சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எவ்.) நிதியுதவி அடுத்தமாதம் கிடைக்கலாம் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டிருந்தாலும், அதனைச் சார்ந்த ஒரு இராஜதந்திரப் போர், இன்னமும் மேற்குலகத்துக்கும், சீனாவுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கிறது.

சீனாவின் கடன் மறுசீரமைப்பு வாக்குறுதி கிடைக்காத்தால் தான், ஐ.எம்.எவ். உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரமும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

அதேவேளை, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், ஏற்கனவே சீனா கடன் மறுசீரமைப்பு உத்தரவாதத்தைக் கொடுத்து விட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சீனாவின் எக்சிம் வங்கி தான் இந்த கடன் நீடிப்பு உத்தரவாதத்தை வழங்கியிருக்கிறது. அதாவது 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கடன் வசூலிப்பு மற்றும் வட்டி வசூலிப்பை நிறுத்தி வைப்பதாக அந்த வங்கி அறிவித்திருக்கிறது.

இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள், 10 முதல் 15 வருடங்களுக்கு கடனை மீளப் பெறுவதை பிற்போடுவதாக உறுதி அளித்திருக்கின்றன.

அதற்குப் பின்னரும், மற்றொரு இலகு திட்டத்தின் கீழ் அதனை மீளப் பெறுவதற்கு இணங்கியிருக்கின்றன. ஆனால் சீனா வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும், கடன் வசூலிப்பை நிறுத்தி வைப்பதாக கூறியிருக்கிறது.

சீனா கொடுத்த இரண்டு வருடங்களில், 2022 ஏற்கனவே முடிந்து விட்டது, 2023 இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு இலங்கை, வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக அறிவித்து விட்டது. அதனால் அந்தக் கடனை வசூலிக்க முடியாது. இந்த ஆண்டும் அதே நிலை தான் இருக்கிறது.

வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டால் தான் இலங்கையிடம் கடனை மீளக்கோர முடியும். இவ்வாறான நிலையில் தான் சீனா 2 வருட கடன் நீடிப்கு உத்தரவாதத்தைக் கொடுத்திருக்கிறது.

அதுவும் சீனாவிடம் இலங்கை பெற்றுள்ள 8 பில்லியன் டொலர்கள் கடனில், 4.5 பில்லியன் டொலர்கள் தான், சீனாவின் எக்சிம் வங்கியால் வழங்கப்பட்டது,

ஏனைய கடன் சீன அபிவிருத்தி வங்கி மற்றும் மக்கள் வங்கியினால் வழங்கப்பட்டது. அவற்றின் கடன் நீடிப்பு உத்தரவாதமும் கிடைக்கவில்லை. ஆனாலும், தங்கள் பங்கிற்கு உத்தரவாதம் கொடுத்து விட்டோம் என்று சாதிக்கிறது சீனா.

நடுத்தர மற்றும் நீண்டகால கடனை தீர்க்கும் திட்டம் குறித்து இலங்கையுடன் நட்பு ரீதியில் பேச்சுவார்த்தை நடத்த சீனா தயாராக இருப்பதாகவும், இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு தன்னால் இயன்றதைச் செய்யவும் சீனா தயாராக உள்ளது என்றும் கூறியிருக்கிறார் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், வாங் வென் பின்.

இங்கு தங்களால் இயன்றதை செய்வோம், என்ற சொல்லாடலுக்குள் தான் சீனாவின் இராஜதந்திரமே அடங்கியிருக்கிறது. சீனாவின் இயலுமை எது என்ற கேள்வி இங்கு எழுகிறது.

இலங்கையின் 8 பில்லியன் டொலர்கள் கடனை ரத்துச் செய்வது, ஒன்றும் சீனாவின் இயலுமைக்கு அப்பாற்பட்ட விடயம் அல்ல.

உலகம் முழுவதும் 170 பில்லியன் டொலர்களைக் கடனாக கொடுத்திருக்கும் சீனாவுக்கு இலங்கையின் 8 பில்லியன் டொலர்களைக் தள்ளுபடி செய்வதோ அல்லது அதனை மீளப்பெறும் நடவடிக்கையை நீண்டகாலத்துக்கு ஒத்திவைப்பதோ ஒன்றும் கடினமானதல்ல.

அதனைச் செய்வதற்கு சீனா தயாராக இல்லை. ஏனென்றால், இலங்கையின் 8 பில்லியன் டொலர்கள் கடனை இரத்துச் செய்தால் அல்லது ஒத்திவைத்தால், அதேபோன்று கடனை வாங்கிய ஏனைய நாடுகளும் தங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் என்பது சீனாவின் வாதம்.

இலங்கையைப் போலவே, சீனாவிடம் கடன் பெற்ற எதியோப்பியா, கானா, சாம்பியா, சூரினாம், ஈக்வடோர், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இப்போது கடும் நெருக்கடியில் உள்ளன. இவை கடன் மறுசீரமைப்பையும் கோருகின்றன என்பது உண்மையே.

ஆனாலும் இலங்கை விடயத்தில் சீனா மேற்குலகுடன் முரண்டு பிடிக்க நினைக்கிறது.  இலங்கைக்கு உதவத் தயாராக இருந்தாலும், மேற்குலகின் இழுப்புக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதற்கு சீனா தயாராக இல்லை.

இந்தப் பூகோள அரசியல் தான் இலங்கைக்கு ஐஎம்எவ் நிதியுதவி இழுபறிக்குள்ளாவதற்குக் காரணம்.

இந்தப் பூகோள அரசியலில் சீனா மட்டும் முரண்டு பிடிக்கவில்லை. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகும் கூட மல்லுக்கட்டிக் கொண்டு தான் இருக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கையை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு அமெரிக்காவும் மேற்குலகமும் நினைத்திருந்தால், அதனை ஏற்கனவே செய்திருக்க முடியும்.

இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாணய நிதியம், பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டி, ஆறு மாதங்கள் ஆகப் போகின்றன.

இந்த உடன்பாடு எட்டப்பட்ட போது மூன்று மாதங்களுக்குள் முதல்கட்ட நிதியுதவி கிடைக்கும் என்றே கூறப்பட்டது.

அது 2022 டிசம்பர், 2023 ஜனவரி என இழுபட்டு இப்போது வரும் மார்ச்சில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்தக் காலஅவகாசம் இழுபட்டுச் செல்கிறதே தவிர, இலங்கைக்கு நிதியுதவி இன்னமும் கிட்டவில்லை.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசுடன் பேச்சு நடத்தியபோது சில நிபந்தனைகளை விதித்திருந்தது. அவற்றில் ஒன்று தான், கடன் வழங்குநர்களிடம், கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாட்டை எட்ட வேண்டும் என்பது.

அதில் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் இணங்கியுள்ள போதும், சீனா மட்டும் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது.

சீனாவிடம் இருந்து நீண்டகால கடன் மறுசீரமைப்பு உத்தரவாதம் கிடைப்பதை ஐ.எம்.எவ். எதிர்பார்க்கிறது. ஆனால் சீனாவோ பிடிகொடுக்க மறுக்கிறது.

சீனாவை இந்த விடயத்தில் மடக்க வேண்டும் என்பது அமெரிக்கா மற்றும் மேற்குலகின் திட்டம் என்பது வெளிப்படை.

அமெரிக்காவும் மேற்குலகமும் நினைத்திருந்தால், இலங்கைக்கான நிதியுதவியை ஏற்கனவே விடுவிக்கத் தொடங்கியிருக்க முடியும்.

ஏனென்றால் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையில் அமெரிக்காவுக்கும், அதன் கூட்டாளிகளுக்குமே அதிக அதிகாரம் உள்ளது.

24 உறுப்பினர்களைக் கொண்டதாக, நாடு மற்றும் பிராந்திய அடிப்படையில் இந்த நிறைவேற்றுச் சபை தெரிவு செய்யப்படுகிறது.

இதில் அமெரிக்காவுக்கு 16.5 சதவீத வாக்குரிமை உள்ளது. ஜப்பானுக்கு 6.14 சதவீதமும், ஜேர்மனிக்கு 5.3 சதவீதமும்,  பிரான்சுக்கு 4.3 சதவீதமும், பிரித்தானியாவுக்கு 4.3 சதவீதமும், ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு 9.59 சதவீதமும், வாக்குரிமை உள்ளது.

சீனாவுக்கு இருப்பது வெறும், 6.08 வீத வாக்குரிமை மட்டும் தான். ஐ.எம்.எவ். நிறைவேற்றுச் சபையில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தால் அதற்கு அங்கீகாரம் அளிக்கப்படுவது ஒன்றும் கடினமல்ல.

அங்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளுமே தீர்க்கமான முடிவை எடுக்க கூடிய நிலையில் உள்ளன. ஏனைய நாடுகளும் எதிர்க்கக் கூடிய நிலையில் இல்லை.

ஏனென்றால், இலங்கையின் கடன் மீட்சியை அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் மாத்திரமன்றி, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் விரும்புகின்றன.

ஆனால், சீனாவின் கடன் மறுசீரமைப்பு உத்தரவாதம் தேவை என்பதில் ஐ.எம்.எவ். உறுதியாக இருக்கிறது. அதற்குக் காரணம், பூகோள அரசியல்.

சீனாவின் வளர்ச்சியை மேற்குலகம் விரும்பவில்லை. குறிப்பாக, சீனா படைபல ரீதியாக வளருவதை விட, பொருளாதார ரீதியாக வளருவதையே மேற்குலகம் அச்சுறுத்தலாகப் பார்க்கிறது.

பொருளாதார ரீதியாக, சீனா நாடுகளை அடிமைப்படுத்தி விடும் என்று அஞ்சுகிறது. அதனால் இலங்கையைப் பயன்படுத்தி, சீனாவை பொறிக்குள் சிக்க வைப்பதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் எத்தனிக்கிறது.

சீனாவுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், அதனைப் பணிய வைக்க முயற்சிக்கின்றன அந்த நாடுகள். சீனா இறங்கி வந்தாலும் சரி இறங்கி வராது போனாலும் சரி, அது மேற்குலகிற்கு இலாபம் தான்.

இறங்கி வந்தால் பொருளாதார ரீதியாக அது பாதிப்புகளைச் சந்திக்கும். இறங்கி வர மறுத்தால், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் தாக்கம் ஏற்படும்.

சீனாவுடன் பொருளாதார உறவுகளைக் கொண்டிருக்கும் ஏனைய நாடுகளும், அதனிடம் இருந்து விலக தொடங்கும். ஆக மொத்தத்தில் இலங்கை குறித்த நிபந்தனைகளில் சீனாவின் எந்த முடிவும் மேற்குலகிற்கு சார்பானது தான்.

சீனா இறங்கி வர மறுத்த நிலையில் தான், அதன் இணக்கப்பாடின்றி நிதியுதவியை விடுவிக்க ஐஎம்எவ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை மீது ஐ.எம்.எவ். கரிசனை கொண்டிருந்தால், ஐந்து மாதங்கள் ஏன் இழுத்தடித்திருக்க வேண்டும்? அப்போதே இதனைச் செய்திருக்கலாமே.

இதுதான் பூகோள அரசியல். பூகோள அரசியல் போட்டியில் இலங்கையும், அதன் பொருளாதாரமும் மக்களும் பயணம் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

 

Share.
Leave A Reply