வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து, கூகுளில் தகவல் தேடிய உளவுத்துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங்-உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுவருகிறது. அரசு கூறுவதை அந்த நாட்டு மக்கள் எந்தக் கேள்வியுமின்றி அப்படியே செய்ய வேண்டும்.
மீறினால் கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற சூழல் உருவாகியிருக்கிறது. மேலும், அந்த நாட்டில் குடிமக்கள் வெளி உலகத்தைப் பற்றி அறிந்துகொள்வதைத் தடுக்க இணைய அணுகலைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது.
பொதுமக்கள் இணையதளம் பயன்படுத்தவும் தடைசெய்யப்பட்டிருக்கிறது.
ராணுவ உயர் அதிகாரிகளும், உளவுத்துறையினரும் மட்டுமே இணையதளத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அதுவும், அவர்கள் இணையத்தில் என்னென்ன தேடுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க அரசு குழு ஒன்றை நியமித்திருக்கிறது.
அந்தக் குழு 10 துறைகளுக்கு இணைய அணுகலை வழங்கியிருக்கிறது. மேலும், முகவர்கள் தங்கள் தேடல், சொல், பதிவு ஆகியவற்றை முடக்கி, இணையத்தில் வடகொரியா விரும்பும் அளவுக்கு மட்டுமே தேட அனுமதிக்கிறது.
இந்த நிலையில், உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் அதிபர் கிங் ஜான் உன் குறித்து சாதாரணமாகக் கூகுளில் தேடிப் பார்த்திருக்கிறார்.
இந்தத் தகவலை இணையக்கட்டுப்பாட்டு அறை, அதிபர் கிம் ஜாங்-உன்-யிடம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருக்கிறது.
உடனே அவர் ,”என்னைப் பற்றி எப்படி இணையத்தில் தேடலாம்” எனக் கொந்தளித்து, உடனடியாக அந்த உளவுத்துறை அதிகாரிக்கு துப்பாக்கிப் படையினரால் மரண தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.
இது குறித்து வடகொரியாவிலுள்ள மனித உரிமைகளுக்கான குழுவின் இயக்குநர் கிரெக் ஸ்கார்லடோய் (Greg Scarlatoiu), “அதிபர் கிம் ஜாங்-உன் ஆட்சியில் தகவல் பரிமாற்றம் வீழ்ச்சியடைந்துவருகிறது.
கிம் ஆட்சியில் மிகவும் நம்பகமான முகவர்கள்கூட இப்போது வெளி உலகத்திலிருந்து தகவல்களை அணுக முயல்கின்றனர்.
கிம் குடும்ப ஆட்சி பெரும் வற்புறுத்தல், தண்டனை, கண்காணிப்பு, தகவல் கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் அதிகாரத்தைப் பலப்படுத்துகிறது.
வெளியுலகிலிருந்து நாட்டுக்குள் வரும் மிகக் குறைந்த தகவல்களும், அதிகாரத்தின் மீதான பிடிக்கு பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.