பாகிஸ்தானில் பயங்கரவாதத்தின் வளர்ச்சி என்பது உள்நாட்டு மற்றும் பூகோள அரசியல் காரணிகளில் வேரூன்றிய ஒரு பன்முகத்தன்மை கொண்ட சிக்கலான பிரச்சினையாகும். பயங்கரவாதத்துடன் பாகிஸ்தான் கொண்டுள்ள நீண்ட மற்றும் சிக்கலான உறவு அந்நாட்டை நாளுக்கு நாள் அழிவின் எல்லைக்கு தள்ளி வருகிறது.

உலகளவில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முக்கிய இடத்தை பாகிஸ்தான் பெற்றிருக்கிறது.

ஏகாதிபத்திய சக்திகளின் பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் தேவைகளுக்கேற்றவாறு அந்த நாட்டில் தீவிரவாதம் அந்நாட்டு மதவாதிகளாலும், அரசியல்வாதிகளாலும் திட்டமிட்டு பரப்பப்பட்டது.

பல தசாப்தங்களாக புரையோடிப்யோயுள்ள பயங்கரவாதத்தின் விளைவை அந்த நாடு அணுவணுவாக இன்று அனுபவித்து வருகிறது.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக யுத்தம் ஒன்றுக்குள் சிக்கியிருக்கும் ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

ஆப்கானிஸ்தான் போா் தலிபான், அல்-காயிதா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத குழுக்களின் உருவாக்கத்திற்கு துணைபோயின.

பாகிஸ்தானின் தீவிரவாதத்தின் மீதான ஆதரவு நிலைப்பாடு இந்த விச சக்திகள் பிராந்தியத்தில் வளா்வதற்கும், காலூன்றுவதற்கும் ஏதுவாய் அமைந்தன.

இன்று உலகின் பல நாடுகளில் இடம்பெற்றுவரும் தீவிரவாத, பயங்கரவாத செயற்பாடுகளின் ஒற்றைப்புள்ளியாக பாகிஸ்தானில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த மத தீவிரவாதமே இருந்து வருகிறது.

தனது தேசத்தின் துளைகள் நிறைந்த எல்லைகள் ஊடாகவே இந்த தீவிரவாதத்தை பாகிஸ்தான் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தததாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா வடிவமைத்த “புனிதப் போர்” அரசியல் நிகழ்ச்சி நிரல் மீது பாகிஸ்தான் காட்டிய அதீத ஈடுபாட்டின் விளைவு இன்று அந்த நாட்டின் எதிா்காலத்தையே கேள்விக் குறியாக்கியிருக்கிறது.

பாகிஸ்தானின் ஜனநாயக விழுமியங்களை அழித்து துவம்சம் செய்து கொண்டிருக்கும் மத தீவிரவாதம், அந்நாட்டுக்கு மட்டுமின்றி சர்வதேச சமூகத்திற்கும் அச்சுறுத்தல் விடுக்கும் ஒன்றாக மாறியிருக்கிறது.

தன்னால் வளா்க்கப்பட்ட இந்த தீவிரவாதத்தை தனது மண்ணில் இருந்து முழுமையாக ஒழிக்க பாகிஸ்தானால் இன்று வரை முடியாமல் போயிருக்கிறது.

அங்கு திட்டமிட்டு வளா்க்கப்பட்ட தீவிரவாதத்தின் வேர்கள் அந்நாட்டின் உள்நாட்டு மற்றும் பூகோள அரசியல், பொருளாதார சமூகப் பிரச்சினைகளால் பின்னிப்பிணைந்து இருப்பது இதற்குறிய காரணமாகும்..

1980களில் ஏகாதிபத்திய சக்திகளின் தேவைக்காக பாகிஸ்தானிலிருந்து ஊற்றெடுத்த இந்த மத தீவிரவாதம், உலகம் எதிா்கொண்டுள்ள மிப்பெரிய சவாலாக பாா்க்கப்படுகிறது. இந்த தீவிரவாதத்தால் பல ஆயிரக்கணக்கான உயிா்கள் காவுகொள்ளப்பட்டிருக்கின்றன.

பயங்கரவாதத்தின் பண்ணையாக பாா்க்கப்படும் பாகிஸ்தானில் பெஷாவா் நகரம், அழிவின் தடயங்களை தொடா்ந்தும் பதித்து வருகிறது.

அண்மையில் பெஷாவர் நகாில் பள்ளிவாசல் ஒன்றை இலக்கு வைத்து இடம்பெற்ற தாக்குதல் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

பாகிஸ்தானில் பயங்கரவாதம் உருவாக முக்கிய காரணங்களில் ஒன்றாக அந்நாட்டின் அரசியலும் மதவாத சிந்தனைகளும் காரணமாகியிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அதன் மூலோபாய இருப்பு இதற்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

1980களின் ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தான் மீது ரஷ்யா தொடுத்த ஆக்கிரமிப்பை அடிப்படையாகக் வைத்து ரஷ்ய – அமெரிக்க நாடுகளுக்கிடையிலான பனிப்போா் “புனிதப்போர்” என்ற போா்வையில் ஒரு பினாமி போராக வெடித்தது.

இந்த பினாமி போரை அந்த நாட்டிலுள்ள மதவாதக் கட்சிகள் அமெரிக்காவின் வழிகாட்டுதலுடன் மத்திய கிழக்கின் பெற்றோ(ல்) டொலா்களின் முதலீட்டுடன் மிகவும் நோ்த்தியாக வடிவமைத்தன.

முதலாளித்துவத்திற்கும் கம்யூனிஸத்திற்கும் இடையில் பல தசாப்தங்களாக இடம்பெற்று வந்த பனிப்போரை, ஓா் இஸ்லாமிய புனிதப் போராக வடிவமைத்து அமெரிக்காவும் அதன் அரசியல் நலன்களுக்கு சேவகம் புரிந்து வந்த பாகிஸ்தானின் அப்போதைய சியாஉல் ஹக் அரசாங்கமும், மதவாத சக்திகளும் உலகளவில் பிரசாரம் செய்து வந்தன.

இந்த பிரசாரத்தால் கவரப்பட்ட, பல நாடுகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது.

பயிற்சிகளையும் வழங்கியது. பாகிஸ்தானின் பெஷாவா் நகரம் தீவிரவாதத்தை வளா்த்தெடுக்கும் விளை நிலமாக மாறியது.

1980களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனை எதிர்த்துப் போராடும் இஸ்லாமிய குழுக்களின் கூட்டணியான முஜாஹிதீன்களுக்கு அமெரிக்கா ஆயுதங்களையும் நிதி உதவிகளையும் வழங்கியது.

அமெரிக்க ஆதரவு, போராளிக் குழுக்களை பாகிஸ்தானில் உருவாக்கவும், அவா்களுக்கு பயிற்சி வழங்கவும் உந்து சக்தியாக இது மாறியது.

தலிபான், அல்-காயிதா மற்றும் பிற தீவிரவாத குழுக்கள் உருவாக சாதகமானதொரு சந்தா்ப்பத்தை இது வழங்கியது.

அமெரிக்காவின் தேவைக்கேற்றவாறு, அதன் அரசியல் நலன் காக்கும் பாகிஸ்தானின் மதவாத சக்திகளால் உருவாக்கப்பட்ட இந்த தீவிரவாதம் பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல உலகின் பல நாடுகளுக்கும் பரவி அதிக அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.

பாகிஸ்தானின் இன்றைய அழிவுகளுக்கும், உலகம் எதிா்கொண்டுள்ள மத தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கும், அழிவுகளுக்கும், அந்த நாட்டின் ஆட்சியாளா்களும், மதவாத சக்திகளுமே காரண கா்த்தாக்களாக இருக்கினறனா்.

அது மட்டுமல்லாமல், ஆப்கான் விடுதலை என்ற பெயரில் பாகிஸ்தானில் கருக்கொண்ட இந்த போராட்டம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல்களையும் பதற்றங்களையும் அதிகப்படுத்தியும் வந்திருக்கிறது.

1990களில் பாகிஸ்தான் நாடு பயங்கரவாத அமைப்புகளின் தொட்டிலாக மாறியது. ஆப்கானிஸ்தான் போரை வடிவமைப்பதில் கணிசமான பங்கைக் கொண்டிருந்த பாகிஸ்தானின் உளவுத்துறை (ISI) தலிபான் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற இஸ்லாமிய குழுக்களுக்கு ஆதரவை வழங்கியது. இது பிராந்தியத்தில் அமைதியின்யையை உருவாக்க காரணமாகியது.

இந்த தீவிரவாத குழுக்களை பயன்படுத்தி இந்தியாவிற்கு சவால் விடும் செயற்பாடுகளுக்கும் உத்வேகம் அளிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் மற்றும் இந்தியாவில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வந்ததை மறுக்க முடியாது.

பாகிஸ்தான் அரசாங்கம் மீது சுமத்தப்படும் இந்தக் குற்றச்சாட்டுகளை அது மறுத்து வந்த போதிலும், பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரிப்பதற்கு பாகிஸ்தானின் செயற்பாடு பின்னணியில் இருந்து வருவதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.

இருப்பினும், தன்னால் வளா்த்தெடுக்கப்பட்ட பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த பல தசாப்தங்களாக, நாடு பல பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க கட்டிடங்கள், காவல் நிலையங்கள், பாடசாலைகள், பள்ளிவாசல்கள் மற்றும் சந்தைகள் என பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

பாகிஸ்தானில் தீவிரவாதம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிரிழப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்தையும் சமூக, ஜனநாயக கட்டமைப்பையும் சீர்குலைத்துள்ளது.

ஒரு காலத்தில் குறிப்பிடத்தக்க வருவாய் ஆதாரமாக இருந்த சுற்றுலாத்துறை, பாதுகாப்புக் காரணங்களால் வெகுவாகக் குறைந்துள்ளது.

பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட தீவிரவாதத்தின் எழுச்சி அந்நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் இருப்பையும் கேள்விக் குறியாக்கியிருக்கிறது. சிறுபான்மை சமூகங்கள் மீது வெறுப்பும், வன்முறைகளும் தூண்டி விடப்படுவதற்கு இந்த மத தீவிரவாதம் காரணமாக அமைந்திருக்கிறது.

பாகிஸ்தானில் தீவிரவாதம் அதிகரித்து வருவதற்கு பொருளாதாரப் பிரச்னைகளும் முக்கியக் காரணிகளாக உள்ளன.

கல்வியறிவின்மை, வறுமை, வேலையின்மை மற்றும் சமத்துவமின்மை என்பன பாகிஸ்தானிய சமூகத்தில் பரவலாக உள்ளன. இந்த பிரச்சினைகள் பெரும்பாலும் இளைஞர்களை தீவிரவாத குழுக்களில் சேர வழிவகுத்திருக்கின்றன.

பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியலும், சமூக அமைப்பும் தீவிரவாதத்தை வளா்ப்பதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறது. பாகிஸ்தானின் அரசியல் ஸ்திரமின்மை என்பது வரலாற்று படைத்த ஒரு விவகாரமாகும்.

அங்கு அடிக்கடி இடம்பெறும் ஆட்சி மாற்றங்களும், இராணுவப் புரட்சிகளும், பலவீனமான ஆட்சியும், ஊழலும் தீவிரவாதக் குழுக்கள் வளர வளமான நிலத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளன.

பொருளாதாரத்தை கட்டமைப்பதிலுள்ள வாய்ப்புகள் ஒழுங்காக இல்லாமை, வறுமை ஆகியவை தீவிரவாதத்தின் எழுச்சிக்கு அதிகம் பங்களித்துள்ளன.

ஏற்கனவே கூறியது போல, சோவியத்-ஆப்கான் போரின் தேவைக்காக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் அரசியல் மற்றும் மதவாத சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பயங்கரவாதம் அதன் வேர்களை அந்த நாட்டில் ஆழமாகவே பதித்திருக்கிறது.

இன்று பாகிஸ்தானையும் தாண்டி வேறு நாடுகளுக்கும் பரவியுள்ள தீவிரவாதம், பல நாடுகளையும் பதம் பார்த்து அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.

தன்னால் வளா்த்தெடுக்கப்பட்ட தீவிரவாத விஷ விருட்சத்தை வெட்டி வீழ்த்தி அழிக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்கும் இதர சக்திகளுக்கும் இருக்கிறது.

பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாட்டை வெளிப்படையாகவும், இதயசுத்தியோடும், நோ்மையாகவும் தொடா்வது ஒன்றே தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தானுக்கு இருக்கும் ஒரே வழியாகும்.

Share.
Leave A Reply