“கடந்த 18ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில், நானும் நவீனும் ரமாதேவி பப்ளிக் பள்ளிக்குச் செல்லும் சாலையில் சென்றோம்.

அங்கு நவீனை சாலையோரமாக வெறிச்சோடி இருந்த ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றேன். ‘நான் அந்தப் பெண்ணைக் காதலிக்கிறேன்.

நீ வேறு பெண்ணுடன் பழகுகிறாயா? மீண்டும் ஏன் அவளைத் தொந்தரவு செய்கிறாய்?’ எனக் கேட்டேன்.”

“நான் அவளைக் காதலிக்கிறேன், அவளை மறந்துவிடு’ எனக் கூறி முதலில் நவீன் என்னை கைகளைப் பயன்படுத்தி அடித்தான்.

நான் அவனைக் கொல்லும் நோக்கத்தில் என் கைகளால் கடுமையாக அடித்தேன். ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டோம். நான் நவீனைத் தூக்கிக் கீழே போட்டு, அவன் மீது அமர்ந்து கழுத்தை நெரித்தேன்.

பிறகு ஆத்திரத்தில் முதலில் நவீனின் ஆடைகளைக் கழற்றி, நான் கொண்டு வந்திருந்த கத்தியால் அவனது தலையை வெட்டினேன்.

பிறகு மார்பின் குறுக்கே வெட்டி இதயத்தை வெளியே எடுத்தேன். அவனது உடலை வெட்டினேன்.

இரண்டு விரல்களைத் துண்டித்தேன். அதற்குப் பிறகு நவீனின் உடலை யாரும் பார்க்காதவாறு மரங்களுக்குள் இழுத்துச் சென்றுவிட்டேன்,” என்று குற்றம் சாட்டப்பட்ட ஹரிஹர கிருஷ்ணா கூறியதாக போலீஸ் விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.

ஹைதராபாத் புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய பொறியியல் கல்லூரி மாணவர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஹயத்நகர் நீதிமன்றத்தில் போலீசார் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.

அந்த அறிக்கையில், கொலைக்கான காரணங்களையும் கொலை நடந்த விதத்தையும் ஹரிஹர கிருஷ்ணா கூறியதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் ஹரிஹர கிருஷ்ணா மீது ஐபிசி பிரிவு 302, 201 மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 3(2) ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அப்துல்லாபூர்மேட் காவல் ஆய்வாளர் வி.சுவாமி தெரிவித்தார்.

‘அவன் அந்தப் பெண்ணுடன் உடலுறவு கொண்டான்…’

ஹைதராபாத் புறநகர் பகுதியான அப்துல்லாபூர்மேட்டில் தான் காதலித்த இளம்பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டதால், பொறியியல் மாணவர் நவீனை அவரது நண்பர் ஹரிஹர கிருஷ்ணா கடந்த 17ஆம் தேதியன்று இரவு கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஹரிஹர கிருஷ்ணா, தானும் நவீனும் 12ஆம் வகுப்பில் இருந்தே நண்பர்கள் என்றும் நவீன் முன்பு ஒரு பெண்ணை விரும்பியதாகவும் கூறினார். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நவீன் அந்தப் பெண்ணிடம் சரியாகப் பேசவில்லை எனத் தெரிந்ததும் அந்தப் பெண்ணிடம் ஹரிஹர கிருஷ்ணா ப்ரொபோஸ் செய்ததாகவும் அதற்கு அந்தப் பெண் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறினார்.

அந்த அறிக்கையில் தான் காதலித்த பெண்ணுடன் நவீன் சானு உடலுறவு கொண்டதால் அவரைக் கொலை செய்ய முடிவு செய்ததாக ஹரிஹர கிருஷ்ணா வாக்குமூலம் அளித்ததாக கிடைத்த போலீசாரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட நவீன்

மூன்று மாதங்களாக நவீனை கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அவர் கூறியதாக விசாரணை அறிக்கையில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்காக மாலக்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்கு 200 ரூபாய்க்கு ஒரு மருந்தகத்தில் கத்தியையும் இரு ஜோடி பிளாஸ்டிக் கையுறைகளையும் அவர் வாங்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 16ஆம் தேதி, அனைத்து நண்பர்களையும் சந்திக்க விரும்பியதாகவும் அன்றே நவீனை கொலை செய்ய விரும்பியதாகவும் ஹரிஹர கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஆனால், நவீன் பிப்ரவரி 17ஆம் தேதியன்று ஹைதராபாத் வருவதாகக் கூறியதால் அது முடியவில்லை.

“பிப்ரவரி 17 அன்று மதியம் எல்.பி. நகரில் அவரை அழைத்துக்கொண்டு ஜீவன் என்ற மற்றொரு நண்பருடன் நாகோலுவில் உள்ள உணவகத்திற்குச் சென்று மதிய உணவு சாப்பிட்டோம்.

அதற்குப் பிறகு ஜீவன் வீட்டிற்குச் சென்றுவிட்டான். இரவு வரை ஷாப்பிங் செய்துவிட்டு வெவ்வேறு இடங்களுக்குச் சென்றோம்.

இரவு நல்கொண்டாவில் உள்ள ஹாஸ்டலுக்கு செல்லலாமா என நவீன் கேட்டதால் அவனையும் அழைத்துக்கொண்டு பைக்கில் கிளம்பினோம். பெத்தா அம்பர்பேட்டையில் மது வாங்கிக் குடித்துவிட்டுப் பிறகு வண்டியில் கிளம்பினோம்.

நவீன்(இடது), ஹரிஹர கிருஷ்ணா(வலது) இருவரும் 12ஆம் வகுப்பு முதலே நண்பர்கள்

அந்த நேரத்தில் மது அருந்திவிட்டு அவ்வளவு தூரம் செல்வது நல்லதல்ல என்று கூறினேன். ராமோஜி ஃபிலிம் சிட்டியில் யு-டர்ன் எடுத்து திரும்பினோம்.

அங்கிருந்து நான் நவீனை ரமாதேவி பப்ளிக் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொலை செய்தேன்,” என்று ஹரிஹர கிருஷ்ணா கூறியதாக விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.

நவீனை கொலை செய்ததை காதலியிடம் கூறிய ஹரி ஹர கிருஷ்ணா

ஹரிஹர கிருஷ்ணா அளித்த வாக்குமூலத்தில், நவீன் கொல்லப்பட்டது குறித்து அவர் இருவரிடம் கூறியதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

அதில் ஒருவர் அவர் காதலிக்கும் பெண், மற்றொருவர் அவரது நண்பர் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது.

“நவீனை கொன்றுவிட்டு, கொலைக்குப் பயன்படுத்திய கத்தி, நவீனுடைய ஆடைகள், கைபேசி ஆகியவற்றை நான் கொண்டு வந்த பையில் போட்டுவிட்டு, பிராமணப்பள்ளிக்குச் சென்று நவீனின் தலை, பேன்ட், கத்தி, கைபேசி ஆகியவற்றை சாலையோரம் வீசி எறிந்தேன்,” என்று போலீஸிடம் அவர் விளக்கியதாகக் கூறியுள்ளனர்.

மேலும், நவீனின் சட்டை பனியன்களை ராஜீவ் கிரககல்பாவில் வீசியதாக ஹரிஹர கிருஷ்ணா கூறினார் என்று போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

பிறகு அங்கிருந்து நண்பர் ஹசன் வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு நடந்ததைக் கூறியுள்ளார். இதனால் பயந்துபோன ஹசன் அவரை போலீஸில் உடனடியாக சரண் அடையுமாறு கூறியுள்ளார்.

மறுநாள்(18ஆம் தேதியன்று) “காலையில் அங்கிருந்து கிளம்பி சாகர் வளாகத்தில் உள்ள குப்பை மேட்டில் என் துணிகளை வீசினேன்.

காதலிக்கு அழைத்து நவீன் கொல்லப்பட்டதாகக் கூறினேன். அவள் பயந்துபோய் என்னைத் திட்டினாள். பின்னர் வாரங்கல்லில் உள்ள என் தந்தையின் வீட்டிற்குச் சென்றேன்,” என்றார் ஹரிஹர கிருஷ்ணா.

கொலை செய்த பிறகு எங்கு சென்றார்?

கொலைக்குப் பிறகு வேறு வேறு இடங்களுக்குச் சென்றதாக ஹரிஹர கிருஷ்ணா கூறியதாக போலீசார் விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

“நவீனின் மாமா அழைத்து அவனைக் காணவில்லை எனக் கேட்டபோது தெரியாது எனக் கூறினேன்.

‘கஞ்சா புகைக்காதே’ எனக் கூறியதால் நவீன் என்னிடம் தகராறு செய்துவிட்டுச் சென்றதாகக் கூறினேன்,” என்று அவர் கூறியதாக விசாரணை அறிக்கை கூறுகிறது.

கடந்த 21ஆம் தேதியன்று நவீனுடைய மாமா காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதாகக் கூறி ஃபோன் செய்துள்ளார். அப்போதும் ஹரிஹர கிருஷ்ணா போலீசாரிடம் தனக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.

“பயந்துபோய் வீட்டிலேயே ஃபோனை வைத்துவிட்டு கோதாடாவுக்கு போனேன். அங்கிருந்து விஜயவாடா, கம்மம், விசாகப்பட்டினம் எனப் பல இடங்களுக்குச் சென்றுவிட்டு, கடந்த 23ஆம் தேதியன்று வணியில் வாரங்கல்லுக்கு சென்று கொலையைப் பற்றி அப்பாவிடம் கூறினேன். அவர் என்னைக் கண்டித்து போலீசில் சரணடையச் சொன்னார்.

அங்கிருந்து நவீனுடைய தலை, ஆடைகள், மற்ற உடல் உறுப்புகள் போடப்பட்ட இடத்திற்குச் சென்று பிளாஸ்டிக் பையில் போட்டு எடுத்து வந்தேன். உடலை போட்ட இடத்திற்குக் கொண்டுபோய், உடல் உறுப்புகள் அனைத்தையும் அதோடு போட்டு எரித்தேன்.

உறுப்புகள் ஏற்கெனவே அழுகிவிட்டிருந்தன. அதன்பின், 24ஆம் தேதியன்று மாலை 3 மணிக்கு காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தேன்,” என்று ஹரிஹர கிருஷ்ணா விசாரணை அறிக்கையில் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Share.
Leave A Reply