யாழ்.நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை கண்டித்தும், கச்சதீவில் புத்தா் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிா்ப்பு தொிவித்தும் நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் ஒன்று புதன்கிழமை (29) நடத்தப்பட்டது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் நெடுந்தீவு மக்களும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை தொிவித்தனா்.

நெடுந்தீவு வெடியரசன் கோட்டையினை ஆக்கிரமித்துள்ள தொல்லியல் திணைக்களம் அதனை பௌத்த விகாரையாக அடையாளப்படுத்தி, அதன் வரலாற்றை திாிபுபடுத்துவதுடன், புதிதாக விகாரையை அங்கு கட்டுவதற்கும் முயற்சித்து வருகின்றது.

இதேபோல் கச்சதீவில் அதன் மத அடையாளத்தை மாற்றும் வகையில் புத்தா் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே அரச மரங்களும் நாட்டப்பட்டிருக்கின்றது.

இவற்றை கண்டித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரும், பொதுமக்களும் இணைந்து வெடியரசன் கோட்டையினை பாா்வையிட்டதுடன், அங்கு காலை சிறிது நேரம் கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றிணையும் நடத்தியிருக்கின்றனா்.

இன்றைய போராட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளில் இருந்து மேலதிக பொலிஸாா் நெடுந்தீவுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு பதற்றமான நிலையினை பொலிஸாா் ஏற்படுத்தியதுடன், புலனாய்வாளா்களும் குவிக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக உள்ளது.

Share.
Leave A Reply