வளைகுடா பிராந்தியத்தில் ஷீஆ பிரிவு முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஆனால் சுன்னத் பிரிவு முஸ்லிம்களால் ஆளப்படும் பஹ்ரேன் தனது இறையான்மையின் கீழுள்ள தீவை இஸ்ரேலுக்கு விற்பனை செய்துள்ளதன் மூலம் அந்தப்பிராந்தியத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானை முற்றாக அழித்தே தீர வேண்டுமென கங்கனம் கட்டியுள்ள இஸ்ரேல் இத்தீவை ஈரானை வேவு பார்ப்பதற்டிகொரு தளமாகப் பயன்படுத்தலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

பஹ்ரேனின் இந்தத் தூரநோக்கற்ற நகர்வானது பெரும்பாலும் அமெரிக்க, சவூதி மற்றும் அபுதாபி என்பனவற்றின் நெருக்குதலின் பேரில் எடுக்கப்பட்டதொன்றாகவும் இருக்கலாம். இதனால் மத்திய கிழக்கிலும் குறிப்பாக வளைகுடாவிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் அஞ்சப்படுகின்றது.

இஸ்ரேலின் ‘டிவி7’ என்ற செய்திச்சேவை தான் இந்தத்தீவு விற்பனை பற்றிய தகவலை முதலில் வெளியிட்டது. ஆனால் இந்தச்செய்தி ஒளிபரப்பான பின்னர் அச்செய்தி நிறுவனத்தின் வலையமைப்பிலிருந்து குறித்த செய்தி நீக்கப்பட்டுள்ளது.

அறிக்கைகளின்படி யூத தேசிய நிதியத்துக்கு சொந்தமான ஹிம்நொடா என்ற தர்ம நிதி நிறுவனம் குறிப்பிட்ட இடத்தை 21.5மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. தர்ம நிதியமென அடையாளப்படுத்தப்பட்டுள்ள இதேநிறுவனம் தான் இஸ்ரேலிய காட்டுமிராண்டி இனவாத அரசால் மேற்கொள்ளப்படும் யுத்தக் குற்றங்களில் ஒன்றான பலஸ்தீன மக்களுக்கு சொந்தமான மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதிலும் ஈடு;படுத்தப்பட்டு வருகின்றது.

இன்னும் சில தகவல்களின்படி குறிப்பிட்ட தீவு 9554 சதுரமீற்றர் பரப்பளவு கொண்டது. இது முதலீட்டுக்காகவும் ஏதோ காரணத்தால் வளைகுடாவில் யுத்தம் ஏற்பட்டால் அங்குள்ள இஸ்ரேலியர்களை வெளியேற்றவும் தளமாகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் உள்ளவர்களில் ஒருவரான ஏவரி ஷ்னாயர் இந்தத் தீவின் இறையான்மையை பஹ்ரேன் அரசிடமிருந்து இஸ்ரேலுக்கு மாற்றிக் கொள்ள தமது நட்பு நாடான பஹ்ரேனுடன்; பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் எனத்தெரிவித்துள்ளார்.

இந்தத் தீவு விற்பனைக்கு எதிராக குரல் எழுப்பியுள்ள பஹ்ரேன் பிரஜையான மனித உரிமை செயற்பாட்டாளர் மர்யம் அல் கவாஜா “வெளியாகியுள்ள தகவல்களின் படி பஹ்ரேனில் இஸ்ரேல் ஒரு தீவை கொள்வனவு செய்துள்ளது.

இதை காலணித்துவ விரிவாக்கம் என்று மிக அழகாக வர்ணிக்கலாம். பஹ்ரேனை பலவந்தமாக ஆக்கிரமித்து பலவந்தமாக ஆட்சி செய்து வரும் வெளிநாட்டுக் குடும்பம் இந்த காலணித்துவ விரிவாக்கத்தை செய்துள்ளது” என்றார்.

அத்துடன், பஹ்ரேனின் அரசியல் செயற்பாட்டாளர்களில் ஒருவரான எப்றாஹிம் ஷரீப் என்பவர் தனது டுவிட்டர் பதிவில், வளைகுடாவின் குட்டி இராச்சியத்தை யூதமயப்படுத்தி சியோனிஸத்துக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதா என்று எழுப்பியுள்ள கேள்வியையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

பஹ்ரேனின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஜனநாயகத்துக்கும் மனித உரிமைக்குமான ஸலாம் என்ற அமைப்பின் தலைவருமான ஜவாட் பைரூஸ் “இந்த தீவு கொள்வனவு விவகாரம் மிகவும் ஆபத்தானதும் கவலை தரும் ஒரு சமிக்ஞையுமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தீவு விற்பனை தொடர்பான செய்தி வெளியான கையோடு இஸ்ரேலின் இராணுவ பிரதானி ஹெர்ஸி ஆல்வே பஹ்ரேனுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அவர் அமெரிக்க இராணுவ மத்திய கட்டளை பணியகம் (ஊநுNவுஊழுஆ) ஏற்பாடு செய்திருந்த மாநாடு ஒன்றில் தலைவர் எரிக் குரில்லா உடன் இணைந்து பங்கேற்றுள்ளார்.

இஸ்ரேலுடனான பஹ்ரேனின் இயல்பு நிலை உறவுகள் ஏற்கனவே பஹ்ரேன் பிரஜைகளின் ஆழ்ந்த அதிருப்திக்கு உள்ளாகியுள்ளன.

அமெரிக்க மத்தியஸ்தத்தின் கீழ் 2020இல் ஆபிரஹாமின் உடன்படிக்கைகள் திட்டத்துக்கு இசைவாக பஹ்ரேனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உருவாக்கப்பட்ட இயல்பு நிலைக்கு எதிராக அவ்வப்போது ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இந்நிலையில் பஹ்ரேனில் ஜனநாயக ஆதரவு எதிர்ப்பலைகள் தலைதூக்கி கடந்த வாரத்தோடு 11ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்த எழுச்சி அண்டை நாடான சவூதியின் ஆதரவோடு மிக மூர்க்கத்தனமாக நசுக்கப்பட்டமையும் இங்கு நினைவூட்டத்தக்கது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆதரவுடன் கூடிய இஸ்ரேலுடனான இவர்களின் புனிதமற்ற தேன்நிலவு மற்றும் தமது மிகப்பெரிய அண்டை நாடான ஈரானுக்கு எதிராக அவர்கள் இழைத்து வருகின்ற துரோகங்கள், இனிவரவுள்ள தலைமுறைக்கும் சேர்த்து வளைகுடாவில் பாரிய மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடும் என்பதை ஷேக்மார் அனைவரும் மறந்து விட்டனர்.

இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஒரே நாடு ஈரான் மட்டுமே. எனவே அந்த தேசத்தை அழித்துவிட வேண்டும் என்ற தேவை அமெரிக்க ஐரோப்பிய ஆதரவாளர்களுக்கும் அவர்களின் பங்காளிகளான கொடுங்கோல் அரபு ஆட்சியாளர்களுக்கும் மிக அதிகமாகவே உள்ளது.

ஈரானுடனான சமாதானப் பேச்சுக்களில் அல்லது அதன் அணு வளம் தொடர்பான பேச்சுக்களில் அமெரிக்க ஐரோப்பிய கூட்டணிகள் ஈடுபடுவதை இஸ்ரேல் கண்டிப்பாக எதிர்த்து வருவதற்கும் இதுவே பிரதான காரணம்.

எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தை நசுக்குவது முதல் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஈராக் உட்பட முஸ்லிம் நாடுகள் அனைத்தின் மீதும் மேற்கொண்ட யுத்தங்களுக்கும் அரபு ஆட்சியாளர்கள் பூரண ஆதரவை வழங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் தற்போது இஸ்ரேல்-இந்திய-அமீரக உறவுகள் என்ற புதிய முக்கோண உறவுத்திட்டத்தையும் உருவாக்கி உள்ளது.

2020 செப்டம்பர் 15இல் இஸ்ரேலுடன் உத்தியோகபூர்வ உறவுகளை ஸ்தாபித்துக் கொண்ட முதலாவது வளைகுடா நாடு என்ற பெயரை ஐக்கிய அரபு அமீரகம் தனதாக்கிக் கொண்டது.

1979இல் எகிப்து 1994இல் ஜோர்தான் ஆகிய அரபு நாடுகளுக்குப் பிறகு இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்திய மூன்றாவது அரபுலக நாடாகவும் அது காணப்படுகின்றது.

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசாக் எர்சொக் அமீரகத்துக்கான முதலாவது விஜயத்தை மேற்கொண்டிருந்தவேளை அமீரகத்தின் ஆட்சியாளர் ஷேக் மொஹம்மத் பின் செயித் அல் நஹ்யானுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு விடயங்கள் பற்றி மிக ஆழமான பேசசுக்களில் ஈடுபட்டுள்ளார்.

அமீரகத்தின் சில இடங்கள் மீது கடந்த மாதம் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் இரு தடவைகள் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

யேமனின் ஹவுத்தி கெரில்லாக்கள் இதற்கு உரிமைகோரி உள்ளனர். இந்த தாக்குதல்கள் தொடர்பான பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் புலனாய்வு ஆதரவுகளை இஸ்ரேல் ஏற்கனவே வழங்கி உள்ள நிலையில் எதிர்காலத்தாக்குதல்களை தடுக்கும் விடயத்தில் கவனம் செலுத்தப்படும் என்ற உறுதியையும் அளித்துள்ளது.

இதனிடையே ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு நடுவே அரேபியக்கடல் பிராந்தியம் மற்றும் செங்கடல் பிராந்தியம் என்பன தொடர்பாக இஸ்ரேல் கொண்டுள்ள அக்கறையின் அடிப்படையில் பஹ்ரேன் அதனுடன் உறவுகளை வலுப்படுத்தி உள்ளது.

இஸ்ரேலின் மேற்படி ஆதரவுகளோடு வளைகுடா நாடுகளுக்கு தமது மிகப் பெரிய அண்டை நாடான ஈரானைப் பகைத்துக் கொள்ள முடியுமா? என்பதே தொக்கி நிற்கும் பிரதான கேள்வியாகும்.

மனித நினைவுகளுக்கு முற்பட்ட காலம் முதலே ஈரானுக்கும் வளைகுடா பிராந்தியத்துக்கும் இடையிலான உறவுகளும் தொடர்புகளும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.

இந்தப் பின்னணியில் தான் வளைகுடா ஷேக்மார் குறிப்பாக எண்ணைய் செல்வம் கண்டறியப்பட்ட பின் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ள எதிரிகளோடு கைகோர்க்கத் தொடங்கினர். அதபோலவே ஈரான் விடயத்திலும் நடந்து கொண்டனர். ஆனால் இதுமிகவும் பாரதூரமான விளைவுகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தக் கூடியவை.

எண்ணெய்வளம் என்று காய்ந்து போகின்றதோ அதனால் கிடைக்கும் செல்வம் என்று மங்கத் தொடங்குகின்றதோ அன்று இந்த ஷேக்மாரை கைவிட்டுவிட்டு அமெரிக்க ஐரோப்பிய கூட்டணி வளைகுடாவிலிருந்து வெளியேறிவிடும். அப்போது நிலைமைகள் எப்படியிருக்கும்.

-லத்தீப் பாரூக்-

Share.
Leave A Reply