லங்கையில் மின்சார தேவை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் திட்டமானது நாட்டை தொடர்ந்தும் சிக்கலில் வைத்திருக்கும் சீனாவின் பரிசாகவே காணப்படுகிறது.

அது மாத்திரமன்றி, இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மின் கட்டண உயர்விலும் தாக்கம் செலுத்துவதாகவே உள்ளது.

தொடர்ந்தும் ஏற்படக்கூடிய செயலிழப்புகளால் மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் வீண் செலவீனங்களுக்கு வழிவகுப்பதுடன், அப்பகுதி மக்களுக்கும் இயற்கை வளங்களுக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவே நுரைச்சோலை அனல் மின் நிலையம் காணப்படுகிறது.

இது ஒரு நீண்ட நாள் பிரச்சினை என்பதுதான் உண்மையான நிலையாகும்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இருந்து ஆவியாகும் நச்சு அமிலங்கள் மற்றும் நிலக்கரி சாம்பல் அப்பகுதியில் வாழும் மக்களுக்கும் இயற்கைக்கும் பெரும் அச்சுறுத்தலாகியுள்ளது.

இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் புத்தளம், கற்பிட்டி கடற்பகுதியின் தெற்கு முனையில் உள்ள நுரைச்சோலையில் சீனா மிகப்பெரிய அனல் மின் நிலையத்தை ஸ்தாபித்துள்ளது.

இந்த அனல் மின் நிலையத்தினால் இயற்கைக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து சூழலியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். இன்று அதன் தாக்கம் அநுராதபுரம் வரை சென்றுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

ஸ்ரீ மஹா போதி மரம் அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஒரு புனிதமான மற்றும் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த மரமாகும்.

இந்த போதி மரம் இந்தியாவின் புனித போதி மரத்தின் கிளையிலிருந்து வளர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதன் கீழ் அமர்ந்தே சித்தார்த்த கௌதமர் (புத்தர்) ஞான நிலையை அடைந்தார் என்று கூறப்படுவதுடன், அப்புனித மரத்துக்குச் சென்று வணங்கும் பௌத்தர்களுக்கு இது குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் கருதப்படுகிறது.

ஆனால், சூழலியலாளர்களின் கூற்றுப்படி, ஆபத்தான அமில படிவுகளை சுமந்து செல்லும் மேகங்கள் புனிதமான ஸ்ரீ மஹா போதி மரம் அமைந்துள்ள அனுராதபுரத்தின் திசையில் நகரும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மின் உற்பத்தி நிலையத்துக்கு அருகில் மரங்கள் சேதத்தின் அறிகுறிகளை ஏற்கனவே காட்டத் தொடங்கியுள்ளன. இந்த வாயுக்களின் வெளியேற்றத்தால் உயரமான மரங்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியுள்ளன.

நச்சு உமிழ்வுகளின் விளைவு புனித மரத்தில் தோன்றத் தொடங்குவதற்கு நீண்ட காலம் ஆகாது என்பதே சூழலியலாளர்களின் அச்சமாகிறது.

இதனால் கடல் பகுதிகளிலும் அமிலத்தன்மை பரவி வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை மீண்டும் இலங்கையில் உருவாக்குவது சுற்றுச்சூழல் அமைப்புக்கு அச்சுறுத்தலாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

சீனக் குடியரசின் ஏற்றுமதி, இறக்குமதி  வங்கியின் உதவியுடன் இலங்கை மின்சார சபையின் முயற்சியாக நுரைச்சோலை அனல் மின் நிலையம் காணப்படுகிறது.

இலங்கையில் முதலாவது நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையம் மற்றும் மிகப் பெரிய மின் நிலையமாகவும் இது செயற்படுத்தப்படுகிறது.

நுரைச்சோலை அனல் மின் நிலையம் என்று அழைக்கப்படும் லக்விஜய மின் நிலையம் இலங்கையின் மொத்த மின்சார உற்பத்தியில் கணிசமான அளவை உற்பத்தி செய்கிறது.

கற்பிட்டி பகுதியில் உள்ள இந்த 900 மெகாவாட் நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் உமிழ்வுகள் அனுமதிக்கப்பட்ட தரத்தை விட அதிகமாக உள்ளது.

இதனால் அடிக்கடி ஏற்படும் செயலிழப்பு, இடைப்பட்ட செயற்பாடுகள் மற்றும் எதிர்பாராத விதமாக சாம்பலை திறந்த குழிகளில் சேமித்து வைத்தல் என பல நெருக்கடிகள் காணப்படுகின்றன.

மின் உற்பத்தி நிலையம் அதிகளவு திடக்கழிவுகள், வெப்பக் கழிவுகள் மற்றும் சூடான நீரை வெளியிடுவதால் நீர் மாசுபாடு ஆகியவற்றை உருவாக்குகிறது. இது நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளிவரும் உமிழ்வுகள் சுற்றுச்சூழல் மற்றும் அங்கு வாழும் மக்கள் மீது குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கங்களை உருவாக்கியுள்ளன.

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் முக்கிய ஆற்றல், ஆதாரம் நிலக்கரி ஆகும். இது மிகவும் குறைந்துபோன வளமாகும். நிலக்கரிச் சிதைவு என்பது ஓர் உலகளாவிய வெளிப்பாடாகும். இது ஆற்றல் தேவைகளுக்காக புதைபடிவ எரிபொருட்களை நம்பியிருக்கும் அனைத்து நாடுகளாலும் உணரப்படுகிறது.

கொதிகலன் நீர், மின்தேக்கி குளிரூட்டும் நீர் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு, மின் உற்பத்தி நிலையம் கடல் நீரைப் பயன்படுத்துகிறது.

அதிக நீர் வெளியேற்ற விகிதத்தின் காரணமாக கடல்வாழ் உயிரினங்கள், நுண்ணுயிரிகள், முட்டைகள் மற்றும் கடல் விலங்குகளின் இனப்பெருக்கம் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் அழிவதற்கு இது வழிவகுக்கும்.

அனல் மின் நிலையத்தை சூழவுள்ள பகுதிக்கு அருகில் கடல்வாழ் உயிரினங்கள் குறிப்பாக கடல் ஆமைகள் காணப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் ஏழு வகையான கடல் ஆமைகளில், ஐந்து ஆமைகள் புத்தளம்-கற்பிட்டி கரையோரப் பகுதியில் உள்ள கடற்கரையோரங்களில் கூடு கட்டுவதாக மக்கள் கூறுகின்றனர்.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி செயற்பாட்டின்போது உற்பத்தி செய்யப்படும் சாம்பல் மற்றும் கீழ் சாம்பல் ஆகியவை ஆலையின் முக்கிய சிக்கல்களாகும்.

முற்றமானது காற்றின் அரிப்பு மற்றும் கசிவு ஆகியவற்றுக்காக திறந்திருப்பதால், சாம்பல் திறந்தவெளியில் கொட்டுவது கவலைக்குரிய விடயமாகும்.

10 மைக்ரோனை விட சிறியதாக இருப்பதால், காற்றினால் எளிதில் தூக்கிச் செல்லப்பட்டு, விவசாயத்தை சீர்குலைத்து, நீர் ஆதாரங்களை மாசுபடுத்தி, பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் உள்ள பல சிறுவர்களுக்கு தோல் நோய்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல குழந்தைகளின் தோலில் தடிப்புகள் தோன்றியிருக்கும் திட்டுகள் காணப்படுகின்றன. பிறந்த குழந்தைகள் கூட இதிலிருந்து பாதுகாப்பாக இல்லை என்பதே இங்குள்ள உண்மையாகும்.

இப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலக்கரி தூசியை உள்ளிழுப்பது மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, ஆஸ்துமா, எம்பிஸிமா மற்றும் இதய நோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.

எனவே, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தினால் கடல் வளம், சூழல் மற்றும் மனித குலத்துக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து நீண்ட காலமாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், அதனை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

இதேபோன்றதொரு அனல் மின் திட்டத்துக்கான முயற்சிகள் தமிழர்கள் செறிந்து வாழும் சம்பூர் பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச மக்களின் எதிர்ப்பு மற்றும் ஊடகங்களின் அழுத்தத்தினால் திட்டம் கைவிடப்பட்டமை அந்த பகுதி மக்களின் அதிர்ஷ்டமாகும்.

(லியோ நிரோஷ தர்ஷன்)

Share.
Leave A Reply