குஜராத்தின் ஆமதாபாத் அருகே கன்பா கிராமத்தில் விறகு வெட்டிய இரு பெண்கள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர்.
ஆற்றுப் படுகைகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டபோதும், சுற்றியிருந்த புதர்களில் பிறரின் காலடிச் சுவடுகள் தென்படவில்லை.
மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் ஆய்விலும் எந்த தடயமும் சிக்கவில்லை. எனவே தொழில்நுட்ப ஆய்வு சாத்தியமற்றுப் போனது.
வழக்கமாக குளித்த ஐந்தே நிமிடங்களில் குளித்தவரை கொலை நடந்த அன்று ஒரு மணி நேரம் குளித்தார். அதுவே சந்தேகத்தை வலுவாக்கியது.
“ஆமதாபாத்தின் கன்பா கிராமத்தில் நடந்த இரண்டு பெண்களின் கொலைக்கும் தடயம் கிடைக்கவில்லை. ஒரு வார கடின உழைப்பின் முடிவில் பண்ணை வேலையாள் ஒருவரும் மரம் வெட்ட வந்த பெண்களும் ஒரே இடத்தில் வேலை செய்வது தெரிய வந்த பிறகு துப்பு துலங்கியது.”
“தொழில்நுட்ப தடயங்கள் கிடைக்காதால் மனித உளவு அடிப்படையில் புலனாய்வை தீவிரப்படுத்தினோம்.
வழக்கமாக ஐந்து நிமிடத்தில் குளித்து முடிக்கும் பண்ணை வேலையாள், சம்பவ நாளில் ஒரு மணி நேரம் குளிக்க நேரம் எடுத்துக் கொண்டது தெரிய வந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தியபோது குற்றத்தை ஒப்புக்கொண்டார். உடலுறவு செய்ய தயாராக இல்லாததால் அந்த இரு பெண்களை கொன்றிருக்கிறார்.”
இந்த வார்த்தைகள் ஆமதாபாத் குற்றப்பிரிவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சிங். சிசோடியா தெரிவித்தவை. எப்படி நடந்தது இந்த இரட்டைக் கொலைகள்? துப்பு துலக்கியது எப்படி?
ஆமதாபாத் அருகே கன்பா கிராமத்தில் உள்ள பண்ணை நிலப் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு விறகு வெட்ட வந்த இரண்டு பெண்கள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.
ஆற்றங்கரையில் இருந்து அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.
சுற்றிலும் உள்ள புதர்களில் ஆள் வந்து போனதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. கிடைத்த அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவை கால்நடை வளர்ப்பவர்களுடையது என்று மட்டும் தெரியவந்தது என்று சம்பவத்தை விசாரித்த உதவி ஆய்வாளர் சிசோடியா தெரிவித்தார்.
மேலும் அவர், “சம்பவ பகுதிக்கு மோப்ப நாய்களை வரவழைத்து தடயம் கிடைக்கிறதா என பார்த்தோம். தடயவியல் நிபுணர்களும் வந்து பார்த்தனர்.
ஆனாலும் அங்குள்ள சூழ்நிலையில் தொழில்நுட்ப ஆய்வு அடிப்படையில் தடயம் கிடைப்பது சாத்தியமற்றுப் போனது. அதனால் இறந்தவர்களையும் அடையாளம் காண முடியவில்லை,” என்கிறார் அவர்.
மனித உளவை நம்ப வேண்டிய கட்டாயம்
இதேவேளை, காந்திநகரின் தபோடா கிராமத்திலும், சசாரியில் உள்ள குமா கிராமத்திலும் கீதாபென் தாக்கூர் மற்றும் மங்கிபென் தாக்கூர் ஆகியோரை காணவில்லை என தெரிய வந்தது. அவர்கள் தான் இறந்து போனவர்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து மனித நுண்ணறிவு ஆற்றலை நம்பியே இந்த இரட்டை கொலை வழக்குகளில் துப்பு துலக்கும் நிலை போலீஸுக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த இரண்டு பெண்களும் எங்கிருந்து எத்தனை மணிக்கு புறப்பட்டனர் போன்ற விவரங்களை அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், ஆற்றுப் படுகைகளில் விறகு பறிக்கச் செல்பவர்கள் மற்றும் கால்நடைகளை மேய்ச்சலுக்குச் செல்பவர்களிடம் போலீஸார் விசாரித்தனர்.
பிறகு நடந்தவற்றை காவல்துறை உதவி ஆய்வாளர் விவரித்தார்.
“இரண்டு வாரங்களுக்குப் பிறகு, புலவாடி கிராமத்தில் உள்ள மேய்ச்சல் நிலத்திற்கு அதிகாலையில் விறகு வெட்ட இரண்டு பெண்களும் சென்றதாக கிராமவாசிகள் சொன்னார்கள்.
அங்குள்ள பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த ரோஹித் சுனாரா என்பவர் அந்த பகுதியில் மரம் வெட்டுவதற்கு ஆட்சேபம் தெரிவித்து வந்ததாகவும் அதன் பிறகும் அந்த பெண்கள் மரம் வெட்டுவதை தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ரோஹித் சுனாரா, ‘மரம் வெட்ட அனுமதிக்கிறேன். அதற்கு ஈடாக என்னுடன் உடல் உறவு கொள்ள வேண்டும்’ என கூறியுள்ளார். இதற்கு உடன்படாத கீதாபென் அங்கிருந்து தப்பி வந்து கிராம மக்களிடம் கூறியதும் விசாரணையில் தெரிய வந்தது.
ரோகித் சுனாரா பற்றி உள்ளூரில் விசாரித்தோம். அந்த நபர் ஏற்கெனவே பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர் என்பதும் அவருடைய வீட்டில் இருந்தே விரட்டப்பட்டதும் தெரியவந்தது.
பிறகு அவர் ரோஹித் லம்பா கிராமத்தில் கூலி வேலை செய்தார். அங்கும் சில பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதால் அவ்வூர் மக்களால் கிராமத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டார்.
ரோஹித் தனது மைத்துனரின் மனைவியை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதாக அவரது உறவினர் ஒருவர் எங்களிடம் கூறினார்.
அந்த சம்பவம் தொடர்பாக ரோஹித் தன்னை திட்டிய தந்தையின் காதை அறுத்து காயப்படுத்தினார் என்பதும் தெரிய வந்தது,” என்று காவல்துறை அதிகாரி கூறினார்.
ரோஹித் போதைக்கு அடிமையானவர். குடி போதையில் பல நேரங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார் என அருேகே உள்ள விவசாய தொழிலாளர்கள் தெரிவித்தனர். சில நேரங்களில் பண தகராறு கூட நடந்ததுண்டு.
ரோஹித் பண்ணையில் உள்ள ஆழ்துறைக் கிணற்றில் வழக்கமாக இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரை குளிப்பார். அதற்கு மேல் இருக்க மாட்டார்.
ஆனால் கொலை நடந்த நாளில், குளிர் அதிகமாக இருந்தது. அந்த குளிரிலும் ரோஹித் ஒரு மணி நேரம் வரை கிணற்றுக்குள்ளேயே இருந்துள்ளார்.
பொதுவாக விறகு வெட்ட வரும் பெண்கள் அந்த கிணற்றுப் பகுதியில்தான் துணி துவைப்பர். கொலை நடந்த நாளிலும் அந்த பெண்கள் துணி துவைப்பதை மக்கள் பார்த்துள்ளனர்.
அதே நாளில் ரோஹித்தின் வேட்டியில் ரத்தக்கறை இருந்ததாக ஒரு பண்ணை தொழிலாளி போலீஸிடம் கூறவே, அது பற்றி அவரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். ஆனால், அவர், காரி ஆற்றில் முயல்களை வேட்டையாடும்போது ஏற்பட்ட கறை அது என கூறி சமாளித்தார்.
இருப்பினும், அவர் சொன்ன இடத்தில் முயல் கொல்லப்பட்டதற்கான தடயம் இல்லை.
அதனால் ரோஹித் மீது சந்தேகம் வலுத்தது. அதன் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார், முதல்கட்ட விசாரணையில் ரோஹித் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று காவல் அதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து ரோஹித் ஆமதாபாத் குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பான தகவல்களும் தெரிய வந்தன.
அதன் விவரம்:
“நான் பல பெண்களை மிரட்டி உடலுறவு வைத்துள்ளேன். ஒரு பெண் என் பேச்சை கேட்கவில்லை என்றால், அவளை விறகு வெட்ட அனுமதிக்க மாட்டேன்” என்று ரோஹித் கூறினார்.
மேலும், “நான் எனது மைத்துனரின் மனைவியுடன் உடலுறவு கொள்ள முயன்றேன். அவர் மறுத்ததால் அவரை தாக்கினேன். இந்த செயலுக்காக என் மீது பஞ்சாயத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. அன்றைய தினம் என் தந்தை என்னைத் திட்டியதால் அவருடைய காதை அறுத்தேன்.”
“ஒருமுறை கீதா பென்னை உடலுறவு கொள்ள அழைத்தேன். ஆனால், அவர் அது பற்றி கிராம மக்களிடம் புகார் சொன்னார்.
அதனால் நான் கோபமடைந்து அவரை பயமுறுத்த முயன்றேன். இதனால் அங்கிருந்து அவர் பயந்து ஓடிவிடுவார் என நினைத்தேன். ஆனால், என் எதிரிலேயே சவால் விடும் வகையில் இருந்ததால் அவரை கொன்றேன்.”
அப்போது மங்கிபென் கீதா நான் தாக்குவதைப் பார்த்து விட்டார். அதனால் அவரையும் கொன்றேன்.
இரண்டு வாரங்களாக நான் பிடிபடவில்லை. கிராமத்தில் போலீஸ் திரிவதால் நான் சௌராஷ்டிராவுக்கு ஓட விரும்பினேன். எனது 15 நாள் சம்பளம் கிடைத்ததும் ஓடி விடலாம் என நினைத்தேன். ஆனால் அதற்கு முன்பே பிடிபட்டேன்,” என்று ரோஹித் போலீஸிடம் கூறியதாக தெரிய வந்துள்ளது.
பெண்களை அவர்களின் விருப்பமின்றி கட்டாய உறவுக்கு அழைக்கும் இந்த போக்கு குறித்து பிரபல மனநல மருத்துவரான டாக்டர் ஜோதிக் பச்சேச்சிடம் பிபிசி பேசியது.
“அத்தகையவர்களின் மனநிலை என்ன விலை கொடுத்தாவது தங்கள் பாலுறவு ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
ஆசைகள் நிறைவேறவில்லை என்றால் வன்முறையில் ஈடுபடும் நிலைக்கும் அவர்கள் தூண்டப்படுவார்கள்.
பலவீனமானவர்களை அடக்கி ஆளுவார்கள். இதனால் அவர்களின் தைரியம் வெளிப்படுகிறது.
வறிய நிலை பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படும் போது, ஆண்களை விட பெண்களே அதிகமாக குற்றம்சாட்டப்படும் நிலை உள்ளது.
அதனால் அவர்கள் அமைதியாக இருந்து விடுவதால் இதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது,” என்று மருத்துவர் கூறினார்.
“குஜராத்தில் ஒரு சில கிராமங்களில், குறிப்பிட்ட சாதியினர் குற்றம் செய்தால் தவறு செய்தவருக்கு பஞ்சாயத்து அபராதம் விதிப்பது வழக்கம்.
எனவே அத்தகைய சம்பவங்களில் போலீசார் வழக்குகளை பதிவு செய்வதில்லை. அதனால் அவர்கள் சட்டத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை,” என்றும் மருத்துவர் ஜோதிக் பச்சேச் கூறுகிறார்.