இலங்கையின் பிரசித்தி பெற்ற கீரிமலை பகுதியிலுள்ள சிவன் ஆலயமொன்று உடைக்கப்பட்டு, அந்த பகுதியில் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்ட சம்பவம் அண்மை காலத்தில் பதிவான பின்னணியில், தற்போது வவுனியா பகுதியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவன் ஆலயம் முழுமையாக இடித்தழிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்படுகின்றது.
வவுனியா – நெடுங்கேணி பகுதியை அண்மித்துள்ள வெடுக்குநாறி மலை பகுதியிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமே இவ்வாறு இடித்தழிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்ல கடந்த மூன்று வருட காலமாக தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.
அத்துடன், ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவிழாக்களை நடத்தவும் தடை விதிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.
”மூன்று தினங்களுக்கு முன்பு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இருக்கின்ற அனைத்து விக்கிரகங்களும் உடைத்தெறியப்பட்டுள்ளது. என்னை பொருத்தவரை படைத் தரப்பு இந்த செயலை செய்திருக்க வேண்டும்.
ஏனென்றால், தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன், வெடுக்குநாறி மலையை பௌத்த மயமாக்கி, அதனை விகாரையாக்குவதற்காக தான் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் முயற்சி செய்து வருகின்றார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவிக்கின்றார்.
வவுனியா வடக்கு பகுதியின் நெடுங்கேணி பிரதேசத்தில் இந்த வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது.
இந்த வெடுக்குநாறி மலையில் சுமார் 15 அடியை விடவும் உயரமான சிவலிங்கமொன்று காணப்படுவதாக ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் போசகர் வைரமுத்து பூபாலசிங்கம் தெரிவித்தார்.
இந்த சிவலிங்கம் சுயம்பு லிங்கமாகவே கருதப்படுவதாகவும் அவர் கூறுகின்றார். மலை உச்சியில் பல நூற்றாண்டு காலத்திற்கு முன்பிலிருந்து இந்த லிங்கம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
”2018ம் ஆண்டு தான் தொல்லியல் திணைக்களத்திற்கு தெரியும், தொல்லியலுடன் சம்பந்தப்பட்ட மலை என்று அதற்கு முன்னர் அவர்களுக்கு தெரியாது. அது தொல்லியலுக்கு வர்த்தமானி மூலம் அறிவிக்காத இடம். 2018ம் ஆண்டு அந்த மலையில் பூஜை செய்வதற்கு, வழிபாடு செய்வதற்கு எங்களுக்கு அனுமதி தந்தார்கள். 2019ம் ஆண்டு அந்த இடத்திற்கு செல்லக்கூடாது, பூஜை செய்யக்கூடாது என உத்தரவிட்டார்கள்.
தொல்லியலுடன் சம்பந்தப்பட்ட மலை, நீங்கள் போகக்கூடாது என சொல்லி எங்களை தடுத்தார்கள். பல நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் காணப்பட்ட சுயம்பு லிங்கம். அந்த காலத்தில் இருந்த அரசர்களாலயோ, யாரோலோ வணங்கப்பட்டது. அதில் கல்வெட்டுக்கள் எல்லாம் இருக்கின்றது. 30 வருட காலத்தில் அது அழிவடைந்திருந்தது. பின்னர் 2016ம் ஆண்டு நாங்கள் திரும்ப இந்த விக்கிரகங்களை கொண்டு வந்து வழிபட்டோம்.
சுயம்பு லிங்கத்தை யாராலும் எதுவும் செய்ய முடியாது. கற்களினால் செதுக்கப்பட்ட நாகதம்பிரான் சிலையொன்றும் இருக்கின்றது. அதையும் யாராலும் எதுவும் செய்ய முடியாது. நாக வடிவில் அந்த கல் செதுக்கி காணப்படுகின்றது. அந்த கல்லுக்கு கீழ், இன்றும் நாகங்கள் இருக்கின்றன.” என ஆலயத்தின் போசகர் வைரமுத்து பூபாலசிங்கம் குறிப்பிடுகின்றார்.
“ஆலயம் சிதைவடைந்திருந்ததை 26ம் தேதியே கண்டோம்”
இந்த ஆலயத்திற்கு கடந்த காலங்களில் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கடந்த 26ம் தேதியே ஆலயம் உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்ததாக ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் போசகர் வைரமுத்து பூபாலசிங்கம் தெரிவிக்கின்றார்.
”நாங்கள் அமைத்த பீடங்கள் மாத்திரமே இருக்கின்றன. விக்கிரகங்கள் ஒன்றும் இல்லை. சுயம்பு லிங்கம் இருக்கின்றது. சுயம்பு லிங்கத்தை யாராலும் அழிக்க முடியாது. நாகதம்பிரான் விக்கிரமும் இருக்கின்றது. மற்ற அனைத்து விக்கிரகங்களும் அழிக்கப்பட்டுள்ளன.” என அவர் கூறுகின்றார்.
யார் மீது சந்தேகம்? – ஆலய நிர்வாகத்தின் பதில்
இந்த சம்பவம் தொடர்பில் யார் மீது சந்தேகம் எழுந்துள்ளது என ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் போசகர் வைரமுத்து பூபாலசிங்கத்திடம் வினவியது.
ஆலயம் அழிக்கப்பட்டதை தாம் நேரில் காணாமையினால், எவர் மீதும் தம்மால் சந்தேகம் கொள்ள முடியாது என அவர் பதிலளித்தார்.
எனினும், தமது ஆலயம் அழிக்கப்பட்டமைக்கான பொறுப்பை, தொல்பொருள் திணைக்களம் மற்றும் போலீஸார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறுகின்றார்.
ஏனெனில், அலயத்திற்கு தம்மை செல்ல வேண்டாம் என குறித்த இரண்டு தரப்பினருமே தடுத்து நிறுத்தியதாகவும், அதனால் அவர்களே இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
வவுனியா – வெடுக்குநாறி ஆலயம் உடைக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கும், தமக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, தான் தொல்பொருள் திணைக்களத்திற்கும், நெடுங்கேணி போலீஸாருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
ஆலயம் அரசாங்கத்தினால் உடைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் குற்றச்சாட்டு தொடர்பில் வினவிய போது, அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அதற்கும் பதிலளித்தார்.
“ஆலயத்துடன் தொடர்புடையவர்கள் இதனை செய்திருக்க மாட்டார்கள். எனினும், ஆலயத்துடன் தொடர்புப்படாது வெளிநபர்களே இதனை செய்திருக்க வேண்டும் என நினைக்கின்றேன். சில பிரச்னைகளை உருவாக்க வெளிநபர்கள் இதனை செய்திருக்கக்கூடும். தொல்பொருள் திணைக்களத்திற்கு அதனை செய்ய வேண்டும் என்றால், பல இடங்களை அவ்வாறு செய்ய முடியும்.
எனினும், நாம் அவ்வாறு செய்ய மாட்டோம். ஆய்வுகளை செய்து, அதில் ஏதேனும் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அதன் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என கலந்துரையாடியுள்ளோம். உண்மைகளை உறுதிப்படுத்த வேண்டும். ஆய்வுகளை நடத்தாது, எதையும் கூற முடியாது. ” என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்ரமநாயக்க கூறினார்.
வெடுக்குநாறி ஆலயம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு உறுதி வழங்கியதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வவுனியாவில் நாளைய தினம் (30) திட்டமிட்டதன் பிரகாரம், பாரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா, பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இதேவேளை, வவுனியா – வெடுக்குநாறி ஆலயம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, போலீஸ் மாஅதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி, போலீஸ் மாஅதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
தானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்து இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக கூறிய ஜீவன் தொண்டமான், தானும் போலீஸ் மாஅதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெடுக்குநாளி மலை பகுதியில் சேதமாக்கப்பட்டுள்ள விக்கிரகங்களை மீள் பிரதிஷ்டை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், எதிர்வரும் ஞாயிற்றுகிழமை மீள் பிரதிஷ்டை பூஜைகள் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.