யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்த ரஸ்ய சிறுமியின் தந்தை ரஸ்யாவிலிருந்து தப்பிவெளியேறியுள்ளார்.

மகள் யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தைக்கு ரஸ்ய நீதிமன்றம் இரண்டரை வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

எனினும் நீதிமன்றம் இந்த தண்டனையை அறிவித்தவேளை தந்தை நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

வீட்டுக்காவலில் இருந்து அவர் தப்பிச்சென்றுவிட்டார் என நீதிமன்றத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை என அவரின் சட்டத்தரணி பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்த குற்றச்சாட்டின் கீழ் 13 வயது மாசா இரண்டு மாதங்களிற்கு முன்னர் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.

இதனை தொடர்ந்து ரஸ்ய இராணுவத்தை கடுமையாக விமர்சித்து வந்த தந்தை தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முதல் நாள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

ரஸ்ய இராணுவத்தை அவமதித்தமைக்காக தண்டனை வழங்கப்பட்டுள்ள பலரில் இவரும் ஒருவர்.

எனினும் யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்தமைக்காக மகளை வீட்டிலிருந்து ரஸ்ய அதிகாரிகள் அகற்றி சிறுவர் இல்லத்தில் சேர்த்தமை உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது.

நான் அதிர்ச்சியடைந்துள்ளேன் என நகரத்தின் கவுன்சிலர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை தெரிவித்தமைக்காக சிறைத்தண்டனை என்பது மோசமான விடயம்,இரண்டரை வருட சிறைத்தண்டனை பயங்கரமானது என அவர் குறிப்பிட்டார்.

அலெக்சே தப்பியோடிவிட்டார் என நாங்கள் கேள்விப்படுகின்றோம் அது இரண்டாவது அதிர்ச்சி அவர் பாதுகாப்பாக இருக்கின்றார் என கருதுகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குடும்பத்தின் பிரச்சினைகள் கடந்த வருடம் ஆரம்பமாகின.கடந்த ஏப்பிரலில் தங்கள் பாடசாலை மாணவி உக்ரைனிற்கு வாழ்த்து தெரிவித்தும் ரொக்கட்கள் ரஸ்ய கொடியுடன் யுத்தம் வேண்டாம் எனவும் வரைந்துள்ளார் என பாடசாலை நிர்வாகம் முறையிட்டது.

Share.
Leave A Reply