இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலை அடுத்து, தேடப்பட்டு வந்த சாரா ஜாஸ்மீன் என அழைக்கப்படும் புலஸ்தி மஹேந்திரன் அம்பாறையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம்; தேதி வீடொன்றிற்குள் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தற்கொலை தாக்குதல் சம்பவத்தில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் தரப்பினரே உயிரிழந்ததாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, சாரா ஜாஸ்மீன் என அழைக்கப்படும் புலஸ்தி மஹேந்திரன் நாட்டை விட்டு இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்பட்டது.

சாரா ஜாஸ்மீன் இந்தியாவில் தலைமறைவாகியுள்ளதாக கூறியே விசாரணைகள் நடத்தப்பட்ட நிலையில், மறுபுறத்தில் சாரா ஜாஸ்மீனின் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டது.

 

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை அடையாளம் கண்டுக்கொள்வதற்காக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்படி, விசேட சட்ட மருத்துவ அதிகாரிகள், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், அரச பகுப்பாய்வு திணைக்கள விசேட அதிகாரிகள் அடங்களாக குழுவொன்று இந்த மரபணு பரிசோதனை தொடர்பான ஆய்வுகளை நடத்தியது.

இவ்வாறு நடத்தப்பட்ட மரபணு பரிசோதனை ஆய்வுகளின் மூலம், சாரா ஜஸ்மீன் என அழைக்கப்படும் புலஸ்தி மஹேந்திரன் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் சமர்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாரா ஜஸ்மீன் என அழைக்கப்படும் புலஸ்தி மஹேந்திரனின் தாயிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மரபணு மாதிரிகள் மற்றும் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து பெறப்பட்ட எலும்பு எச்சங்கள் ஆகியவற்றின் மரபணு மாதிரிகள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

தாய் மற்றும் குழந்தை ஆகியோருக்கு இடையிலான மரபணு பெறுபேறுகளுக்கு அமைய, இருவருக்கும் 99.9999 வீதம் பொருந்துவதாக அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

இந்த அறிக்கையின் பிரகாரம், சாரா ஜஸ்மீன் என அழைக்கப்படும் புலஸ்தி மஹேந்திரன், 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் தேதி சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இதையடுத்து, அரச பகுப்பாய்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையை, போலீஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி, ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 8 தற்கொலை குண்டுதாரிகள் அடங்களாக 277 பேர் உயிரிழந்திருந்தனர்.

அத்துடன், இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்ததாக தாக்குதல் தொடர்பில் விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலில் 40 வெளிநாட்டு பிரஜைகளும், 45 குழந்தைகளும் உயிரிழந்திருந்தனர்.

இலங்கையிலுள்ள முக்கிய மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை இலக்காகக் கொண்டு இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தாக்குதலை தேசிய தவ்ஹீத் ஜமாஅம் அமைப்பு நடத்தியமை, விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டது.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவராக செயற்பட்ட சஹரான் ஹாசிம் இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கியிருந்ததுடன், அவரும் இந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்றன.

முஸ்லிம்களை இலக்காக கொண்டு, பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன், பல கோடி ரூபா சொத்துக்களுக்கும் இதனூடாக சேதம் விளைவிக்கப்பட்டது.

நட்டஈடு வழக்க நீதிமன்றம் உத்தரவு

2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமையின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இதற்கமைய, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

அத்துடன், முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மில்லியன் ரூபா விதமும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 50 மில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதேபோன்று, முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் 10 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு செலுத்த வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நட்டஈட்டு தொகையானது, தமது சொந்த பணத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

Share.
Leave A Reply