திருடிய பொருள்களையெல்லாம் ஆங்காங்கே மூட்டைகட்டி வைத்துவிட்டு, மதுபோதையில் பெட்ரூம் மெத்தையில் படுத்துத் தூங்கிய திருடன், காலையில் பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கியிருக்கிறார்.

திரைப்படம் ஒன்றின் காமெடி சீனில், வடிவேல் ஒரு வீட்டில் திருடப்போகும்போது, போலீஸ் ரவுண்ட்டப் செய்துவிடும். அதன் பிறகுதான் தெரியும், `அண்ணனின் 100-வது திருட்டு’ என்று சக காமெடியர்கள் பேனர் வைத்திருப்பது. சிரித்தே வயிறு வலிக்கும் அந்த காமெடி சீனை மிஞ்சும் வகையில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஒரு நிஜ சம்பவம் நடந்திருக்கிறது.

இந்தச் சம்பவத்தில், திருடிய பொருள்களையெல்லாம் ஆங்காங்கே மூட்டை கட்டிவைத்துவிட்டு, மதுபோதையில் பெட்ரூம் மெத்தையில் படுத்து தூங்கிய திருடன், காலையில் பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கியிருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்.

காரைக்குடியில், குடும்பத்துடன் வசித்துவரும் இவர், விடுமுறை மற்றும் திருவிழா நாள்களில் நடுவிக்கோட்டை வீட்டுக்கு வந்து செல்கிறார்.

அதனால், அந்த வீட்டில் ஃபர்னிச்சர் பொருள்களை மட்டும் வைத்திருந்திருக்கிறார். இந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் பாண்டியன் வீட்டின் ஓடு பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, வீட்டின் உரிமையாளருக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர்.

அதையடுத்து, வீட்டின் உரிமையாளர் பாண்டியன், நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, போலீஸாரும் விரைந்து வந்திருக்கின்றனர்.

உள்ளே செனறு பார்த்தபோதுதான் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. வீட்டைப் பிரித்து உள்ளே சென்ற அந்தத் திருடன் ஹாயாகப் படுத்து உறங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.

தட்டி எழுப்பி விசாரித்தபோது, சைகையிலேயே `நீங்க எல்லாம் யாரு, விடிஞ்சுருச்சா?’ என்று கேட்டு போலீஸாருக்கே அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

உடனே, வீட்டு உரிமையாளரின் உறவினர்கள் அந்தத் திருடனுக்கு தர்ம அடி கொடுத்திருக்கின்றனர்.

போலீஸாரின் தயவால் அவர்களிடமிருந்து தப்பித்திருக்கிறார் திருடன். உடனே, போலீஸார் திருடனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

விசாரணையில், அந்தத் திருடன் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர நாதன் என்பது தெரியவந்திருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் நம்மிடம் பேசுகையில், “ஏற்கெனவே ஒரு திருட்டு வழக்கில் சிறைக்குச் சென்று, திருப்பத்தூரிலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்தபோதுதான், ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு வீட்டுக்குள் இறங்கியிருக்கிறார் சுதந்திர நாதன்.

பூட்டிக்கிடந்த வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கிய சுதந்திர நாதன், அங்கிருந்த குத்துவிளக்கு, மின்விசிறி உள்ளிட்ட பண்ட பாத்திரங்களை பத்திரமாக மூட்டை கட்டிவைத்துவிட்டு, நள்ளிரவில் கிளம்பலாம் என்று நினைத்து மது அருந்தியிருக்கிறார்.

மது அருந்திவிட்டு, பொருள்களை மூட்டை கட்டிவிட்டு ஏன் கிளம்பவில்லை என்று கேட்டபோது, `கட்டில் மெத்தையில் படுத்திருந்து நள்ளிரவுக்கு மேல போகலாம்னு நெனைச்சேன்.

ஹெட்போனில் கொஞ்ச நேரம் இளையராஜா பாடல்களைக் கேட்டுக்கிட்டே அயர்ந்து உறங்கிட்டேன்’ என்று கூலாகக் கூறினார்” என்றனர்.

Share.
Leave A Reply