பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் சகோதரியை காதலித்து கரம் பிடித்திருக்கிறார். இது அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரமோத் தாஸ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுக்லா தேவி என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில், சுக்லா தேவி தனது கணவரின் சகோதரியான சோனி தேவி என்பவரின் மீது காதல் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், சோனியும் சுக்லா தேவியும் காதலித்து வந்ததாகவும் பின்னர் இருவரும் தனியாக குடியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில், சோனி தேவியுடன் வசித்து வந்த சுக்லா தேவி ஆண்கள் போல உடை அணிவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் அவர் தனது பெயரை சூரஜ் குமார் என மாற்றிக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஒரு பக்கம் இருக்க சுக்லா தேவி மற்றும் சோனி தேவியின் இந்த முடிவுக்கு பிரமோத் தாஸ் சம்மதமும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் பேசுகையில்,”என் மனைவி மகிழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில் அது எனக்கும் நிகழ்ச்சியை கொடுக்கும்” என சொல்லி இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் சோனி தேவியின் சகோதரர்கள் தனது வீட்டிற்கு வந்து சோனி தேவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று இருப்பதாக சுக்லா தேவி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.
ரொசேரா காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கிருஷ்ண பிரசாத் இது குறித்து பேசுகையில்,”இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பெண் காவல் ஆய்வாளர் இந்த வழக்கை கையாண்டு வருகிறார்” என்றார்.
இதனிடையே திருமணத்திற்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்ததாகவும், அன்பு கொண்ட மனம் இருந்தால் வாழ்க்கைக்கு போதும் என தான் நினைப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் சுக்லா தேவி.
மேலும். தனது இந்த போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவேன் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.