவிப்புக்கு எதிராக கிளர்ந்தெழுந்திருக்கும் சிங்கள தேசியவாத சக்திகளுக்கும் மகாசங்கத்துக்கும் ‘தீனி’ போட்டதாகவும் இது அமைந்திருக்கிறது எனலாம்.

ராஜபக்சாக்களும் மீண்டும் சிங்கள மக்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை வளர்க்க புதிய சூழ்நிலையைப் பயன்படுத்த முயற்சிப்பார்கள்.

நாட்டைப் பாதுகாக்க மீண்டும் தாங்களுக்கே அதிகாரத்தை தரவேண்டும் என்று மககளை அவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

முக்கியமான தமிழ் அரசியல்வாதியொருவரிடம் கருத்து கேட்டபோது , ” காணாமல்போன எவராவது அல்லது இறந்துவிட்டதாக நம்பப்பட்ட எவராவது உயிருடன் திரும்பிவந்தால் மகிழ்ச்சியடைவதுதானே மனிதத்தன்மை ” என்று மாத்திரம் கூறினார்.

இறுதியாக, நெடுமாறன் கூறியதை நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள். பிரபாகரன் ஒரு நாள் உயிருடன் திரும்பிவந்தால் என்ன செய்வீர்கள்? என்று சீமானிடம் செய்தியாளர் கேட்டபோது அவர் சுவாரஸ்யமான பதிலொன்றைச் சொன்னார் ;

” கடவுள் இல்லை என்ற கொள்கையுடைய பெரியாரிடம் கடவுள் ஒரு நாள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ‘ சரி வந்திட்டார் என்று சொல்லிவிட்டுப் போவோம் என்று அவர் பதிலளித்தார்.”

-வீரகத்தி தனபாலசிங்கம்-

Share.
Leave A Reply