அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

நீதிமன்றத்தின் புதிய உத்தரவு யாருக்குச் சாதகமாக அமையும் என்ற விவாதம் தமிழ்நாடு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் எழுந்த கொந்தளிப்பு இன்னும் முழுமையாகத் தணியவில்லை.

எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வம் ஓரணியில் சேர்ந்து டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை ஓரங்கட்டிவிட்டு பின்னர் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டோ போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.

அது நிர்வாகிகள் மட்டத்தில் பிளவை உண்டாக்கியது மட்டுமின்றி, கட்சி விவகாரம் மீண்டும் நீதிமன்ற படியேறவும் வழிவகுத்தது.

இந்தப் போட்டியில், அதிமுக நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கிய நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பும் அவருக்குச் சாதகமாக அமைய, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வரிசையில் அக்கட்சியின் சக்தி வாய்ந்த ஒரே தலைமையாக உருவெடுக்க அவர் வேகம் காட்டினார்.

அதிமுக பொதுக்குழுத் தீர்மானம், ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உள்ளிட்ட அக்கட்சியின் பல பிரச்னைகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுகையில் இருக்கும்போதே, கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரென கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு மறுநாளே வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும், மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பு கூறியது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு

இதனால் துணுக்குற்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தத் தடை விதிக்கவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தனது மனுவில் கோரியிருந்தது.

நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்னிலையில் அந்த மனு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் அதற்குப் பதிலளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பும் வாதங்களை முன்வைத்தன.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.குமரேஷ்பாபு, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலைத் தொடர அனுமதி அளித்தார். ஆனால், தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது என்று அவர் உத்தரவிட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த பி.எச்.மனோஜ் பாண்டியனும் மற்றவர்களும் இடைக்கால நிவாரம் கேட்டுத் தொடர்ந்துள்ள இந்த வழக்கின் விசாரணை வரும் 22ஆம் தேதி தொடரும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற உத்தரவு யாருக்கு சாதகம்?

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடந்தாலும்கூட, அதன் முடிவை அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தங்களுக்கே சாதகம் என்று கூறி எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் என இரண்டு தரப்பும் கொண்டாடி வருவதால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பம் அடைந்துளளனர்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் அதிமுகவின் சக்தி வாய்ந்த தலைமையாக விரும்பிய எடப்பாடி பழனிசாமியின் வேகத்திற்கு, உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு முட்டுக்கட்டையாக அமையுமா? அல்லது அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி விழ வாய்ப்புள்ளதா?

அதோடு ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?

இந்தக் கேள்விகள் அதிமுக வட்டாரத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டு அரசியலையும் ஆக்கிரமித்துள்ளன.

 

Share.
Leave A Reply