இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா, உலகின் முதன்மையான பொருளாதார சக்தியாக மாறியது என்பதும் அதன் இராணுவமும் அதே போல சக்திவாய்ந்ததாகக் கருதப்பட தொடங்கியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆயினும்கூட, ஏறக்குறைய எட்டு ஆண்டுகாலப் போரில் பெருமளவிலான பணத்தையும் இராணுவ வளங்களையும் கொட்டிய போதிலும், அமெரிக்கா வடக்கு வியட்நாமியப் படைகள் மற்றும் அவர்களின் கொரில்லா கூட்டாளிகளான வியட் காங் ஆகிய சிறு நாடுகளிடம் தோல்வியடைந்தது.
மார்ச் 29, 1973 இல் அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவையொட்டி, வியட்நாம் போரில் அமெரிக்கா எப்படி தோல்வியடைந்தது என்பது குறித்து, இரு பெரும் நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கேட்டோம்.
அந்தக் காலகட்டத்தில் பனிப்போர் உச்சத்தில் இருந்தது, கம்யூனிச மற்றும் முதலாளித்துவ உலக சக்திகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இரண்டாம் உலகப் போரால் ஃப்ரான்ஸ் ஏறக்குறைய திவாலாகிவிட்டது. இந்தோசீனா பிராந்தியத்தில் அதன் காலனியைக் காப்பாற்ற முடியவில்லை,
மேலும் ஒரு சமாதான உடன்படிக்கையின் படி, வியட்நாம் இரண்டாகப் பிளவு பட்டு, வடக்கில் ஒரு கம்யூனிஸ்ட் அரசாங்கமும் தெற்கில் அமெரிக்க ஆதரவு அரசாங்கமும் அமைந்தன.
ஆனால் ஃப்ரெஞ்சுக்காரர்களின் தோல்வி வியட்நாமில் மோதலை முடிவுக்குக் கொண்டுவரவில்லை.
முழு வியட்நாமும் அண்டை நாடுகளும் கம்யூனிஸ்ட் நாடுகளாகிவிடக் கூடாதே என்ற அச்சத்தால் போர் தொடரப்பட்டது. இந்த அச்சத்தின் காரணமாகவே ஒரு தசாப்த காலமாக நீடித்து லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கிய இந்தப் போரில் அமெரிக்கா ஈடுபட்டது.
உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவ சக்தி படைத்த ஒரு நாடு, கிளர்ச்சியாளர்களிடமும், வறிய தென்கிழக்காசிய தேசத்திடமும் எவ்வாறு அடிபணிந்தது என்ற சுவாரஸ்யமான கேள்வி எழுகிறது.
இது குறித்து, இங்கே இரண்டு வல்லுநர்கள் பொதுவாக நம்பப்படும் காரணங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள்.
மிகப்பெரிய திட்டம்
ஒரு கட்டத்தில் 5 லட்சம் அமெரிக்க வீரர்கள் வியட்நாமில் இருந்தனர்
உலகின் மறுபுறத்திற்குச் சென்று ஒரு போரில் ஈடுபடுவது என்பது நிச்சயமாக ஒரு பெரிய முயற்சியாகும். போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது வியட்நாமில் 5 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் இருந்தனர்.
இந்த போருக்கு ஆன செலவு மிகவும் வியப்புக்கு உரியது. 2008 ஆம் ஆண்டில், அமெரிக்க காங்கிரஸின் ஒரு அறிக்கை மொத்தமாக 686 கோடி டாலர்கள் இந்தப் போருக்காகச் செலவிடப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. இன்றைய மதிப்பில் அது 950 கோடி டாலருக்கும் அதிகமானது.
ஆனால் இதற்கு முன்னர், அமெரிக்கா இரண்டாம் உலகப் போரின் போது இதை விட நான்கு மடங்குக்கும் அதிகமாகச் செலவு செய்து வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை நிபுணர் டாக்டர் லூக் மிடுப், போரின் ஆரம்ப ஆண்டுகளில் ஒரு பொதுவான நம்பிக்கை இருந்தது என்கிறார்.
அவர் பிபிசியிடம், “வியட்நாம் போர் முழுவதும் நீடித்த விசித்திரமான விஷயங்களில் இதுவும் ஒன்று” என்று கூறினார்.
“அமெரிக்கா பல பிரச்னைகளை முழுமையாக அறிந்திருந்தது. அமெரிக்க இராணுவம் அந்தச் சூழலில் செயல்பட முடியுமா என்பதில் கணிசமான சந்தேகம் இருந்த போதிலும், 1968 வரை அமெரிக்க அரசாங்கம் இறுதியில் வெற்றி பெறுவோம் என்று நம்பியது.” என்று அவர் கூறுகிறார்.
இந்த நம்பிக்கை விரைவில் குறையத் தொடங்கியது. குறிப்பாக ஜனவரி 1968 இல் கம்யூனிஸ்ட் டெட் படைகளின் தாக்குதல் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது, இறுதியில் போர் செலவினங்களுக்கு காங்கிரஸின் ஆதரவு இல்லாததால் 1973 இல் அமெரிக்க துருப்புக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இருப்பினும், அமெரிக்காவின் ஒரேகான் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவரான பேராசிரியர் துவாங் வூ-உம், அமெரிக்க போர்ப் படைகள் வியட்நாமில் இருந்திருக்க வேண்டுமா என்று டாக்டர் மிடுப் போலவே கேள்வி எழுப்பினார்.
அமெரிக்க இராணுவத்துக்குப் பொருத்தமற்ற போர்
கம்போடிய எல்லைக்கு அருகில் அமெரிக்க சிப்பாய்
ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் இளம் அமெரிக்க வீரர்கள் காட்டில் சண்டையிடுவதைப் போல் சித்தரிக்கப்படுகின்றன.
அதே நேரத்தில் வியட் காங் கிளர்ச்சியாளர்கள் அடந்த புதர் வழியாகத் தங்கள் வழியைப் புத்திசாலித்தனமாகச் சூழ்ச்சி செய்து ஆச்சரியமான தாக்குதல்களை நடத்தினர்.
“அமெரிக்க வீரர்கள் போருக்குக் கட்டளையிடப்பட்ட பகுதி போல எந்த ஒரு பெரிய தேசத்தின் ராணுவத்திற்கு இடப்பட்டிருந்தாலும் இந்தக் கஷ்டங்கள் இருந்திருக்கும்.
இது தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் சாதாரணமாகக் காணப்படுவது போன்ற மிக அடர்த்தியான காட்டுப்பகுதியாகும்.” என்று டாக்டர் மிடுப் கூறுகிறார்.
இரு தரப்புக்கும் இடையிலான திறன் வேறுபாடு சற்று மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார்.
“வட வியட்நாம் இராணுவம் மற்றும் வியட் காங் போராளிகளுக்குப் பழக்கமான நிலைமைகளை அமெரிக்க இராணுவத்தால் சமாளிக்க முடியவில்லை என்று ஒரு கட்டுக்கதை உள்ளது, இது உண்மை இல்லை.” என்கிறார் அவர்.
“வட வியட்நாம் இராணுவம் மற்றும் வியட் காங் ஆகியவையும் அந்தச் சூழலில் சண்டையிட மிகவும் போராட வேண்டியிருந்தது.” என்பது அவர் கருத்து.
மிக முக்கியமாக, கிளர்ச்சியாளர்கள் தங்கள் சண்டையின் நேரத்தையும் இடத்தையும் தேர்வு செய்ய முடிந்ததும் லாவோஸ் மற்றும் கம்போடியாவிற்கு எல்லையைத் தாண்டி பின்வாங்க முடிந்ததும் தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது அவரது கூற்று. பின்தொடர்ந்த அமெரிக்க இராணுவம் எங்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
பேராசிரியர் வூவைப் பொருத்தவரை, அமெரிக்கர்கள் வியட் காங் கொரில்லாக்களுடன் போரிடுவதில் அதிக கவனம் செலுத்தினர், இதன் விளைவாகத் தோல்வி ஏற்பட்டது.
அவர் பிபிசியிடம் “தெற்கில் உள்ள கிளர்ச்சியாளர்கள் ஒருபோதும் சைகோனை தோற்கடித்திருக்க முடியாது.” என்று கூறினார்.
அமெரிக்காவில் உள்நாட்டில் விதைக்கப்பட்ட தோல்வி மனப்பான்மை
இந்த மோதல் பெரும்பாலும் “முதல் தொலைக்காட்சிப் போர்” என்று குறிப்பிடப்படுகிறது, மேலும் இந்தப் போரின் போது ஊடகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் செயல்பட்டன.
1966 ஆம் ஆண்டு வாக்கில் 93% அமெரிக்கக் குடும்பங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளை வைத்திருந்ததாகவும், அவர்கள் பார்த்த காட்சிகள் அதிகம் தணிக்கை செய்யப்படாமலும் முந்தைய மோதல்களைக் காட்டிலும் உடனடியானவையாக இருந்ததாகவும் அமெரிக்க தேசிய ஆவணக் காப்பகம் மதிப்பிட்டுள்ளது.
இதனால்தான் அமெரிக்க தூதரக வளாகத்Corbis via Getty Imagesதைச் சுற்றி நடந்த சண்டையின் காட்சிகள் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது.
வியட் காங் போராளிகள் போராட்டத்தை நேரடியாக தெற்கு அரசாங்கத்திற்கும் அமெரிக்க பொதுமக்களின் படுக்கையறைகளிலும் கொண்டு வந்ததை பார்வையாளர்கள் நெருக்கமாகவும் நிகழ்நேரத்திலும் பார்த்தார்கள்.
ஆனால் 1968 க்குப் பிறகு, தொலைக்காட்சி ஒளிபரப்பு பொதுவாக போருக்கு விரோதமாக மாறியது. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதும், காயப்படுவதும், சித்திரவதை செய்யப்படுவதும் போன்ற படங்கள் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்டன.
அமெரிக்கக் குடிமக்கள் இந்த படங்களால் திசைதிருப்பப்பட்டு, அவர்கள் போருக்கு எதிராகத் திரும்பினர். நாடு முழுவதும் பெரும் போர் எதிர்ப்பு நிகழ்வுகள் வெடித்தன.
மே 4, 1970 அன்று, அத்தகைய ஒரு ஆர்ப்பாட்டத்தில், ஒஹாயோவில் அமைதியான நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்த கென்ட் மாநில பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் தேசியக் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
“கென்ட் அரசு படுகொலை”, போருக்கு எதிராக அதிகமான மக்களைத் திரட்டியது.
வியட்நாமில் இருந்து வந்த அமெரிக்க வீரர்களின் சவப்பெட்டிகளின் புகைப்படங்களைப் போலவே மக்களுக்கு ஒவ்வாத, இளைஞர்களின் ஆட்சேர்ப்பு, பொதுமக்கள் மன உறுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் போரில் 58,000 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயினர்.
வட வியட்நாமிய வீரர்களுக்கு இது மிகப்பெரிய நன்மை என்று பேராசிரியர் வூ கூறுகிறார்: அவர்களின் இழப்புகள் மிக அதிகமாக இருந்தாலும். அவரது சர்வாதிகார அரசு, ஊடகத்தின் மீது முழுக் கட்டுப்பாட்டையும், தகவல் மீதான ஏகபோகத்தையும் கொண்டிருந்தது.
போராட்டக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்
“அமெரிக்காவும் தெற்கு வியட்நாமும் மக்கள் கருத்தை ஊடகம் வாயிலாக வெளிப்படுத்துவதில் கம்யூனிஸ்டுகள் போல வெற்றிகரமாகச் செயல்படத் தவறிவிட்டன” என்கிறார் பேராசிரியர் வூ.
“அவர்கள் எல்லையை மூடி, எதிர்ப்பை அடக்கினர். போருக்கு உடன்படாத எவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.” என்றார்.
தென் வியட்நாமில் இதயங்களையும் மனதையும் வெல்லும் போரிலும் அமெரிக்கா தோல்வி
வியட்காங்கை சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்பட்ட நபர்
வியட்காங்கை சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்பட்ட நபர்
இது மிகவும் கொடூரமான போராட்டமாக இருந்தது, இதில் அமெரிக்கா பல பயங்கரமான ஆயுதங்களைப் பயன்படுத்தியது. இதில் நாபாம் மற்றும் ஏஜென்ட் ஆரஞ்சு பயன்பாடும் அடங்கும்.
நாபாம் என்பது 2700 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எரியக்கூடிய பெட்ரோகெமிக்கல் பொருள். மேலும் அது எதனுடனும் தொடர்பு கொள்ளும்போது அது ஒட்டிக்கொண்டுவிடும்.
அதே சமயம், ஏஜென்ட் ஆரஞ்சு என்பது காடுகளை அழிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனமாகும். ஆனால் அது வியட்நாமிய வயல்களில் இருந்த பயிர்களையும் அழித்தது, இதனால் உள்ளூர் மக்கள் பட்டினியை எதிர்கொண்டனர்.
இந்த இரண்டு விஷயங்களின் பயன்பாடும் வியட்நாமின் கிராமப்புற மக்களின் மனதில் அமெரிக்காவின் எதிர்மறையான பிம்பத்தை உருவாக்குவதில் பங்கு வகித்தது.
அமெரிக்க இராணுவத்தின் ‘தேடுதல் மற்றும் அழிப்பு’ நடவடிக்கைகளில் எண்ணற்ற அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான வியட்நாம் பொதுமக்கள் அமெரிக்க துருப்புக்களால் கொல்லப்பட்ட 1968 மை லாய் படுகொலையும் இதில் அடங்கும். பொதுமக்களின் இறப்பு எண்ணிக்கை உள்ளூர் மக்களை அந்நியப்படுத்தியது, அவர்கள் வியட் காங்கிற்கு ஆதரவாக இல்லை.
டாக்டர். மிடுப், “தென் வியட்நாமின் பெரும்பாலான மக்கள் இடதுசாரிகளுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவில்லை. பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையை எப்படியாவது சமாளித்து போரைத் தவிர்க்கவே விரும்பினர்.” என்று தெரிவித்தார்.
சாதாரண மக்களின் இதயங்களிலும் இடம் பெறுவதில் அமெரிக்கா வெற்றிபெறவில்லை என்று பேராசிரியர் வூ நம்புகிறார்.
“அந்நிய ராணுவம் சாமானியர்களை மகிழ்விப்பது எப்பொழுதும் கடினம். அயல்நாட்டு ராணுவம் சாமானியர்களின் பாசத்திற்குத் தகுதி பெறாது என்று நினைப்பதும் இயற்கையானது” என்கிறார்.
இடது சாரிகளின் மனவலிமை
தெற்கு வியட்நாமுக்குப் போரிட ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களை விட இடது முன்னணிக்காகப் போராடியவர்கள் போரில் வெற்றி பெறுவதற்கு அதிக அர்ப்பணிப்புடன் இருந்ததாக டாக்டர். மிடுப் நம்புகிறார்.
“போரின் போது அமெரிக்கா மேற்கொண்ட ஆய்வுகள், அமெரிக்கா ஏராளமான இடதுசாரி கைதிகளை (கடுமையாக) விசாரித்தது தெரியவந்துள்ளது.”
“இந்த ஆய்வுகள் மூலம், அமெரிக்க பாதுகாப்புத் துறை மற்றும் அமெரிக்க இராணுவத்துடன் இணைந்த ஒரு சிந்தனைக் குழுவான ராண்ட் கார்ப்பரேஷன், வட வியட்நாம் மக்களும் வியட் காங் மக்களும் ஏன் சண்டையிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள விரும்பியது.
அவர்கள் அனைவரும் (வட வியட்நாமியர்கள்) தாம் செய்வது தேசபக்திக்கான பணி என்று உணர்ந்தனர், எளிமையாகச் சொன்னால், ஒரு அரசாங்கத்தின் கீழ் நாட்டை ஒருங்கிணைத்தல் என்ற முடிவுக்கு வந்தது”
ஏராளமான ராணுவ வீரர்களை இழந்த நிலையிலும் இடதுசாரி சக்திகள் போராட்டத்தைத் தொடர்ந்த விதம் அவர்களின் வலிமையான மன உறுதிக்குச் சான்றாகும்.
இந்தப் போரின்போது முடிந்தவரை பல வீரர்களைக் கொல்ல வேண்டும் என்பதில் அமெரிக்கத் தலைமை உறுதியாக இருந்தது. எதிரிகளை வேகமாகக் கொன்றால் இடதுசாரிகளின் மன உறுதி உடைந்து விடும் என்று அமெரிக்கத் தலைமை கருதியது.
இந்த போரின் போது 1.1 மில்லியன் வட வியட்நாம் மற்றும் வியட் காங் போராளிகள் கொல்லப்பட்டனர். இதன் பின்னரும் இடதுசாரிகள் யுத்தம் முடியும் வரை யுத்த பிரதேசத்தில் உறுதியாக இருந்தனர்.
வட வியட்நாமிய மனோபலம் வலுவாக இருந்ததா இல்லையா என்பது பேராசிரியர் வூக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் வட வியட்நாம் வீரர்களின் மனதில் ஊட்டப்பட்ட வலு, அவர்களை ஆபத்தானவர்களாக மாற்றியது என்று அவர் நம்புகிறார்.
“இந்த எண்ணத்தை மக்களை நம்ப வைக்க அவர்களால் முடிந்தது. பிரசாரம் மற்றும் அவர்களின் கல்வி முறையால், அவர்களால் மக்களைத் தோட்டாக்களைப் போல கொடியவர்களாக மாற்ற முடிந்தது.” என்கிறார் அவர்.
மக்கள் செல்வாக்கற்ற, ஊழல் மிகுந்த தென் வியட்நாம் அரசு
தென் வியட்நாம் எதிர்கொண்ட மிகப்பெரிய பிரச்சனை நம்பகத்தன்மையின்மை மற்றும் முன்னாள் காலனித்துவ சக்தியுடனான உறவுகள் தாம் என்று டாக்டர் மிடுப் கருதுகிறார்.
“வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் இடையேயான பிளவு எப்போதும் செயற்கையானது, இது பனிப்போரால் ஏற்பட்டது. வியட்நாமை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க கலாசார, இன அல்லது மொழி அடிப்படை எதுவும் இல்லை.” என்கிறார் அவர்.
தெற்கு வியட்நாமில் வாழும் பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறும் அவர், இருப்பினும், முழு வியட்நாமிய மக்கள்தொகையில் இந்தக் குழுவின் பங்கு 10 முதல் 15 சதவீதம் மட்டுமே என்கிறார்.
வட வியட்நாமில் இருந்து பலர் பழிவாங்கலுக்கு பயந்து தெற்கு வியட்நாமிற்கு தப்பிச் சென்றனர், இது தென் வியட்நாமிய அரசியலில் ஒரு முக்கியமான மாற்றத்திற்கு வழிவகுத்தது. அது ‘க்ரிடிகல் மாஸ்’ என்ற நிலையை உருவாக்கியது
சமூகவியலில், கிரிட்டிகல் மாஸ் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான மக்களின் நம்பிக்கை யதார்த்தமாக மாறத் தொடங்கும் சூழ்நிலையைக் குறிக்கிறது.
தெற்கு வியட்நாமின் முதல் ஜனாதிபதியான ந்கோ தின் தியம், அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி போன்ற பிரமுகர்கள் உட்பட, அமெரிக்காவில் சக்திவாய்ந்த கத்தோலிக்க நண்பர்களைக் கொண்டிருந்தார்.
“ஒரு மதச் சிறுபான்மைக் குழுவின் மேலாதிக்கம், பௌத்த மதத்தைப் பின்பற்றும் பரந்த வியட்நாமிய மக்களிடையே தென் வியட்நாமிய அரசாங்கத்தை பிரபலமடையச் செய்தது.” என்கிறார் மிடுப்.
இதன் காரணமாக, தென் வியட்நாம் அரசாங்கத்திற்குச் சட்டப்பூர்வ நெருக்கடி ஏற்பட்டதாக அவர் நம்புகிறார். ஏனென்றால் பெரும்பாலான வியட்நாமிய மக்கள் இந்த அரசாங்கத்தை ஒரு வெளிநாட்டு அரசாங்கமாகவே கருதினர். இது பிரெஞ்சு ஆட்சியின் மரபு போன்றது. ஏனென்றால் பெரும்பாலான கத்தோலிக்கர்கள் பிரான்சின் பக்கம் நின்று போர் புரிந்தனர்.
“ஐந்து லட்சம் அமெரிக்க துருப்புக்கள் அங்கு இருந்தது, தென் வியட்நாம் அரசாங்கம் வெளிநாட்டினரை எல்லா வகையிலும் சார்ந்திருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது.”
ஊழல் உச்சத்தில் இருந்த அரசாங்கத்தை அமைக்க அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டுமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது என்று அவர் கூறுகிறார்.
“வியட்நாம் குடியரசு அதன் தொடக்கத்தில் இருந்து அதன் இறுதி வரை, ஊழலில் திளைத்திருந்த நிலையில், 1960 மற்றும் 1975 க்கு இடையில் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட பெரும் பொருளாதார உதவியால் ஊழல் புதிய உச்சத்தை எட்டியது. இது தென் வியட்நாமிய பொருளாதாரத்தை முற்றிலுமாக அழித்தது. லஞ்சம் கொடுக்காமல் ராணுவத்திலோ அல்லது சிவில் அரசாங்கத்திலோ பதவியைப் பெற முடியாது என்பதே இதன் பொருள்.”
இது ஆயுதப்படைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக மிடுப் கூறுகிறார்.
“இதனால், அமெரிக்காவால் ஒரு திறமையான மற்றும் நம்பகமான தென் வியட்நாம் இராணுவத்தை ஒருபோதும் தயார் செய்ய முடியவில்லை. அத்தகைய சூழ்நிலையில், இப்படித் தான் நடக்கும் என்பது தெரிந்ததே. மேலும் அமெரிக்க துருப்புக்கள் வியட்நாமை விட்டு வெளியேறினால், தெற்கு வியட்நாம் அழிந்து விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் கூறினார்.”
அமெரிக்கா மற்றும் தெற்கு வியட்நாமின் கையறுநிலை
தென் வியட்நாம் அரசாங்கத்தின் தோல்வி உறுதியாகியிருக்கவில்லை என்றும் அமெரிக்க வல்லுநர்கள் வியட்நாம் விவகாரத்தில் சாக்குப்போக்குகளைத் தேடுகிறார்கள் என்றும் பேராசிரியர் வூ கூறுகிறார்.
“இந்த இழப்புக்கு அவர்கள் யாரையாவது குற்றம் சொல்ல விரும்புகிறார்கள். மேலும் தெற்கு வியட்நாமைக் குறை கூறுவது மிகவும் எளிதானது,” என்று அவர் கூறுகிறார்.
இதனுடன், கத்தோலிக்க மதத்தை நம்புபவர்களின் ஊழல் மற்றும் பாரபட்ச நிலை குறித்த விமர்சனங்கள் அமெரிக்கச் செய்திகளில் மிகைப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
“ஊழல் அதிகமாக இருந்தது உண்மை தான், ஆனால், அதுவே போருக்குக் காரணமாக அமையும் அளவுக்கு இல்லை. ஊழல் பல திறமையின்மை மற்றும் பயனற்ற இராணுவப் பிரிவுகளுக்கு வழிவகுத்தது, ஆனால் மொத்தத்தில், தெற்கு வியட்நாமிய இராணுவம் மிகவும் நன்றாகப் போராடியது.” என்பது அவரது வாதம்.
இத்தகைய சூழ்நிலையில், தென் வியட்நாம் இராணுவம் அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் பணத்துடன் தானாகப் போரிடுவது சிறப்பாக இருந்திருக்கும் என்று பேராசிரியர் வூ நம்புகிறார்.
வட வியட்நாமின் நீண்ட நாள் போரில் ஈடுபடும் திறன், இதில் ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்தது என்று பேராசிரியர் வூ நம்புகிறார்.
ஏனெனில் தென் வியட்நாமின் மிதவாத அரசால் இதை நீண்ட காலம் செய்ய முடியவில்லை.
இந்த அரசியல் அமைப்பில் மக்கள் போரில் நம்பிக்கை வைத்திருந்தாலும், உயிரிழப்புகள் போன்றவற்றைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.
“அமெரிக்காவும் தெற்கு வியட்நாமும் பொதுக் கருத்தை உருவாக்குவதில் இடதுசாரிகள் அளவுக்கு வெற்றியடைய முடியவில்லை. பெரும்பாலான மக்கள் கொல்லப்பட்ட பின்னரும் அவர்களால் புதிய படைகளை உருவாக்க முடிந்தது. அதாவது தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கு வடக்கில் வசதி இருந்தது, ஆனால் தெற்கில் இல்லை.” என்கிறார் வூ.
இதனுடன், சோவியத் யூனியனிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் வடக்கு வியட்நாம் பெற்ற பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவு குறையவில்லை. இதன் பாரத்தையும் தென் வியட்நாம் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று என்றும் அவர் கூறுகிறா
– மூலம் பிபிசி தமிழ் செய்தி-