இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இராணுவத்தளம் இடுதலும் அதற்கான இலுகவழிப் போக்குவரத்து அமைத்தலும் மேலைத்தேயத்திற்கு தற்போதைய நிலையில் மிகமுக்கியமான விவகாரமாக ஆகிவிட்டது.
குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இந்த மூலோபாயப் போட்டிநிலை ஒன்றுக்கான பாதுகாப்பு புறச்சூழல் ஏற்பட்டுள்ளது.
சீனாவுடனான பூகோள அதிகாரப்போட்டி குறித்த அமெரிக்காவின் மூலோபாயக் கொள்கை வரைபட அறிக்கையில் ஜனாதிபதி ஜோ பைடனால் “எங்கள் கூட்டளிகள் பங்காளிகள் மற்றும் எமது நலன்களுடன் துணையாக பயணிக்க கூடிய அனைவருடனும் இறுக்கமாக இணைந்துக் கொண்டு வகையில் செயலாற்ற வேண்டும்” என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.
விரைவுபடுத்தப்பட்ட இந்தப் புதியஅரசியல் அணுகுமுறைக்கு சர்வதேச அளவில் தெற்காசியாவை மையமாகக் கொண்ட தளம்பல் நிலையை மேலைநாடுகள் உணர்ந்துள்ளமையே முக்கியகாரணமாகும்.
ஆப்கனிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறி விட்டது. ஈரான் அமெரிக்க எதிர்ப்புடைய நாடாகும்.
பாகிஸ்தானில் அரச தோல்வி நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானை அணுகினாலும் அங்கு அரசியல் சமூக மட்டத்தில் சீன செல்வாக்கு மேலைத்தேய செல்வாக்கை விஞ்சி விட்ட நிலையுள்ளது.
மேலும் உக்ரேனிய போர்ச்சூழலின் ஆரம்பத்திலிருந்து இந்தியா தனித்துவமான, சுதந்திர வெளியுறவுக் கொள்கையை விடாப்பிடியாகக் கொண்டிருக்கிறது.
பர்மாவில் சீன சார்பு இராணுவம் நிலையெடுத்து அரசாட்சி செய்கிறது. இந்நிலையில் இலங்கையை கையாள வேண்டிய நிலையில் மேலைத்தேய வல்லரசுகள் உள்ளன.
இந்தச் சவால்நிலை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க தலைமையிலான தளங்களுக்கான வலையமைப்பு போதுமான நிலையில் இல்லாதவொரு வெற்றுத் தன்மையை தோற்றுவித்துள்ளதாக மேலை நாடுகளால் உணரப்படுகிறது.
வல்லரசுகளுக்கு இடையிலான இந்தப்போட்டிநிலையானது, அமெரிக்கா, சீனா, இந்தியா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து என்று அனைத்துப் பக்கத்திலிருந்தும் எழுந்துள்ளது.
குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிராக எழுந்துள்ள பூகோளச் சமநிலை மாற்றம் மேற்குப் பசுபிக்கரைகளிலும், ஐரோப்பாவிலும் கூட கடுமையான சவால் நிலையை தோற்றுவித்துள்ளது.
முக்கியமாக இந்து சமுத்திரக் கரையோரத்தை பொறுத்தவரையில் கடல் போக்கவரத்து இலகு வழியை பிராந்தியளவில் உறுதிப்படுத்தகூடிய அமெரிக்கச் சார்பு நாடுகளின் தொகை வலுவாக குறைந்து வருகிறது.
இந்தத் தாராளவாத நாடுகளுக்கான தளம்பல் நிலையை அகற்றும் வகையில் அமெரிக்கா சிறிய அரசுகளுடன் புதிய பொருளாதாரக் கூட்டுக்களை ஏற்படுத்தம் வகையிலான நகர்வுகளில் இறங்கும் தேவை ஏற்பட்டு உள்ளது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் முக்கியத்துவம் பூகோள அளவில் நன்கு அறியப்பட்டதாகும். இது அத்திலாந்திக்கடல் நாடுகளை மத்தியதரைக் கடல் வழியாக பசுபிக் சமுத்திரம், தென் சீனக்கடல் போன்றவற்றை இணைக்குமொரு பிரதான கடற்பகுதியாகும்.
இந்தப் போக்குவரத்துப்பாதை கடல் மார்க்கப் பண்டங்கள் மற்றும் இராணுவ நகர்வுகளை முற்றுமுழுதாக நம்பியிருக்கும் நாடுகளுக்கு மிக முக்கியமானதாகும்.
எழுந்திருக்கும் தெற்காசிய வெற்றிடத்தை எவ்வாறாயினும் நிறைவு செய்து கொள்ளும் நகர்வுகளில் ஒன்றாகவே அமெரிக்கப் பிரதம பதில் பாதுகாப்பு செயலர் தலைமையிலூன குழு கடந்த 16ஆம் திகதி கொழும்பில் தரை இறங்கியது.
இதில் தமிழர் தாயகத்தில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகமும் பேச்சில் உள்ளதாக தெரிகிறது. இந்நகர்வுக்கு புதுடில்லியின் ஒப்புதலும் கூட்டு ஒத்துழைப்பும் தேவையாகவுள்ளது.
இதற்கேற்றாற்போல இந்திய, அமெரிக்க ஒப்பந்தங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஒப்பந்தங்கள் இயல்பாக நல்லதல்ல என்றதொரு சிந்தனை டெல்லியில் உள்ள சிந்தனையாளர்களை உள்ளடக்கிய பிரதான நீரோட்டத்தில் உள்ளது.
ஆனாலும், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பு சார்ந்த மூன்று ஒப்பந்தங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதற்கு அமெரிக்கா பன்நெடும் காலமாக முயற்சி செய்துவந்தது.
இறுதியாக பிரதமர் நரேந்திரமோடி பதவிக்கு வந்ததன் பின்னர் தான், 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி பண்டப் பரிமாற்ற உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சர்வதேச அளவில் இந்திய, அமெரிக்கத் தரப்புகளுக்கிடையில் பாதுகாப்புத் தேவைகளுக்கான பரஸ்பர தளவாட ஆதரவு வழங்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.
அடுத்து தொடர்பாடலில் இணக்கத்தன்மை கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம் 2018ஆம் ஆண்டு செய்து கொள்ளபட்டது.
இது இருதரப்பிற்கும் இடையிலான ஆயுதங்கள் குறித்த விவகாரங்களில் கொண்டுள்ள இணக்கத்தன்மையை பரிமாறிக்கொள்ளும் தொடர்பாடல் தளம் குறித்ததாகும்.
இறுதியாக அடிப்படை பரிமாற்றத்திற்கும் கூட்டுறவுக்குமான உடன்படிக்கை 2020இல் ஒக்டோபர் 27இல் கைச்சாத்தாகியுள்ளது.
இது இராணுவ ரீதியிலான கூட்டுறவை நோக்கிய ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் மூலம் புவியியல், நுண்ணறிவுத்தகவல்கள், மனிதாபிமான நடவடிக்கைகள், செயற்கைகோள் புகைப்படங்கள் அவற்றிற்கான கூட்டு தகவல்களை பரிமாற்றிக்கொள்ளல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்க, இந்தியத் தரப்புகளுக்கிடையில் இந்தோ, பசுபிக் மூலோபாயத்தில் ஒத்துழைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளை கொண்ட நாற்கர நாடுகளின் கூட்டு நடவடிக்கைகள் மேலும் வலுவடைகிறது.
சீனக் கடற்கலன்களை இந்து,பசுபிக் சமுத்திரங்களில் கண்டறிய இருதரப்பும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கலாம், புதிய ஆயுத தயாரிப்புகளில் கூட்டாக தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளல் போன்ற பல நன்மைகள் உள்ளன.
ஆனால் இந்த ஒப்பந்தங்களால் இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பிற்கு மிகப்பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்த முடியும்.
இந்த ஒப்பந்தத்தின் விளைவாக காலாகாலமான இந்தியா முதன்மையாக பின்பற்றிவரும் அணிசேரா கொள்கை ஒருபுறத்தில் போடப்பட்டுவிடும்.
இந்திய பாதுகாப்பு பிரிவுகளிடம் இதுவரை காலமும் ரஷ்ய ஆயுத தளவாடங்களே எழுபது சதவிகிதம் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் படைகளிடம் இருக்கும் பாரிய அளவிலான ஆயுதங்கள் வழக்கற்றுப்போகும் தன்மையைக் கொண்டுவரலாம்.
ஏற்கனவே இந்தியாவுடன் இனைந்து செயற்படும் ரஷ்யா போன்ற நாடுகளின் கூட்டை முறிக்கும் தன்மை கொண்டது. அது மட்டுமல்லாது புதுடில்லி இந்த உடன்படிக்கையை மிக கவனமாக கையாளாது போனால் புதிய ஒப்பந்தங்கள் இந்தியாவின் இறையாண்மையை மேலைநாடுகளுக்கு விட்டுக் கொடுக்கும் தன்மையை ஏற்படுத்தி விடுவம்.
ரஷ்யாவுடனான கூட்டானது, அமெரிக்காவின் இராணுவத் தளபாடங்கள் குறித்த சிக்கலான தகவல்களையும், தரவுகளையும் ரஷ்யா ஆயுதத் தயாரிப்பாளர்கள் பெற்றுக்கொள்வதற்கும் வாய்புள்ளது என்பதன் பெயரில் ரஷ்யாவுடனான உறவுகளை முறித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதற்கு வொஷிங்டனுக்கு அதிக காரணங்களையும் சந்தர்ப்பங்களையும் கொடுக்கிறது.
அண்மையில் சுவாமி விவேகானந்தா சேவ கேந்திரா என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி சுதந்திர மரதன் ஒட்டப்போட்டி இடம்பெற்றது.
இந்த மரதன் போட்டியை ஆரம்பித்து வைத்த இந்திய தொடர்பாடல்கள் ஒலிபரப்பு மற்றும் மீன்பிடி துறை அமைச்சர் எல்.முருகன், இன்னும் இருபத்தி ஐந்து வருடங்களில், 2047 இல் இந்தியா தனது சுதந்திரத்தின் நூறு வருடங்களை அடைகின்றபோது, இந்தியா அதியுயர் வல்லரசாக இருக்கும் என்று காலம் சென்ற முன்னைநாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம்; கூறியதாக குறிப்பிட்டார்.
அத்துடன் பிரதமர் மோடியின் ஆட்சி நிர்வாகத்தில் அப்துல் கலாமின் சொற்கள் நிச்சயமாகி வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
அமைச்சர் முருகனின் கூற்றில் இந்தியா தனித்துவமாக பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் மூலோபாய ரீதியாகவும் தனது சொந்த முயற்சிகளுடனும் முன்னேறி வருமானால் அது இந்தியாவுக்கு மட்டுமல்ல தெற்காசியா முழுவதுமே பாதுகாப்பான பிராந்தியமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் இந்தியாசின் தெற்கே பாதுகாப்பிற்கு என்றும் சவாலாக இருக்க கூடிய இலங்கை தீவிலே அமெரிக்க படைத்தளம் அமைப்பதில் கூட்டுமுயற்சியில் ஈடுபடுமானால் அது நீண்ட காலத்தில் பெரும்கேடு விளைவிப்பதாகவே அமையும்.
அதுமட்டுமல்லாது தெற்காசியாவின் நட்சத்திமாகத் திகழும் திருகோணமலையில் அமெரிக்க விரிவாக்கத்திற்கோ அல்லது மேற்குநாடுகளின் இராணுவ விரிவாக்கத்திற்கு துணைபோகுமானால் ஏறத்தாள தனது பிராந்தியத்திற்கு அருகில் பிற்காலத்து போட்டியாளர்களை அனுமதிக்கும் செயலாகவே அமையும்.
இந்தியாவின் மிகப் பாரிய படைத்தளங்களில் ஒன்றான அந்தமான் தீவுகளில் உள்ள பிளாயர் துறைமுக கடற்படைத்தளத்திற்கு ஏறத்தாள அதேநேர்கோட்டில் சில கடல்மைல் தூரத்திலேயே திருகோணமலை உள்ளது. இங்கே அமெரிக்கப் படைகளுக்கு இடமளிப்பது இந்தியா தனது சொந்த பாதுகாப்பிற்கு சவால் விடக்கூடிய சந்தர்ப்பங்களைத் தானே உருவாக்கிக்கொள்ளும் தன்மையை கொண்டது.
இந்தியா 100ஆவது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் காலப்பகுதியல் தற்பொழுது சீனாவுக்கு எவ்வாறு தாய்வான் தலையிடியாக அமைந்திருக்கிறதோ அதேபோன்று இந்தியாவின் தலையிடியாக ‘இலங்கை’ அமையும் என்பதில் ஐயமில்லை.
-லோகன் பரமசாமி-