ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெரும்பான்மை வாக்குகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் இறுதிச் சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் பெற்றிருந்தனர். இருவருக்குமான வாக்குகள் வித்தியாசம் 66,575 வாக்குகள் என அறிவிக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வந்தார்.
பிற்பகலுக்குப் பிறகு அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதியான நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் இளங்கோவனின் தேர்தல் வெற்றியை கொண்டாடத் தொடங்கினர்.
அவரது வெற்றி குறித்து செய்தியை ஆளும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்ததைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தத் தொடங்கினர்.
வரலாற்று வெற்றி – முதலமைச்சர் ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்றிருப்பது வரலாற்றில் பதிவாகக் கூடிய வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
20 மாதகால திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் இது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் பேசிய அவர், “திமுக ஆட்சியை எடைபோடும் தேர்தலாக, இந்த இடைத்தேர்தல் இருக்கும் எனக் கூறி வந்தேன். மக்களும் அதற்கேற்றாற் போல எடைபோட்டு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளனர்.
விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரம் இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது.
மக்களவை தேர்தலில் இதைவிட மிகப்பெரிய வெற்றியை மக்கள் வழங்குவர். தன்னையே மறந்து நாலாந்தர பேச்சாளர் போல எடப்பாடி பழனிசாமி பேசிவந்தார். அவருக்கு மக்கள் நல்ல பதிலடி கொடுத்துள்ளனர்.” என்று கூறினார்.
இதேபோல் தேசிய அரசியலுக்கு ஃபரூக் அப்துல்லா அழைப்பு விடுத்தது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “நான் ஏற்கனவே தேசிய அரசியலில் தான் இருக்கிறேன்.
அதன் அடிப்படையில் நேற்று நடந்த விழாவில் நான் பேசியிருந்தேன். யார் தேர்தலில் வென்று பிரதமராக வரவேண்டும் என்பதைவிட யார் பிரதமராக வரக்கூடாது என்பதுதான் இப்போதைய கொள்கை.” என்றார்.
கடந்த முறை கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டபோது 8,900 வாக்குகள் வித்தியாசம் இருந்த நிலையில் தற்போது அதிமுக இரட்டை இல்லை சின்னத்தில் நேரடியாக போட்டியிட்டும் வாக்கு வித்தியாசம் அதிகமாக உள்ளது. நாம் தமிழர் கட்சி தொடர்ந்து மூன்றாவது இடத்தை வகிக்கிறது.
முன்னிலை பெற்றது குறித்துப் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், “முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் நிறைவேற்றியுள்ளார்.
அதன் எதிரொலியாக இந்த வெற்றியை காண முடிகிறது. ஈரோட்டில் சில பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனது மகன் விட்டுச்சென்ற பணிகள் மற்றும் இதர பணிகளை அமைச்சர் முத்துசாமியுடன் சேர்ந்து முதல் அமைச்சரை சந்தித்து ஈரோடு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்.” என்றார்.
“தேர்தல் சரியாக நடக்கவில்லை என சிலர் கூறுகின்றனர். தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுகிறது என்பதை அதிமுகவே கூறியுள்ளது.
இந்த பெரிய வெற்றி தான் என்றாலும் கூட வெற்றியை கொண்டாடும் மன நிலையில் நான் இல்லை. மகன் விட்டுச்சென்ற பணியை செயல்படுத்தவே நான் உள்ளேன்.” என்று அவர் குறிப்பிட்டார்.
என்ன சொல்கிறது அதிமுக?
கே.வி. ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் (அதிமுக)
தேர்தல் முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வேட்பாளர் தென்னரசு, “பணநாயகம் வென்றது; ஜனநாயகம் தோற்றது” என ஒரே வாக்கியத்தை கூறிவிட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் மற்றும் ஈரோடு மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், “வேடிக்கை பார்த்த தேர்தல் ஆணையம், விளையாடிய ஆளும் கட்சி, இது. பண நாயகத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த தோல்வி அதிமுகவை பாதிக்காது. அதிமுக ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டு எழும். திமுகவின் ‘பி’ அணியாக செயல்படுபவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என்றார்.
முன்னதாக, மொத்தம் 16 மேசைகளில் வாக்குகள் எண்ணப்பட்டன.
வேட்பாளர்களுடன் அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று காலையில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி பெற்ற பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாததாலும் வாக்கு எண்ணிக்கை நிலவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததாலும் பத்திரிகையாளர் மற்றும் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடந்தது. திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசுவும் போட்டியிட்டனர்.
தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வே.ரா உடல்நலக் குறைவால் மறைந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
238 வாக்குச் சாவடிகள் கொண்ட இந்த இடைத்தேர்தலில் 74.69 % வாக்குகள் பதிவாகியிருந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் பதிவான வாக்குகளை விட இது 9% அதிகம்.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஈரோடு மாவட்டம் சித்தோடில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டன.
மொத்தம் 238 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 32 மையங்கள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டன. மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் உட்பட மொத்தம் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மூன்று வாரங்களாக தீவிரமாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இறுதி நாளன்று பிரசாரம் செய்தனர்.
திமுக ஆட்சியின் மீதான எடைத்தேர்தல் இது என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார். திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.