சில நாடுகளில் மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போது வரதட்சணை கொடுப்பது வழக்கம்.
சீனாவில் இதற்கு சற்று வித்தியாசமான பாரம்பரியம் உள்ளது. அந்த மரபின்படி, இளம் பெண்ணை மணக்கும் இளைஞன், மணமகளின் பெற்றோருக்கு ‘வரதட்சணை’ கொடுக்க வேண்டும்.
சீனாவில், மிக வேகமாக குறைந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், திருமணத்திற்காக மணமகள் வீட்டாருக்கு, மணமகன் பல இலட்சம் ரூபாய் வரதட்சணை தரும் பாரம்பரிய நடைமுறைக்கு முடிவுகட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் தொகை சரியத் தொடங்கியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில், மிக மோசமான மக்கள் தொகை சரிவை நாடு சந்தித்து வருவதாக சீன அரசு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை சீன அரசு எடுத்து வருகிறது.
இதற்கு பல புதுமையான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவிக்கும்படி மாநில அரசுகளுக்கு சீன அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் பகுதியில் உள்ள பழக்க வழக்கங்களின் அடிப்படையில் பல சலுகைகளை அறிவிக்க தொடங்கியுள்ளன.
ஒரு பகுதியாக, திருமணத்துக்கான வரதட்சணை நடைமுறையை ஒழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருமண நிச்சயத்தின் போது, மணமகள் வீட்டாருக்கு மணமகன் வரதட்சணை தொகையை அளிக்க வேண்டும்.
மணமகனின் நேர்மை மற்றும் செல்வத்தை மணமகள் வீட்டாருக்கு உணர்த்தவும், இத்தனை ஆண்டுகள் பெற்றோர் தங்கள் பெண்ணை வளர்த்ததற்கான செலவை ஈடு செய்யவும் இந்த தொகை வழங்கப்படுகிறது.;
சீனாவில் நடக்கும் திருமணங்களில் நான்கில் மூன்று திருமணங்கள் இந்த பாரம்பரிய நடைமுறைப்படி நடப்பதாக சமீபத்தில் நடந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த வரதட்சணையை அளிக்க வசதி இல்லாத ஆண்கள் திருமணத்தை தள்ளிப் போட்டு வருகின்றனர்.
இதனால் திருமணம் செய்து கொள்வோர் விகிதமும் கணிசமாக குறைந்துள்ளன. மக்கள் தொகை சரிவுக்கு இதுவும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
எனவே, இந்த வரதட்சணை நடைமுறைக்கு முடிவு கொண்டு வர சீன அரசு முடிவு செய்துள்ளது. வரதட்சணை வேண்டாம் என அறிவிக்கும் மணமகள் வீட்டாரை, ‘சிறந்த பெற்றோர்’ என, கௌரவித்து, பரிசு வழங்கும் அறிவிப்புகளையும் சில மாநிலங்கள் நடைமுறைப்படுத்தி உள்ளன.
ஜியாங்ஸி மாகாணத்தில் உள்ள ஒரு நகரத்தில், ‘வரதட்சணை கேட்க மாட்டோம்’ என, திருமணம் ஆகாத பெண்களிடம் கடிதம் எழுதி கையெழுத்து வாங்கி உள்ளனர்.
மேலும், ‘நாங்கள் மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறோம்; வரதட்சணையை அல்ல’ என்ற வாக்கியத்துடன், நுாற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு மகளிர் தினத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இதை தவிர, பிறந்த குழந்தைகளுக்கான மானிய தொகையை அரசு அதிகரித்துள்ளது, திருமணத்துக்கு வழங்கப்படும் விடுப்பு நாட்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றுக் கொள்ளப்படும் குழந்தையை முறைப்படி பதிவு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.