விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் எம்.பி., பதவி பறிக்கப்பட்டமையானது பாரதீய ஜனதா கட்சியின் தனிப்பட்ட பழிவாங்கல் என்றே காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட பா.ஜ.கவின் எதிரணி கட்சிகளும் கூறி வருகின்றன.

இந்த தீர்ப்பானது ஒட்டுமொத்த இந்திய அரசியலை பரபரப்பாக்கியுள்ளது. அது மட்டுமின்றி, பா.ஜ.கவின் எதிரணி கட்சிகளை ஒன்றுசேர வைத்துள்ளது எனலாம்.

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கில் தீர்ப்பை வழங்கியிருப்பது மோடியின் சொந்த இடமான குஜராத் மாநிலத்தின் சூரத் நீதிமன்றமாகும். ஆனால், அவதூறு வழக்கு தொடரப்பட காரணமான சம்பவம் இடம்பெற்ற இடம் கர்நாடகாவாகும்.

ராகுல், பிரதமர் மோடியின் சமூகத்தை இழிவாக பேசினார் என வழக்கு தொடர்ந்தவர் குஜராத் மாநிலத்தின் சூரத் தொகுதி எம்.எல்.ஏ., புர்னேஷ் மோடியாவார். இந்த சம்பவம் குறித்து சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

2019ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்ற தேர்தலையொட்டி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் கூட்டமொன்று இடம்பெற்றது.

அக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பல மோசடி வழக்குகளில் சிக்கிய   நபர்களான நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை இணைத்துப் பேசினார்.

‘எல்லா திருடர்களும் தங்கள் பெயரில் மோடி என்ற இறுதிப் பெயரை கொண்டிருக்கின்றனர்’ என்று  ராகுல் காந்தி பேசியிருந்தார். இந்த வார்த்தைகள் மோடி சமூகத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது என குஜராத்தில் உள்ள சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கில், சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மார்ச் 23ஆம் திகதி தீர்ப்பளித்தது.

எனினும், ராகுலுக்கு மேன்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு பிணையும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாராளுமன்றம், மக்கள் அவை என அழைக்கப்படுகிறது. தற்போது மோடி ஆட்சியில் 17ஆவது மக்களவை செயற்பட்டு வருகின்றது. 18ஆவது மக்களவை தேர்தல் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளது. இதற்கான திகதிகளை இந்திய தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கும்.

18ஆவது மக்களவை தேர்தலை இலக்கு வைத்தே ராகுல் காந்தி கடந்த வருடத்தில் தனது யாத்திரை செயற்பாட்டை ஆரம்பித்தார்.

‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் அவர் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியிலிருந்து தனது யாத்திரையை ஆரம்பித்தார்.

சுமார் 3500 கிலோ மீற்றர்கள், 145 நாட்களாக அவர் மேற்கொண்ட யாத்திரை இவ்வருடம் ஜனவரி மாதம் 29ஆம் திகதி ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைந்தது.

இந்த யாத்திரையின்போது ராகுல் காந்தி முகச்சவரம் செய்துகொள்ளாமல் தாடி வளர்க்க ஆரம்பித்தார். இதை பா.ஜ.கவினர் ஆரம்பத்தில் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், நாட்செல்லச் செல்ல நிறைந்த தாடியுடன் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட ராகுலை பலரும் ஆர்வமாக வரவேற்றனர்.

இது தாடியுடன் மக்களை கவர்ந்த மோடியை சற்று பாதித்தது என்றே தற்போது கதைகள் வெளிக்கிளம்பியுள்ளன.

பாரதீய ஜனதா கட்சி ஒரு மதவாத அமைப்பு என்பதை இந்தியாவின் சிறு பிள்ளையும் அறியும். தாடி என்பது இந்து மக்களின் ஆன்மிக குருவானவர்களின் அடையாளமாக அக்காலத்திலிருந்தே இந்திய மக்களால் ஆராதிக்கப்பட்டு வந்தது.

தனது இரண்டாவது பதவிக் காலத்தில் பிரதமர் மோடி சற்று அதிகமாகவே தாடி வளர்க்க ஆரம்பித்ததற்கு காரணம் அதுதான்.

இந்து சமயத்தை பின்பற்றும் மக்கள் மோடியை ஓர் ஆன்மிக குருவாகவும் அரசியல் வழிகாட்டியாகவுமே ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

எனினும், ராகுலின் இந்த திடீர் மாற்றம் அவரை சற்று தடுமாற்றம் அடையச் செய்திருந்தது என்னவோ உண்மை.

ராகுலின் இந்த யாத்திரை காலகட்டத்தில் தான்  குஜராத் படுகொலைகள் தொடர்பில் பி.பி.சி நிறுவனம் ஆவணப்படத்தை வெளியிட்டது.

இது மோடியின் ஆதரவுத் தளத்தை சற்று அசைத்துப் பார்த்தது. ஆனால், அதை மோடி அரசு உடனடியாக இந்தியாவில் தடை செய்தது.

இதை அவர் தடை செய்தமையே அவருக்கு எதிரான விமர்சனங்களுக்கு காரணமாயிற்று. இந்த சம்பவங்களை ராகுல் தான் யாத்திரை சென்ற இடங்களில் நன்கு பயன்படுத்திக்கொண்டார்.

ராகுலின் இந்த பாத யாத்திரையானது 14 மாநிலங்களையும், 72 மாவட்டங்களையும் கடந்து சென்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் அவருடன் பா.ஜ.கவின் எதிரி கட்சிகளின் தலைவர்கள் இறுக்கமாக கைகோர்த்தனர்.

ராகுலின் தாயாரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான சோனியா காந்தி, அவரின் சகோதரி பிரியங்கா காந்தி உட்பட மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியும் ராகுலுடன் கைகோர்த்தார்.

ஜம்மு காஷ்மீருக்கு தனது யாத்திரையை அவர் முடிக்கும் முகமாக வந்தபோது  அம்மாநிலத்தின் தலைவர்களான பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோரும்  யாத்திரையில் கைகோர்த்தனர். இது மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.

மாநிலங்கள் வாரியாக ராகுல் சென்றபோது அரசியல் தலைவர்கள் மாத்திரமின்றி, சினிமா நட்சத்திரங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் ராகுலோடு இணைந்தனர்.

இந்நிலையில் ராகுலின் ஆடைகள், அவரது தோற்றம் குறித்து பா.ஜ.கவினர் கிண்டலும் கேலியும் தெரிவித்ததோடு, பல விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

இதை தனது சிரிப்பின் மூலம் கடந்து சென்றுகொண்டிருந்தார் ராகுல். அவரது யாத்திரையின்போது பாதுகாப்பு சரியான முறையில் வழங்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியினர் மோடி அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தினர்.

அது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையிலேயே அவர் ஜம்மு காஷ்மீர் சென்ற போது குண்டு வெடிப்பு சம்பவங்களும் இடம்பெற்றன.

2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள மக்களவை  தேர்தலில் மோடியின் தேசிய ஜனநாயக கூட்டணியை தோற்கடிக்கும் முகமாக, அனைத்து மாநிலங்களிலும் கூட்டணிக்கு எதிராக உள்ள கட்சிகளை ஒன்றிணைப்பதே ராகுலினது இந்த யாத்திரையின் நோக்கம் என்பது முக்கிய விடயம்.

ராகுலின் இந்த நகர்வுகள் பா.ஜ.கவை சற்று மிரட்டித்தான் பார்த்துள்ளது. மோடிக்கு செய்வதற்கு வேறு வழியில்லை.

பாத யாத்திரை முடிவுற்றதும் ராகுல் மீது உள்ள குஜராத் வழக்கை அவசர அவசரமாக தூசு தட்டி எடுத்து, தீர்ப்பு வரைக்கும் கொண்டு வந்துவிட்டுள்ளார்.

ராகுலின் யாத்திரையை விட அவரின் தாடிதான் மோடியை மிகவும் சங்கடப்படுத்திவிட்டது என தற்போது பா.ஜ.கவின் பக்கமிருந்து மெதுவாக செய்திகள் கசிந்தவண்ணம் உள்ளன.

ராகுல் இன்னமும் பிரம்மச்சாரியாகவே இருக்கிறார். இதன் காரணமாக அவரது யாத்திரையின்போது அவரை வரவேற்றவர்களில் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

வழக்குத் தீர்ப்பின்போது சூரத் நீதிமன்ற நீதவான் வர்மா ‘குற்றத்தை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்கிறீர்களா’ எனக் கேட்டபோது அதற்கு முடியாது என்று கூறிவிட்டார், ராகுல். அப்படி  அவர் உறுதியாக கூறியபோதே மேன்முறையீட்டுக்கு செல்ல மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

அவ்வாறு அவர் மேன்முறையீட்டுக்கு சென்றாலும் கூட, மோடி தனது செல்வாக்கால் வழக்கை 2025ஆம் ஆண்டு வரை, அதாவது தேர்தல் முடிந்த பிறகும் இழுத்தடிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது. அப்படியானால், ராகுல் சிறைக்கு செல்லத்தான் போகின்றாரா?

அவரது பரம்பரையினரில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் சிறை சென்றவர்கள் தான். அந்த அனுபவங்களே பின்னாட்களில் அவர்களை அரசியலில் புடம் போட்டன. இப்போது ராகுல் சிறை செல்லும் அளவுக்குச் சென்றால் மறுபக்கம் மோடியின் ஆதரவு அலைகள் சற்று குறையும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததாக போற்றப்படும் காங்கிரஸ் கட்சியின் ஓர் இளம் தலைவருக்கு பயந்து, அவரை சிறைக்கு அனுப்பிவிட்டுத்தான் 72 வயது மோடி, அடுத்த தேர்தலில் வெற்றி பெறப்போகின்றாரா?

 

Share.
Leave A Reply