திருவனந்தபுரம்: ஊர் கோவிலில் திருவிழா என்றாலே அனைவருக்கும் உற்சாகம் பிறந்து விடும். அதிலும் பெண்களுக்கு கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு நாளும் கோவிலுக்கு பெண்கள் விதவிதமான உடை அணிந்து செல்வது அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கும்.
திருவிழா வந்தால் தான் வீட்டின் பெரியவர்கள் பெண்களுக்கு புத்தாடை எடுத்து கொடுப்பதும் வழக்கம். இதற்காகவே பெண்கள் ஊர் கோவில் திருவிழாவை எதிர்நோக்கி காத்திருப்பது உண்டு.
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள கொட்டாங்குளக்கரை தேவி கோவிலில் நடைபெறும் சமயவிளக்கு திருவிழாவை பெண்களை விட ஆண்களே அதிகம் எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள் என்றால் அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படும்.
இந்த கோவில் விழாவில் அதிக அளவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள். அதிலும் அவர்கள் பெண் வேடமிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
இக்கோவிலுக்கு செல்லும் ஆண்கள் இங்குள்ள ஒப்பனை விளக்கில் 5 திரிகளை ஏற்றி வழிபட வேண்டும். இப்படி பெண் வேடமிட்டு ஆண்கள் தேவியை தரிசனம் செய்தால் அவர்களின் வாழ்க்கையில் செல்வம் பெருகி, வேலை உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் கொல்லம் ஸ்ரீதேவி அம்மன் கோவிலுக்கு பெண் வேடமிட்ட ஆண்கள் கூட்டம் அலைமோதும். கோவிலுக்கு வரும் ஆண்களுக்கு பெண் வேடமிடுவதற்காக ஒப்பனை கலைஞர்கள் ஏராளமானோர் இங்கு வருவதுண்டு.
அவர்களின் கை வண்ணத்தில் மேக்-அப் போட்டு கொள்ளும் ஆண்களை பார்க்கும் போது, பெண்களுக்கே மயக்கம் வந்து விடும். அந்த அளவுக்கு அச்சுஅசல் பெண்களை போலவே ஆண்கள் பலரும் காட்சி அளிப்பார்கள்.
பெண்களையே திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு மேக்-அப்பில் கலக்கும் ஆண்களுக்கு இங்கு பரிசுகளும் வழங்கப்படும்.
இதில் விழாவுக்கு வந்த ஆண் பக்தர் ஒருவருக்கு இந்த ஆண்டுக்கான சிறப்பான மேக்-அப்புக்கு முதல் பரிசு கிடைத்தது. அவர் பெண் வேடமிட்டு சாமி தரிசனம் செய்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.