ஒரு நில அடுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடுக்குகளாகப் பிரிவதை அறிவியல், ‘நிலப் பிளவு’ என்கிறது.

இந்த நிலப் பிளவு நிலப்பரப்பு மற்றும் கடல் பரப்புகளிலும் ஏற்படலாம். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களும் இதுபோன்று பிரிந்துதான் தனித்தனி கண்டங்களாக உருவாகி இருக்கக் கூடும் என்கிறது புவியியல் ஆய்வுகள்.

அதைப் போலவே, இன்னும் சில லட்சம் ஆண்டுகளில் ஆப்பிரிக்காவும் இரண்டு துண்டுகளாகப் பிரிந்து வருவதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.

இயற்கையின் மிக அரிய நிகழ்வாக ஆப்பிரிக்கக் கண்டம் இரண்டாகப் பிரியத் தொடங்கி உள்ளது.

இந்த இரண்டு பிரிவுகளுக்கு மத்தியில் உருவாகிவரும் கடலின் அளவு எதிர்காலத்தில் சிறிது சிறிதாக அதிகரித்து, காலப்போக்கில் இரண்டு தனித்தனி பகுதிகளாகவே இந்தக் கண்டம் மாறும் அபாயம் உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

பல லட்சம் ஆண்டுகளாக இந்த நிலப்பரப்பையும் கடல் பரப்பையும் ஒன்றாகவே பகிர்ந்துகொண்டிருக்கும் ஸாம்பியா மற்றும் உகாண்டா நாடுகள் எதிர்காலத்தில் தனித்தனி கடற்பரப்புகளைக் கொண்டவைகளாக மாறப்போகிறது என்றும் கணிக்கப்படுகிறது.

பிரியும் இந்த இரண்டு பகுதிகளில் சோமாலியா, கென்யாவின் ஒரு பகுதி மற்றும் எத்தியோப்பியா, தான்சானியா ஆகிய நாடுகள் அடங்கி இருக்கும். ‘எத்தியோப்பியாவின் பாலைவனப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலப் பிளவு கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிக் கொண்டே வருகிறது.

இந்த நிலப்பிளவுக்குள் கடல் நீர் புகுந்து, காலப்போக்கில் புதிய கடலாகவே மாறும் என்றும், இங்கே இருக்கும் மூன்று நில அடுக்குகள் தனித்தனியாகப் பிரியத் தொடங்கிவிட்டதாகவும், இதனை சாதாரணமாகப் பார்த்தாலே தெரியும்’ என்றும் புவியியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த கண்ட நிலப்பிளவு உடனே நிகழ்ந்துவிடப்போவதில்லை. இதற்கு பல லட்சம் ஆண்டுகள் ஆகலாம்.

ஆனால் சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் இப்பகுதியைக் கடுமையாகத் தாக்கினால் இந்த நிலப்பிளவு வேகமாக நடைபெறும் என்றும் ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply