ஆப்கானிஸ்தானில் முந்தைய அரசாங்கக் காலத்தில் வழங்கப்பட்ட விவாகரத்துகளை தலிபான்கள் ரத்துச் செய்ததால், கொடூரமான தமது முன்னாள் கணவர்மார்களுடன் மீண்டும் இணைந்து வாழ தாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பெண்கள் பலர்  தெரிவித்துள்ளனர்.

40 வயதான மார்வா எனும் பெண்ணுடன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏஎவ்பி செய்திச் சேவை இது தொடர்பாக உரையாடியுள்ளது.

தனது கணவனால் தாக்கப்பட்டு, தனது  அனைத்து பற்களும் உடைந்துவிட்டதாக அப்பெண் கூறியுள்ளார்.

அமெரிக்க அரசின் ஆதரவுடனான முந்தைய அரசாங்க காலத்தில், மார்வாவுக்கு விவகாரத்து வழங்கப்பட்டது.

ஆனால், அவரின் விவாகரத்தை தலிபான்கள் ரத்துச்  செய்ததால், தனது 8 பிள்ளைகளுடன் தலைமறைவாகும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு தலிபான்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், தனக்கு பலவந்தமாக விவாகரத்து வழங்கப்பட்டதாக மார்வாவின் கணவர் கூறினார். அதையடுத்து அந்நபருடன் மீண்டும் இணைந்து வாழுமாறு அப்பெண்ணுக்கு தலிபான்கள் உத்தரவிட்டனராம்.

‘என் மகள்களும் நானும் அன்று அதிகமாக அழுதோம். பிசாசு மீண்டும் வந்துவிட்டது என நான் எனக்கு நானே கூறிக்கொண்டேன்’ என ஏஎவ்பியிடம் 40 வயதான மார்வா கூறியுள்ளாhர்.

பல மாதங்களாக, தாக்குதல்கள், வீட்டில் அடைத்து வைக்கப்படுதல் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர் மார்வா.

‘எனது தலைமுடியை அவர் பலமாக இழுப்பதால் எனது தலை பகுதியளவு மொட்டையாகிவிட்டது. அவர் என்னை தாக்கியதால் என் பற்கள் அனைத்தும் உடைந்துவிட்டன. நான் மயக்கமடைந்த நாட்களும் உள்ளன. எனது மகள்கள் எனக்கு உணவு அளிப்பார்கள்’ என மார்வா கூறியுள்ளார்.

பின்னர் தனது 6 மகள்கள், 2 மகன்களுடன் பலநூறு கிலோமீற்றர் தூரத்திலுள்ள உறவினர் வீடொன்றுக்கு மார்வா தப்பிச் சென்றார்.

தாம் அங்கு இருப்பதை கணவர் கண்டுபிடித்துவிடக்கூடும் என்ற அச்சத்தில், அவர்கள் அனைவரும் வேறு பெயர்களை பயன்படுத்த ஆரம்பித்தனர்.

”நாம் பட்டினியாக இருந்தாலும் பரவாயில்லை. துஷ்பிரயோகங்களிலிருந்து நாம் விடுபட்டுள்ளோம்’ என என் பிள்ளைகள் கூறுகின்றனர். நாம் இங்கே இருப்பதை எமது அயலவர்கள் உட்பட எவருக்கும் தெரியாது’ என்கிறார் மார்வா.

ஆப்கானிஸ்தானிலுள்ள ஐநா அலுவலகத்தின் தகவல்களின்படி, அந்நாட்டில் பத்தில் ஒன்பது பெண்கள் தமது கணவரினால் உடல், உள அல்லது பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொண்டுள்ளனர்.

ஆனால், துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகுவதைவிட விவாகரத்து விலக்கப்பட்ட ஒன்றாக அங்கு கருதப்படுகிறது.

விழிப்புணர்வு அதிகரித்த நிலையில், கொடுமையான தமது கணவரிடமிருந்து விவாகரத்து பெறுவது சாத்தியம் என பெண்கள் உணர ஆரம்பித்தனர்.

கணவன், மனைவி இடையே நல்லிணக்கம் இல்லாவிட்டால், விவாகரத்து செய்ய இஸ்லாமும் அனுமதிக்கிறது என சட்டத்தரணி நஸீபா கூறுகிறார். நூற்றுக்கணக்கான பெண்களுக்கு விவகாரத்து பெற்றுக்கொடுத்தவர் இவர். ஆனால், இப்போது அவர் பணியாற்ற தலிபான்கள் அனுமதிக்கப்படவில்லை.

முந்தைய ஆட்சிக்காலத்தில் விசேட குடும்ப நீதிமன்றங்களில் நீதிபதிகள், சட்டத்தரணிகளாக பெண்களும் பணியாற்றினர். ஆனால், தலிபான்களின் ஆட்சியில் நீதித்;துறை முற்றிலும் ஆண்கள் விடயமாக உள்ளது.

தனது முன்னாள் சேவைப் பெறுநர்களில் ஐவர், மார்வாவின் நிலையில் உள்ளனர் என நஸீபா கூறியுள்ளார்.

தன்னை அடையாளம் காட்டவிரும்பாத மற்றொரு பெண் சட்டத்தரணி ஏஎவ்பியிடம் பேசுகையில், தன்னை முன்னாள் கணவனுடன் மீண்டும் இணைந்து வாழ நிர்ப்பந்திப்பதற்கு எதிராக பெண்ணொருவர் போராடிய வழக்கு விசாரணையை தான் அவதானித்ததாக கூறியுள்ளார்.

தலிபான்களின் அரசாங்கத்தில், கணவன் போதைப்பொருளுக்கு அடிமையானவராக அல்லது நாட்டைவிட்டு வெளியேறியவராக இருந்தால் மாத்திரமே விவாகரத்து கிடைக்கிறது என அச்சட்டத்தரணி கூறியுள்ளார்.

குடும்ப வன்முறைகள் காரணமாகவோ, விவாகரத்துக்கு கணவன் சம்மதிக்காவிட்டாலோ நீதிமன்றம் விவாகரத்து வழங்குவதில்லை என்கிறார் அவர்.

சனா எனும் பெண் 15 வயது சிறுமியாக இருந்தபோது, தன்னைவிட 10 வயது அதிக வயதுடையவரை திருமணம் செய்தவர்.

‘குழந்தை அழுதால் அல்லது உணவு நன்றாக இல்லாவிட்டால் அவர் என்னை அடிப்பார்’ என்கிறார் சனா. இவரும் தற்போது பிள்ளைகளுடன் ஒளிந்து வாழ்கிறார்.

இலவச சட்ட சேவைத் திட்டம் ஒன்றின் ஊடாக நீதிமன்றில் வழக்குத் தொடுத்து விவாகரத்து பெற்றவர் சனா. ஆனால், அவரின் நிம்மதி தலிபான்கள் திரும்பிவந்தபின் நீடிக்கவில்லை.

தனது 4 மகள்களின் பராமரிப்பு உரிமையை இழக்க விரும்பாமல் முன்னாள் கணவருடன் மீண்டும் இணைந்து வாழ ஆரம்பித்தார் சனா. அவ்வேளையில் அக்கணவர் மற்றொரு பெண்ணையும்  முன்னாள் கணவர் திருமணம் செய்திருந்தார்.

தலிபான் அங்கத்தவர்களுக்கு தமது மகள்மாரை திருமணம் செய்வதற்கு நிச்சயதார்த்தம் செய்வதாக கணவர் அறிவித்தபோது, பிள்ளைகளுடன் சனா தப்பிச் சென்றார்.

‘ஒவ்வொரு தடவை கதவு தட்டப்படும் வேளையிலும், அவர் என்னைக் கண்டுபிடித்து, பிள்ளைகளை கொண்டு செல்வதற்காக வந்துவிட்டார் போலும் என நான் அச்சமடைவேன்’ என சனா கூறுகிறார்.

ஏற்கெனவே விவாகரத்து செய்த பெண்கள் முன்னாள் கணவருடன் இணைந்து வாழ நிர்ப்பந்திக்கப்படும் விடயம் குறித்து முறைப்பாடு கிடைத்தால் அதிகாரிகள் ஆராய்வர் என தலிபான்  உச்சநீதிமன்ற பேச்சாளர் இனாயதுல்லாஹ், ஏஎவ்பியிடம் கூறியுள்ளார்.

முந்தைய அரசாங்கத்தின் கீழ் வழங்கப்பட்ட விவாகரத்துககளை தலிபான் அரசாங்கம் ஏற்றுகொள்ளுமா என கேட்டபோது, ‘இது ஒரு முக்கியமான, சிக்கலான விடயம். தாருல் அல் இப்தா இதை ஆராய்கிறது’ என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மார்வாவும் அவரின் மகள்மாரும் தையல்தொழில் மூலம் வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர்.

‘எனது மகள்களை திருமணம் செய்துகொள்ள வைக்க என்னால் முடியாமல் போகலாம் என நான் அஞ்சுகிறேன். ‘உங்கள் வாழ்க்கை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை நாம் கண்டோம். கணவன் எனும் சொல்லை நாம் வெறுக்கிறோம்’ என அவர்கள் கூறுகிறார்கள் என்கிறார் மார்;வா.

Share.
Leave A Reply