டிரம்ப் கைதாவாரா? அமெரிக்காவில் பதற்றம்

பதவி, பிபிசி நியூஸ்

பாலியல் தொடர்பை மறைக்க நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைதாகக் கூடும் என்பதால் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் போலீசார் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைக்க, பெரும்பணம் கொடுத்து அவரை மௌனமாக்கியதாக கூறப்படும் புகாரின் பேரில் ட்ரம்ப் மீது மன்ஹாட்டன் அரசு வழக்கறிஞர் கிரிமினல் வழக்குப் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூயார்க், வாஷிங்டன் நகரங்களில் பலத்த பாதுகாப்பு

அவ்வாறு நடந்தால், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒருவருக்கு எதிராக குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படுவது முதன் முறையாக இருக்கும்.

மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்திற்கு வெளியே இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அங்கேதான், இவ்வாரம் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும், கைரேகைகள் பெறப்படும், புகைப்படங்களும் எடுக்கப்படும் என்று அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

நியூயார்க் நகரில் உள்ள ட்ரம்ப் டவர் கட்டடத்திற்கு வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் காவல்துறையின் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து காவலர்களும் முழு சீருடை அணிந்து பணியில் இருக்கவும், காவல்துறையின் ஒவ்வொரு அங்கத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுவதாக பிபிசியின் அமெரிக்கக் கூட்டாளியான சி.பி.எஸ். தெரிவித்துள்ளது.

டிரம்பை கைது செய்ய ஆயத்தமா?

கைது எவ்வாறு நடக்கக் கூடும் என்பது குறித்து அதிபர்கள் மற்றும் முன்னாள் அதிபர்களை பாதுகாக்கும் பணியில் இருக்கும் அமெரிக்க ரகசியப் படையுடன் நியூயார்க் காவல்துறையும், எப்.பி.ஐ.யின் பயங்கரவாத தடுப்புக் கூட்டுப்படையும் தொடர்பில் இருக்கின்றன.

தலைநகர் வாஷிங்டனில் கேப்பிட்டல் ஹில்லில் எம்.பி.க்களை பாதுகாக்கும் பணியில் உள்ள கேப்பிட்டல் போலீஸ், நெருக்கடி நிலையை பிரகடனம் செய்யும் என்று சி.பி.எஸ்.சுக்கு தகவல் கிடைத்துள்ளது.

மற்ற சட்ட அமலாக்கத்துறையினருடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பொருட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது.

சிவில் அதிகாரிகளும் கூட உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில், அந்நகர காவல்துறையும், பெடரல் அதிகாரிகளும் ட்ரம்ப் ஆதரவுப் போராட்டங்களை எதிர்கொள்ள தயாராகி வருவதாக லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று தாம் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பதாக டிரம்ப் இணையம் வாயிலாக சனிக்கிழமை கூறிய பிறகு, அரசு மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுக்கு ஆன்லைன் வாயிலாக மிரட்டல்கள் அதிகரித்திருப்பதை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படும் மன்ஹாட்டன் டிஸ்டிரிக்ட் அட்டர்னி ஆல்வின் பிராக்கிற்கு எதிராகவே பெரும்பாலான மிரட்டல்கள் வந்துள்ளன.

ஆதரவாளர்களை போராடுமாறு ட்ரம்ப் அழைப்பு விடுத்த அதே சனிக்கிழமையன்று? ஆல்வின் ப்ராக்கும் தனது ஊழியர்களுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளார்.

“அட்டர்னி அலுவலகத்தையோ அல்லது நியூயார்க்கில் சட்டத்தின் ஆட்சியையே அச்சுறுத்தும் முயற்சிகளை பொறுத்துக் கொள்ள மாட்டோம்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்சுடன் டிரம்ப் தொடர்பில் இருந்தார் என்பது சர்ச்சை. 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், அந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார்.

ஆனால், நடிகையுடனான தனது தொடர்பை மறைக்க தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலமாக ட்ரம்ப் ரூ.1.07 கோடி பணம் கொடுத்தார் என்பது குற்றச்சாட்டு. மைக்கேல் கோஹனுக்கு அந்த பணத்தை ட்ரம்ப் எவ்வாறு ஈடுகட்டினார் என்பதும் தற்போது விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறது.

மைக்கோல் கோஹனுக்கு டிரம்ப் அளித்த பணம் ‘வழக்கறிஞர் கட்டணம்’ என்று ஆவணங்கள் கூறுகின்றன.

ஆனால், அரசு வழக்கறிஞர்களோ, டிரம்ப் தனது பணப்பரிவர்த்தனை ஆவணங்களில் பொய்யாக பதிவு செய்திருப்பதாக வாதிடக் கூடும்.

நியூயார்க்கைப் பொருத்தவரை இது ஒரு தவறான நடத்தைதான். ஆனாலும், தீவிரமான வழக்காக மாற வழிவகுக்கும் வகையில், இது ஒரு குற்றமாக மாற்றப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஸ்டோர்மி டேனியல்ஸ் யார்?

ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ்

ஸ்டோர்மி டேனியல்ஸின் இயற் பெயர் ஸ்டெபானி கிளிஃபோர்ட்.

2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தயாராகி வந்த டொனால்ட் ட்ரம்ப் மீது அவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

2006-ம் ஆண்டு ஜூலையில் கோல்ப் காட்சிப் போட்டி ஒன்றில் ட்ரம்பை அவர் சந்தித்தாக ஊடக நேர்காணல்களில் அவர் கூறினார்.

கலிபோர்னியா – நெவேடா மாகாணங்களுககு இடையே லேக் டாஹோவில் உள்ள தனது ஓட்டல் அறையில் இருவரும் உடலுறவு கொண்டதாக அவர் கூறினார். அந்த வேளையில் அவரது குற்றச்சாட்டுகளை ட்ரம்பின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்தார்.

தனது குற்றச்சாட்டுகள் குறித்து மவுனம் காக்குமாறு ட்ரம்ப் கேட்டுக் கொண்டாரா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, “இதற்காக ட்ரம்ப் வருத்தப்படுவதாக தெரியவில்லை. அவர் கர்வமிக்கவர்” என்று ஸ்டோர்மி டேனியல்ஸ் பதிலளித்தார்.

ட்ரம்ப் – ஸ்டோர்மி டேனியல்ஸ் பாலுறவு நடந்ததாகக் கூறப்படும் கால கட்டத்தில் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் குழந்தையை பெற்றெடுத்திருந்தார்.

கைவிலங்கிடப்பட்டு ட்ரம்ப் அழைத்துச் செல்லப்படுவாரா?

முன்னாள் அதிபர் என்ற வகையில் ட்ரம்பின் பாதுகாப்புப் பணியில் இருக்கும் ரகசிய சேவைப் படையினர், கைது நடவடிக்கையின் போது உடனிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக என்.பி.சி. ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆனால், கைவிலங்கிடப்பட்ட சந்தேக நபர் பொதுவெளியில் பகிரங்கமாக அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படும் நடைமுறை இருக்காது எனறு அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

நடுவர் குழு விசாரணையில் நடந்தது என்ன?

திங்கட்கிழமையன்று, நடுவர் குழுவின் கடைசி விசாரணையின் போது, அரசு தரப்பு சாட்சியம் முன்வைத்த ஆதாரங்களை ட்ரம்பின் சட்டப்பூர்வ கூட்டாளி மறுதலித்தார்.

நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் உண்மையை மறைக்க பணம் கொடுத்ததை டிரம்ப் அறிவார் என்று கூறிய, அவரது முன்னாள் வழக்கறிஞர் மைக்கோல் கோஹனை ராபர்ட் காஸ்டிலோ இழிவுபடுத்த முயன்றார்.

2 மணி நேர வாக்குமூலத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த காஸ்டிலோ, “மைக்கேல் கோஹனின் தலையில் துபபாக்கியை வைக்காத வரை அவர் உண்மையைச் சொல்ல மாட்டார் என்று நடுவர் குழுவிடம் தெரிவித்தேன்” என்றார்.

நடிகைக்கு பணம் கொடுத்தது டிரம்பிற்குத் தெரியாது என்று ஒருமுறை தன்னிடம் மைக்கேல் கோஹன் கூறியதாக அவர் தெரிவித்தார்.

எம்.எஸ்.என்.பி.சி. ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் மைக்கோல் கோஹன், இதற்குப் பதிலடி கொடுத்தார். ராபர்ட் காஸ்டிலோவிடம் எந்தவொரு உண்மை உணர்வும் இல்லை என்று அவர் சாடினார்.

மீண்டும் அதிபராகும் முயற்சியில் டிரம்புக்கு பின்னடைவா?

இந்த வழக்கில் சேர்க்கப்பட்டாலும் கூட, 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராவதற்கான பிரசாரத்தை தொடரப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஆனால், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால் அதிபர் வேட்பாளராவதற்கான போட்டியில் இருந்து டிரம்ப் விலக வேண்டும் என்று 44 சதவீத குடியரசுக் கட்சியினர் கூறுவதாக ராய்ட்டர்ஸ் – இப்சாஸ் (Reuters/Ipsos ) கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

 

Share.
Leave A Reply