வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபது, பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், ராஜூவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படம், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

2 பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படம் குறித்து பல்வேறு விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைக்கின்றனர்.

கதை என்ன?

அருமபுரி என்ற மலைகிராமத்தில் சுரங்கம் அமைக்க அரசு திட்டமிடுகிறது. ஆனால் அந்த சுரங்கத்தை எதிர்த்து பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) தலைமையிலான மக்கள் என்ற படை என்ற அமைப்பு ஆயுதம் தாங்கி போராடுகிறது.

அந்த அமைப்பின் தலைவரான விஜய் சேதுபதியை கைது செய்ய செல்லும் காவல்துறை குழுவில், வாகன ஓட்டுநராக பணியாற்றுகிறார் குமரேசன்(சூரி).

உயர் அதிகாரியின் உத்தரவுகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் சூரிக்கு, அவரது உயரதிகாரி சேத்தனால் மெமோ கொடுக்கப்படுகிறது.

தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் பணியில் இருக்க போராடும் சூரிக்கு என்ன ஆனது? விஜய சேதுபதி பிடிப்பட்டாரா? சூரிக்கும் விஜய் சேதுபதிக்கும் என்ன தொடர்பு என்பது படத்தின் மீதிக்கதை.

ஹீரோ சூரி

விடுதலை படம் குறித்த அறிவிப்பு வெளியான போதே அனைவரும் ஆச்சரியமாக பார்த்த ஒன்று, வெற்றிமாறன் படத்தில் சூரி கதாநாயகனாக நடிப்பது பற்றித்தான்.

அதை ஈடுசெய்யும் வகையில் சூரி இந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் என்று படம் பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

காவல்துறை ஊழியராக வரும் சூரி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக மற்றொரு ரசிகர் தெரிவித்தார்.

குமரேசன் கதாப்பாத்திரத்தில் சூரி வாழ்ந்து இருக்கிறார், இது அவரின் வாழ்நாள் கதாப்பாத்திரமாக அமையும் என ஒருவர் தெரிவித்தார்.

“சூரியிடம் இப்படிப்பட்ட நடிப்பை எதிர்ப்பார்த்து நான் தியேட்டருக்கு வரவில்லை, காமெடி கதாபாத்திரத்தில் வரும் சூரி தான் இதுவா என்று அதிசயமாக இருந்தது” என்று ரசிகை ஒருவர் கூறினார்.

“காவல்துறையில் கடைநிலை ஊழியராக வரும் சூரி, உயர் அதிகாரியின் உத்தரவுகளுக்கு கட்டுப்படாமல், தனது தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்,” என காவல்துறை குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

விஜய் சேதுபதி vs சூரி

வெற்றிமாறன், விஜய் சேதுபதி கூட்டணியை பார்க்க தியேட்டருக்கு வந்தேன், ஆனால் விஜய் சேதுபதிக்கு குறைவான காட்சிகள் தான் இருக்கின்றன. சில காட்சிகளில் வந்தாலும் நிறைவான நடிப்பை அவர் வழங்கி இருக்கிறார் என்றார் ஒரு ரசிகர்.

“முதல் பாகத்தில் விஜய் சேதுபத்திக்கு குறைவான காட்சிகள் மட்டுமே இருக்கிறது. அடுத்த பாகத்தில் அவருக்கு அதிக காட்சிகள் இருக்கலாம். ஆனால் அவர் நேர்த்தியான நடிப்பை வழங்கினார்.”

“என்னுடைய எதிர்ப்பார்பை மீறி, விஜய் சேதுபதியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது,” என்று ரசிகை ஒருவர் தெரிவித்தார்.

“படத்தில் விஜய் சேதுபதியை விட சூரிக்கு தான் அதிக காட்சிகள் இருக்கிறது. விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் ஒரு துணை கதாப்பாத்திரம் போல வருகிறது,” என்றார்.

‘கதை ஓட்டத்துடன் இசை’

விடுதலை படத்திற்கு இளையராஜாவின் இசை பக்கபலமாக இருக்கிறது. புதிய இசையை இந்த படத்திற்காக அவர் வழங்கியிருக்கிறார் என்று ரசிகை ஒருவர் தெரிவித்தார்.

“வெற்றிமாறனின் காட்சி அமைப்பில் உள்ள உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்த இளையராஜாவின் பின்னணி இசை முக்கிய பங்காற்றுகிறது. திரைக்கதையின் ஓட்டத்தில் இசையும் சேர்ந்து பயணம் செய்கிறது.”

“விடுதலை படத்தில் வரும் இரண்டு பாடல்களுக்கு ராஜா சாரின் இசையில் நன்றாக இருக்கிறது,” என்றார் ஒரு ரசிகர்.

‘உங்களை காயப்படுத்தும்’

“படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாவது பாதியில் வரும் காட்சிகள் நம்மை நிலை குலையச் செய்யும். என்னால் சில காட்சிகளை பார்க்க முடியவில்லை.

ஆனால் அதில் வரும் அம்சங்கள் அனைத்தும் படத்திற்கு தேவையானவை. அந்தளவுக்கு வெற்றிமாறன் படத்தை அசலாக படம் பிடித்து இருக்கிறார்,” என்று ரசிகை ஒருவர் தெரிவித்தார்.

“ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் பங்கு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. கதை நடைபெறும் மலைக் கிராமத்தை அவரது கேமராவின் மூலம் நம்மால் நேரடியாக உணர முடிகிறது.”

“படத்தின் தொடக்கத்தில் வரும் ‘7 நிமிட ஒரே ஷாட்’, நிச்சயம் படத்தை அடுத்த வெவலுக்கு எடுத்துச் சென்று விட்டது.”

“விடுதலை படத்திற்கு தேசிய விருது, ஆஸ்கார் விருது போன்ற அனைத்து விருதும் நிச்சயம் கிடைக்கும். நடிகர் சூரி, இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோருக்கும் விருது கிடைக்கும்” என்று ஒரு ரசிகர் கூறினார்.

“படத்தின் இரண்டாவது பாதியில் ஊருக்குள் பெண்களிடம் செய்யும் வன்முறைகள் என் இதயத்தை கலங்கடித்தன. பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை படத்தில் பார்க்கும் போது ஒரு பெண்ணாக என்னால் அந்த வலியை உணர முடிந்தது,” என ரசிகை தெரிவித்தார்.

“இது படமல்ல, ஒரு அனுபவம். முதல் 10 நிமிடத்தை நிச்சயம் மிஸ் பண்ணாதீங்க” என்று ஒரு ரசிகர் கூறினார்.

கிளைமாக்ஸ் காட்சிகள் அட்டகாசமாக இருந்தன. விடுதலை படத்தின் 2ஆம் பாகத்திற்காக காத்திருப்பதாக பல ரசிகர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

 

Share.
Leave A Reply