உலக வங்கியை வழிநடத்த அமெரிக்கா சார்பில் அமெரிக்க இந்தியரான அஜய் பங்காவை அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.

காலநிலை மாற்றத்தை கையாள்வதில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வங்கியின் மீது அமெரிக்காவின் அழுத்தம் அதிகரித்து வரும் சூழலில் இந்த பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக, கிரெடிட் கார்டு ஜாம்பவனாக வர்ணிக்கப்படும் மாஸ்டர் கார்டு நிறுவனத்தை பல ஆண்டுகள் தலைமை தாங்கி வழி நடத்திய பெருமைக்குரிய அஜய் பங்கா தற்போது தனியார் பங்கு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

வங்கியை தனியார் துறையுடன் இணைந்து தனது இலக்குகளை நோக்கி பயணிக்க வைப்பதில் அவர் அனுபவம் வாய்ந்தவர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் பரிந்துரையாக அஜய் பங்காவின் பெயரை ஜோ பைடன் பரிந்துரைத்தாலும், உலக வங்கியின் அடுத்த தலைவரை அதிகாரப்பூர்வமாக நியமிப்பது என்பது வங்கியின் நிர்வாகத்திற்கு உட்பட்டது ஆகும்.

புதனன்று, வங்கியானது மூன்று வேட்பாளர்களின் இறுதிப்பட்டியலை நேர்காணல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், மே மாத தொடக்கத்தில் புதிய தலைவரின் பெயரை அறிவிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் கூறியது.

மேலும், தலைவர் பதவிக்கு பெண்களின் பெயரை பரிந்துரைக்க அதிகம் ஊக்கமளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வேறு நாடுகளும் தலைவர் பதவிக்கு நபர்களை பரிந்துரைக்குமா என்பது தெரியவில்லை.

 

உலக வங்கியின் மிகப் பெரிய பங்குதாரரான அமெரிக்கா, ஒவ்வொரு ஆண்டும் நாடுகளுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை கடனாக வழங்கும் இந்த நிறுவனத்தை வழிநடத்தும் நபரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை வழக்கமாகக் கொண்டுள்ளது.

சரியான நோக்கங்களை அமைத்து நல்லவைக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக உலக வங்கி சேவையாற்றுவதை பார்க்க தான் விரும்புவதாக அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் யெல்லன் கூறியுள்ளார்.

மேலும், அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் லாப நோக்கற்ற நிறுவனங்களுக்கிடையில் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான அஜய் பங்காவின் சாதனையை சுட்டிக்காட்டி, அவர் அந்த பொறுப்பை ஏற்க “தனித்துவமாக” தயாராக இருப்பதாக ஜேனட் யெல்லன் கூறினார்.
யார் இந்த அஜய் பங்கா?

அமெக்க குடியுரிமை பெற்றவரான அஜய் பங்கா, தனது பணி வாழ்வை இந்தியாவில் தொடங்கினார். இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர்.

மாஸ்டர் கார்டு நிறுவனத்தில் இணைவதற்கு முன்பாக நெஸ்ட்லே, சிட்டி குரூப் ஆகியவற்றிலும் அவர் இணைந்து பணியாற்றியுள்ளார்.

மாஸ்டர் கார்டு நிறுவனத்தில் இருந்து 2021ஆம் ஆண்டில் விலகிய அஜய் பங்கா தற்போது, ஜெனரல் அட்லாண்டிக் என்னும் தனியார் பங்கு நிறுவனத்தில் துணைத் தலைவராக உள்ளார்.

அங்கு அவர் அதன் $3.5 பில்லியன் மதிப்பிலான காலநிலை நிதியின் ஆலோசனைக் குழுவில் உள்ளார்.

அவர் வெள்ளை மாளிகையுடன் இணைந்து மத்திய அமெரிக்காவிற்கான கூட்டு என்ற திட்டத்தின் துணை தலைவராகவும் பணியாற்றியுள்ளார், இது அமெரிக்காவில் தனியார் துறை முதலீட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சியாகும்.

சர்வதேச நிறுவனங்களை எப்போதும் விமர்சித்துவரும் குடியரசு கட்சியினர் உள்ளிட்ட அமெரிக்க நாடாளுமன்றத்தில், வங்கியின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வணிகத்தில் அஜய் பங்காவுக்கு உள்ள பல ஆண்டுகள் அனுபவம் உதவும் என்று உலகளாவிய மேம்பாட்டு மையத்தின் நிர்வாக துணைத் தலைவர் அமெண்டா கிளாஸ்மென் கூறுகிறார்.

அதேநேரத்தில், அஜய் பங்காவிற்கு அரசாங்கம் தொடர்பாகவும் வங்கியின் அடிப்படையான வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும் குறைவான அனுபவங்களே உள்ளதால் அவர் சரியான தேர்வுதானா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

அஜய் பங்கா

“வங்கி எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக தனது பார்வை குறித்து அஜய் பங்கா பேசுவதை கேட்க ஆர்வமாக உள்ளேன்” என்று அமெண்டா கூறினார்.

உலக வங்கியின் அடுத்த தலைவராக யார் பொறுப்பேற்றாலும் கடனில் தவிக்கும் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளின் உடனடி நிதித் தேவைகளை சமாளிப்பது, காலநிலை மாற்றம், சர்வதேச மோதல்கள் மற்றும் பெருந்தொற்று அபாயங்களை சமாளிப்பது போன்ற சவால்களை சந்தித்தாக வேண்டும்.

உலக வங்கியின் இந்த அடுத்த கட்ட உத்தியில் வாழ்வா சாவா என்ற நிலையும் உள்ளது என்றும் அமெண்டா கிளாஸ்மென் கூறுகிறார்.

“உண்மையிலேயே உலக வங்கி பொருத்தமானதுதான் என்று கருதப்படவோ அல்லது தேவையில்லாதது என்று கருதி ஓரங்கப்படவோ கூடிய நேரம் இது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

“வங்கி வளர்ச்சியடைய வேண்டும் என்பதில் பொதுவான ஒருமித்த கருத்து இருந்தாலும், எப்படி என்பது தொடர்பாக அனைவரிடத்திலும் குறைவான உடன்பாடே உள்ளது, மேலும் செய்யப்பட வேண்டிய செயல்கள் பற்றிய கவலையும் உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

உலக வங்கியின் தற்போதைய தலைவராக டேவிட் மால்பஸ் உள்ளார். இவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் மூலம் பரிந்துரை செய்யப்பட்டவர்.

5 ஆண்டுகள் அவருக்கு பதவி உள்ள நிலையில், ஓராண்டுக்கு முன்பாகவே, அதாவது இந்தாண்டு ஜூன் மாதத்தில் தான் தலைவர் பதவியில் இருந்து விலகக் போவதாக அவர் அறிவித்திருந்தார்.

ஒருவேளை, ஜோ பைடனின் பரிந்துரை ஏற்கப்படும் பட்சத்தில் டேவிட் மால்பஸ் இடத்தை அஜய் பங்கா பூர்த்தி செய்வார்.

காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்ய வங்கியின் வளங்களை செலவிடுவதில் டேவிட் மால்பஸ் மெதுவாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் விமர்சிக்கப்படுகிறார்.

புதைபடிவ எரிபொருட்கள் காலநிலை மாற்றத்தை உண்டாக்குகிறதா என்று தனக்குத் தெரியாது என்று கடந்த ஆண்டு அவர் கூறியது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த கருத்துக்காக அவர் வெள்ளை மாளிகையால் பகிரங்கமாக கண்டிக்கப்பட்டார். மேலும், தனது கருத்து தொடர்பாக டேவிட் மால்பஸ் மன்னிப்பும் கேட்டிருந்தார்.

Share.
Leave A Reply