•விஜய் ஷர்மா வீட்டில் வளர்த்து வந்த அவரது செல்ல கிளி நீலம் ஷர்மாவின் கொலைக்கு பிறகு சாப்பிடாமல் அமைதியாக இருந்தது.

•விஜய் ஷர்மா கொலையை கிளி நேரில் பார்த்திருக்கலாம் என சந்தேகப்பட்டார்.

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த விஜய் ஷர்மா என்பவரது மனைவி நீலம் ஷர்மா கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

விஜய் ஷர்மா தனது மகன், மகளுடன் வெளியே சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த நீலம் ஷர்மாவை மர்மநபர்கள் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் கொலையாளிகள் பற்றி எந்த தடயமும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் விஜய் ஷர்மா வீட்டில் வளர்த்து வந்த அவரது செல்ல கிளி நீலம் ஷர்மாவின் கொலைக்கு பிறகு சாப்பிடாமல் அமைதியாக இருந்தது.

இதைப்பார்த்த விஜய் ஷர்மா கொலையை கிளி நேரில் பார்த்திருக்கலாம் என சந்தேகப்பட்டார்.

இதனால் அவர் சந்தேகப்படும் சில நபர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக கிளியிடம் கூறினார்.

அப்போது அவர் தனது மருகமன் ஆசு பெயரை கூறிய போது கிளி ஆவேசமடைந்து ஆசு.. ஆசு… என கத்தியது. இதுகுறித்து விஜய் ஷர்மா போலீசாரிடம் கூறினார்.

உடனே போலீசாரும் கிளி முன்பு பலரின் பெயர்களை கூறிய நிலையில் ஆசுவின் பெயரை கூறிய போது மட்டும் கிளி கத்தியது.

இதையடுத்து போலீசார் ஆசுவை பிடித்து விசாரித்தனர். அப்போது ஆசு தனது நண்பர் ரோனியுடன் சேர்ந்து நீலம் ஷர்மாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் சிறப்பு நீதிபதி முகமது ரஷீப் தீர்ப்பு கூறினார்.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஆசு, ரோனி மாசி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் 2 பேருக்கும் தலா ரூ.72 ஆயிரம் அபராதம் விதித்தும் அவர் தீர்ப்பு கூறினார்.

 

Share.
Leave A Reply