மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமைந்த உலகளாவிய ரீதியில் காணப்படும் ஆயிரத்தெட்டு சிவன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும், இலங்கையின் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமான கீரிமலை ஆலயம் தற்போது முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆலயம் அமைந்திருந்த பகுதியில் மண்டபமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஆலயத்தை அண்மித்துள்ள கிருஷ்ணன் ஆலயத்தின் பரிபாலன சபைத் தலைவர் கதிரவேலு நாகராசா தெரிவித்தார்.
கீரிமலை பகுதியிலுள்ள மலைத் தொடரில் அமைக்கப்பட்ட மண்டபமானது, 2013ம் ஆண்டு ஜனாதிபதி மாளிகைக்காக அமைக்கப்பட்ட கட்டடமாகும்.
இலங்கையில் சுமார் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது, இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதி முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக 1990ம் ஆண்டு காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தின் கீரிமலை பகுதியை ராணுவத்தின் முழுமையாக தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மிகவும் உயரமான பகுதி இதுவென அறியப்படுகின்றது.
இதனால், போர் இடம்பெற்ற காலப் பகுதியில் குறித்த பகுதியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ராணுவத்தினர், அந்த பகுதியை அதிவுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியிருந்தனர்.
குறித்த பகுதிக்குள் கடந்த 32 வருட காலப் பகுதியாக எவரையும் செல்ல பாதுகாப்பு பிரிவினர் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில், குறித்த பகுதியானது, தற்போது கடற்படையினர் வசம் காணப்படுகின்ற நிலையில், அந்த பகுதியிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய தரப்பிற்கு ஆலோசனை வழங்கியிருந்தது.
இதன்படி, குறித்த பகுதியிலுள்ள காணிகள் சில அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில், மேலும் பல பகுதிகள் தொடர்ந்தும் அதிவுயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகின்றது.
இவ்வாறு அதிவுயர் பாதுகாப்பு வலயமாக காணப்படும் கீரிமலை பகுதியிலேயே, கீரிமலை ஆலயமும் அதனை அண்மித்துள்ள பல ஆலயங்களும் அமைந்துள்ளன.
கீரிமலை பகுதியிலுள்ள ஆலயங்களை விடுவிக்குமாறு அந்த பகுதியிலுள்ள மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், குறித்த பகுதியிலுள்ள கிருஷ்ணன் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களை, கடற்படையினர் அண்மையில் அங்கு அழைத்து சென்றிருந்தனர்.
குறித்த பகுதி பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட நாளுக்கு பின்னர், அதாவது 32 வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாக பொதுமக்கள் கீரிமலை ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு ஆலய வளாகத்திற்குள் சென்ற ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்ததாக கிருஷ்ணன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் கதிரவேலு நாகராசா தெரிவித்தார்.
இந்த ஆலயம் மற்றும் அதன் வளாகம் தற்போது எவ்வாறு உள்ளது?
”1990-ஆம் ஆண்டுக்கு பிறகு இன்று தான் அந்த ஆலயத்தை முழுமையாக எங்களால் பார்ககக்கூடியதாக இருந்தது.
1990-ஆம் ஆண்டுக்கு முதல் 1983ம் ஆண்டு எங்களுடைய நாராயணன் ஆலயம் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்று, தொடர்ந்து 7,8 வருடங்களாக விசேட பூஜைகள், வழிபாடுகள், திருவிழாக்களை செய்துக்கொண்டு வந்தோம்.
90ம் ஆண்டுக்கு பின்னர் அவை அனைத்தையும் நிறுத்தி, இன்று தான் அந்த ஆலயத்திற்குள் சென்று முழுமையாக பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
இன்று இந்த ஆலயத்தை பார்க்கின்ற போது, 90ஆம் ஆண்டுக்கும் இன்றைய நிலைமையையும் பார்க்கின்ற போது, மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது.
எங்களுடைய ஆலயத்தில் எல்லா பகுதியிலும் மரங்கள் வளர்ந்திருக்கின்றன. ஆதிமூலத்திற்கு ஊடாக எல்லாம் வந்து, அந்த கட்டிடத்தையே வெடிக்க செய்து, ஆலயத்தை முழுமையாக புனர்நிர்மானம் செய்யக்கூடிய நிலையில் தான் எங்களுடைய ஆலயங்கள் இருக்கின்றன.
அதேபோல, எமது ஆலயத்திற்கு வடக்கு புறமாகவுள்ள சடையம்மா சமாதி முழுமையாக அழிக்கப்பட்டு, அங்கு சில கட்டிடங்கள் மட்டும் தான் மிஞ்சியிருக்கின்றது.
அந்த கட்டிடங்களும் பற்றை காடாக தான் இருக்கின்றன. எமது ஆலயத்திற்கு வடக்கு பக்கமாக இருக்கின்ற நன்னீர் நீர்தடாகம்.
கடலுடன் அண்மித்து இந்த நன்னீர் நீர்தடாகம் இருக்கின்றது. அந்தியெட்டி மற்றும் பிதிர்; கடன் கிரியைகளை செய்வோர் அங்கு வந்து, அந்த நீர் தடாகத்தில் தான் குளித்து வழிபடுவார்கள்.
அந்த நீர்தடாகம் எல்லாம் உடைந்து கற்கள் நிறைந்ததாக இப்போது காணப்படுகின்றது. இது அனைத்தையும் புனர்நிர்மானம் செய்ய வேண்டிய நிலையில் தான் இருக்கின்றது.” என அவர் கூறினார்.
கிருஷ்ணன் ஆலயத்திற்கு வடக்கு புறமாக உள்ள மலைப் பகுதியே உண்மையான கீரிமலை பகுதி என அடையாளப்படுத்தப்படும் என்கின்றார் கிருஷ்ணன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் கதிரவேலு நாகராசா.
”இந்த கீரிமலையானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 50 அடி உயரத்திலே மலை பிரதேசம் இருக்கின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அவ்வளவு உயரமான பிரதேசத்தை எங்கும் காண முடியாது.
எங்களுடைய கீரிமலையில் தான் உயரமான பிரதேசத்தை காண முடியும். 30, 32 வருடங்களின் பிறந்தவர்களுக்கோ அல்லது அதற்கு முன்னர் பிறந்த சிலருக்கோ அந்த மலையை பார்த்திருக்க முடியாது.
இந்த மலையில் ஒரு குகை இருக்கின்றது. இந்த குகையில் ஞானிகள் வந்து தியானம் செய்ததாகவும், பூஜைகள் செய்ததாகவும் அப்போது கூறப்படும்.
மலை உச்சி பகுதியில் சிவலிங்கம் ஒன்று காணப்பட்டது. அந்த சிவலிங்கம் தற்போது தரைமட்டமாக்கப்பட்டு, அந்த இடத்தில் தற்போது பாரிய மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. கிருஷ்ணன் ஆலயமும் தற்போது சீரழிந்திருக்கின்றது.
அந்த ஆலயத்தை புனரமைப்பதற்கான வழி வகைகளை நாங்கள் தேட வேண்டியுள்ளது. மலை உச்சியில் இருந்த சிவலிங்கத்தையே உண்மையாக கீரிமலை சிவலிங்கம் என்று முன்னோர்கள் சொல்வார்கள்” என அவர் குறிப்பிட்டார்.
கீரிமலையில் காணப்பட்ட ஆலயங்கள் மற்றும் கட்டடங்கள்
• சிவலிங்கம்
• மலை பிள்ளையாளர் என்ற பிள்ளையார் சுவாமி ஆலயம்.
• சடையம்மா சமாதி
• சடையம்மா சமாதிக்குள் இரண்டு பெரிய ஆலயங்கள் இருந்தன.
• சமாதிக்கு அருகில் அந்தியெட்டி கிரியைகளை செய்யும் மண்டபம்.
• கிணறு (இப்போதும் அந்த கிணறு இருக்கின்றது)கிருஷ்ணன் ஆலயம்
• கதிரை ஆண்டவர் ஆலயம்.
• சோழ வைரவர் ஆலயம்
• காளி ஆலயம்
• முருகன் ஆலயம்
• ஐயனார் ஆலயம்.
கீரிமலை பகுதியிலுள்ள சுவாமி விக்கிரகங்களின் நிலைமை என்ன?
”எமது கிருஸ்ணன் ஆலயத்தை பொருத்த வரையில், நாங்கள் அங்கிருந்து வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக எழுந்தருளி மண்டபம் கட்டியிருந்தோம்.
அந்த மண்டபம் முழுமையாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு பக்கத்திலிருந்த நாகதம்பிரான், சுற்று மதில்கள் எல்லாம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
உள்ளே ஆலயமும், சுற்றுபுற ஆலயங்களும் அப்படியே இருக்கின்றன. பிள்ளையார், நாகதம்பிரான் விக்கிரகங்கள் அங்கு இல்லை.
முருகன் விக்கிரமும், சில விக்கிரகங்களும் இருக்கின்றன. மற்ற சில விக்கிரகங்களை காணவில்லை.
ஆதிமூலத்திலே இருக்கின்ற சுவாமி அப்படியே இருக்கின்றார். ஸ்ரீதேவி, பூதேவியோடு அப்படியே இருக்கின்றார்.
ஆனால், ஆலயத்தின் மீது வேர்கள் ஓடி, மரங்கள் வளர்ந்து, உருகுலைந்திருக்கின்றது.” என அவர் கூறுகின்றார்.
ஆலயம் அதிவுயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்பட்ட போதிலும், இன்றும் அங்கு யாரோ வருகைத் தந்து வழிபாடுகளில் ஈடுபட்ட தடயங்கள் இருப்பதாக கிருஸ்ணன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் கதிரவேலு நாகராசா தெரிவிக்கின்றார்.
கீரிமலை ஆலய வளாகம், அரசாங்கத்தினால் விடுவிக்கப்படும் பட்சத்தில், அந்த ஆலயத்தை மீள புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க எண்ணியிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
கீரிமலை ஆலயத்தில் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதா? – ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பதில்
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் ஜனாதிபதி மாளிகைக்கான நிர்மாணப் பணிகள் 2013ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் 2015 இல் ஆட்சி மாற்றத்துடன் இடைநிறுத்தப்பட்டதாக வடக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் திசாநாயக்கவை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவு பிபிசி தமிழுக்கு தெரிவித்தது.
29 ஏக்கர் முழு நிலப்பகுதியில் ஒரு பகுதியிலே மாளிகை அமைந்துள்ளதோடு, மாளிகை நிர்மாணிக்கப்பட்ட பின்னர் கடற்படை அங்கு பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
இந்த மாளிகை மற்றும் ஆலயம் உள்ள பிரதேசம் 2022இல் அதிகாரப்பூர்வமாக இந்தப் பிரதேசம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டதாகவும் திசாநாயக்கவை மேற்கோள்காட்;டி ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.
கீரிமலை ஆலயம் அழிக்கப்பட்டு மாளிகை கட்டப்படவில்லை என்றும் திசாநாயக்க கூறியதாக தற்போதைய ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, சிவன் ஆலயமொன்று அங்கிருந்ததாகவும், அண்மையில் கிருஷ்ணன் ஆலய நிர்வாகிகள் அந்த ஆலயம் இருந்த பகுதிக்கு கடற்படையினருடன் சென்றதாகவும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறியை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவினர் கருத்து வெளியிட்டனர்.
”சிவன் ஆலயம் இருந்த இடத்தில் அன்றி அதற்கு அருகிலே ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்கப்பட்டுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
1990 வரை சிவன் ஆலயத்தில் பூஜைகள் இடம்பெற்றதாகவும் எக்காலப்பகுதியில் ஆலயம் உடைந்தது என்ற தகவல் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனியாருக்கு சொந்தமான காணி சுவீகரிக்கப்பட்டு அந்த இடத்திலே ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதாகவும், ஆலய காணி அதற்கு பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் ஆலயத்தின் பல பகுதிகள் சேதமடைந்து, ஆலயம் இருந்ததற்கான அடையாளங்கள் அங்கிருப்பதாக கிருஷ்ணன் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்.
கிருஷணன் ஆலயத்தின் சில பகுதிகளும் சேதமாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர், மாளிகை உட்பட சுற்றியுள்ள முழுமையான காணி நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழே கொண்டுவரப்பட்டுள்ளது” என ஜனாதிபதி தரப்பினர் கூறுகின்றனர்.
வடபகுதிக்குப் பொறுப்பான கடற்படை கட்டளைத்தளபதி அட்மிரல் அருண தென்னகோன் இது தொடர்பில் தெளிவுபடுத்துகையில், மாளிகையின் சொத்துக்களின் பாதுகாப்பிற்காக கடற்படை அங்கு இருப்பதாகவும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழே இந்த பிரதேசம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
கடற்படை பிரதான தளமும் இதற்கு அருகிலே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.
யாழ்ப்பாணம் இராணுவக்கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சொர்ண போதொட்ட குறிப்பிடுகையில், குறித்த பிரதேசத்தில் ஜனாதிபதி மாளிகைக்கான தேவையொன்று இல்லை என்பதை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் மேற்கொண்ட யாழ்ப்பாண விஜயத்தின்போது குறிப்பிட்டிருந்தார்.
இந்த மாளிகை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறந்த தரத்திலான ஹோட்டல் ஒன்றாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் யோசனை முன்வைத்திருந்தார்.
யாழ்ப்பாணம் முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் இந்த பிரதேசம் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இராணுவம் அங்கு எந்தவித நிர்மாணங்களை மேற்கொள்ளவோ அழிக்கவோ இல்லை என்றும் குறிப்பிட்டார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.