புத்தளம், உடப்பு பகுதியில் கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது ஒன்றரை வயது மகளை இறால் தொட்டியில் தள்ளி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தாயொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையொன்றில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவி, தனது கணவனை பழிவாங்கும் நோக்கில் தனது ஒன்றரை வயது மகளை கொலை செய்வதற்கு முயற்சித்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இறால் தொட்டிக்குள் விழுந்த குழந்தையை பார்த்த சக தொழிலாளி ஒருவர் குழந்தையை காப்பாற்றியுள்ளதுடன், அந்த குழந்தை குருநாகல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறது.

சிறுமியை இறால் வளர்ப்புத் தொட்டிக்குள் தள்ளியதாக கூறப்படும் 20 வயதுடைய தாய் உடப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எனினும், குழந்தை தொட்டியில் தவறி விழுந்ததாக சந்தேக நபரான தாய் பொலிஸாரிடம் ஏற்கெனவே தெரிவித்திருந்த போதிலும், இறால் பண்ணையின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவான காட்சியை அவதானித்தபோது சந்தேக நபர் தனது குழந்தையை கையால் பிடித்துத் தள்ளுவது தெளிவாக புலப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply