அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைதானதாக சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் கடந்த ஒரு வாரமாகப் பரவி வருகின்றன.

ஆபாசப் பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்ததாகக் கூறப்படும் புகாரில் அவர் கைதானதாக பலரும் இந்த புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தனர். ஆனால், உண்மையில் அவர் மீது இன்னும் எந்தக் குற்றச்சாட்டுகளும் எதுவும் பதிவாகவில்லை.

அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்த பலரும், அவை போலியானவை என்பதை குறிப்பிட்டுள்ளனர். மற்றவர்களை அவர்கள் முட்டாள்களாக்க நினைப்பது போல் தோன்றவில்லை. ஆனாலும், சிலர் ஏமாற்றப்பட்டதாகத் தெரிகிறது.

கடந்த வியாழனன்று, டிரம்பே கூட தனது ட்ரூத் சமூக ஊடகப் பக்கத்தில், இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி புகைப்படங்களைப் பகிர்ந்தார். அவர் முட்டி போட்டு பிரார்த்தனை செய்வது போல் அந்தப் புகைப்படம் சித்தரித்திருந்தது.

இப்படியாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் படங்களை அடையாளம் காண்பதற்கான அறிகுறிகள் என்ன? போலி மற்றும் உண்மையான புகைப்படங்களை எவ்வாறு வேறுபடுத்தலாம்?

ஏதேனும் விசித்திரமாகத் தோன்றுகிறதா?

ஆன்லைனில் பரவும் படங்கள் பலவும் மேலே உள்ளதைப் போலவே, மிக யதார்த்தமாகத் தெரிகின்றன. இவை நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்த புகைப்படங்களைக் காட்டிலும் அரங்கேற்றப்பட்ட கலைக் காட்சிகளைப் போன்றவை.

உன்னிப்பாகக் கவனித்தால், ஏதோ சரியாக இல்லை என்பது தெரிய வருகிறது.

படத்தின் மையத்தைப் பாருங்கள். டிரம்பின் கை மிகவும் குட்டையாக உள்ளது. இடதுபுறத்தில் உள்ள போலீஸ் அதிகாரி மனித கையைவிட நகத்தை ஒத்த ஒன்றைப் பிடித்திருப்பதைப் போலத் தோன்றுகிறது.

இதேபோல், நீங்கள் டிரம்பின் கழுத்தை உற்று நோக்கினால், அவரது தலை படத்தின் மேல் பொருத்தப்பட்டது போல் இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.

செயற்கை நுண்ணறிவு நிபுணரும், பிபிசி வானொலி தொடரான ‘The Future Will be Synthesised’ -இன் தொகுப்பாளருமான ஹென்றி அஜ்டர், தற்போதைய தொழில்நுட்பம் சில உடல் பாகங்களை, குறிப்பாக கைகளைச் சித்தரிப்பதில் சிறப்பாக இல்லை என்கிறார்.

“படங்களைப் பெரிதாக்கினால், விரல்களின் எண்ணிக்கை போன்ற விஷயங்களில் முரண்பாடுகளை நீங்கள் அடிக்கடி காணலாம்,” என்று அவர் கூறுகிறார்.

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஒரு சில செய்தித் தளங்களைச் சரிபார்ப்பதே, டிரம்ப் கைது செய்யப்படவில்லை அல்லது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கான வழி. இதுவரை அது நடக்கவில்லை.

டிரம்ப் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டால், அவரது கைது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக மாறும். காவல்துறையினரிடம் இருந்து முன்னாள் அதிபர் ஒருவர் தப்பிச் சென்றால் ஊடகங்கள் எவ்வளவு தூரம் அலைமோதும் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம்.

மற்றொரு நல்ல யோசனை என்னவென்றால், ஒரு படம் பகிரப்படும் சூழலைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

அதை யார் பகிர்கிறார்கள்? அவர்களின் நோக்கங்கள் என்ன?

புகைப்படங்கள் உண்மையானவையா என்பதைச் சரிபார்க்காவிட்டாலும், மக்கள் தங்கள் பரந்துபட்ட அரசியல் பார்வையை விரிவாக்கவே படங்களைப் பெரும்பாலும் பகிர்ந்து கொள்வதாக அஜ்தர் கூறுகிறார்.

“அது ஒரு மோசமான செய்கை. இதனால் பெரிய அளவில் யாரும் முட்டாளாக்கப்படவில்லை என்றாலும் பலரும் அதை நம்ப விரும்பினர்,” என்று அவர் கூறினார்.
போலி புகைப்படங்களும் உண்மையும்

புகைப்படங்களை உன்னிப்பாகப் பார்த்தால், சந்தேகத்திற்குரிய மேலும் பல விவரங்கள் வெளிப்படும்.

இயற்கைக்கு மாறான தோல் நிறங்கள் மற்றும் மெழுகு அல்லது மங்கலான அம்சங்களைக் கொண்ட முகங்கள் ஆகியவை இந்தப் படம் போலியானது என்பதைக் காட்டும் வலுவான அறிகுறிகள்.

மேலே உள்ள படத்தில், மத்திய-வலதுபுறத்தில் மங்கலான முகத்துடன் ஒரு நபர் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. டிரம்பின் முகத்தை மையப்படுத்திய புகைப்படத்தில் அவரது தலைமுடி மங்கலாகத் தெரிகிறது.

கண்களைத் துல்லியமாகச் சித்தரிக்கும் அளவுக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இன்னும் வளரவில்லை.

மேலே உள்ள படத்தில், அதிகாரிகள் டிரம்பை துரத்துவது போல் தெரிகிறது. ஆனால் அவர்களது பார்வை முற்றிலும் மாறுபட்ட திசையில் இருக்கிறது.
போலிகளை இனம் காண்பது எதிர்காலத்தில் இன்னும் கடினமாகலாம்?

போலி புகைப்படங்கள் பரப்பப்படுவது புதிதல்ல என்றாலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதிவேகமான வளர்ச்சியும் அது தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியங்களும் கவலை தருவதாக பிபிசியிடம் பேசிய அந்தத் துறையின் நிபுணர்கள் கூறுகின்றனர்.

“செயற்கையான புகைப்படங்கள், தகவல்கள் அதிவேகமாக உருவாகின்றன. உண்மையான மற்றும் போலி புகைப்படங்களுக்கு இடையிலான இடைவெளியைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாகி வருகிறது,” என்கிறார் டிஜிட்டல் தகவல் பகுப்பாய்வு நிறுவனமான Truepic-இல் பணிபுரியும் மௌனிர் இம்ராகிம்.

டிரம்ப் அடைந்துள்ள புகழ், இதுபோன்ற போலிகளை எளிதாகக் கண்டறிய உதவுகிறது என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் தெரியாத நபர்களின் புகைப்டங்கள் பணியை மிகவும் கடினமாக்கலாம். தொழில்நுட்பம் இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பானதாக மாறி வருகிறது.

 

Share.
Leave A Reply