சீனா கடந்த தசாப்தத்தில் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பாரிய நிதி கடனாக வழங்கியதன் மூலம் அதன் உலகளாவிய செல்வாக்கை அதிகரித்துள்ளதுடன், உலகின் மிகப்பெரிய கடன் வழங்குநர்களில் ஒருவராகவும் மாறியுள்ளது.
சீனாவிடம் கடன் பெற்று கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வரும் நாடுகளுக்கு தற்போது ஒரு அவசரகால கடன் மீட்பு வழங்குநராகவும் பீஜிங் மாறியுள்ளதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன .
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் (China’s Belt and Road Initiative) ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ செயற்திட்டத்தின் கீழ் கடனாளிகளாக இருக்கும் ஆர்ஜென்டினா, பாகிஸ்தான், கென்யா மற்றும் துருக்கி உள்ளிட்ட 22 நாடுகளின் கடனை மீள செலுத்துவதற்காக சீனா சுமார் 240 பில்லியன் டொலர்களை 2008 மற்றும் 2021 க்கு இடையில் பிரத்தியேகமாக செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை கடனை மீள செலுத்துவதன் பொருட்டு வழக்கமாக அமெரிக்கா அல்லது சர்வதேச நாணய நிதியம் போன்றவை வழங்குவதை விட . சீனாவின் நிதி உதவி சிறியதாக இருந்த போதிலும்,நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கு இது முக்கிய உதவியாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும் வளர்முக நாடுகள் பலவற்றுக்கு சீனா, உதவி வழங்கும் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மறுபுறம் இது பீஜிங்கின் எழுச்சியாகவே பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவும் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக இதேபோன்ற உத்தியை கையாண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
1980 களின் போது பாரிய கடன் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்த லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளை கடன் நெருக்கடியிலிருந்து விடுவிக்க அமெரிக்கா உதவியது.
குறிப்பாக 1930 களில் மற்றும் 2 ஆம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா ஒரு உலகளாவிய நிதிய சக்தியாக அதன் எழுச்சியைத் தொடங்கியது.
எனினும் காலத்திற்கு காலம் சீன- அமெரிக்க உதவிகளுக்கிடையே வேறுபாடுகள் உள்ளமையும் முக்கிய விடயமாகும்.
பிரதானமாக சீனாவின் கடன்கள் மிகவும் இரகசியமானவை, அதன் பெரும்பாலான செயல்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகள் பொதுமக்கள் பார்வையில் இருந்து மறைக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.
இது மறுபுறம் உலகின் நிதி அமைப்பு ‘குறைவான நிறுவனமயமாக்கல், குறைவான வெளிப்படைத் தன்மை மற்றும் நிதி சிதறிச் செல்வதைப் பிரதிபலிக்கிறது.
மேலும், சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை செயற் திட்டத்தின் கீழ் 2016 இல் கென்யாவில் மொம்பாசா-நைரோபி ஸ்டாண்டர்ட் கேஜ் ரயில் பாதையை அமைப்பதற்கான திட்டம் முழுமையடையாமல் உள்ளமை, சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை செயற் திட்டத்தில் உள்ள குறைபாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சீனாவின் மத்திய வங்கி ஏனைய வெளிநாட்டு மத்திய வங்கிகளுடனான கடன்கள் அல்லது நாணய மாற்று ஒப்பந்தங்கள் பற்றிய தரவுகளை வெளியிடுவதில்லை என்றும் அதேபோன்று சீனாவின் அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மற்ற நாடுகளுக்கு கடன் வழங்குதல் பற்றிய விரிவான தகவல்களை வெளியிடுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சீன வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ள பிற நாடுகள் தங்கள் வருடாந்திர அறிக்கைகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகள், மற்றும் தரவு தொகுப்பைத் தயாரிக்க பிற ஆவணங்களை நம்பியிருத்தன என்றும் தெரிவிக்கப்படுகிறது .
சீனாவிடம் கடன் பெற்ற பெரும்பாலான நாடுகள் மிகுந்த நிதி நெருக்கடியை எதிர்நோக்கிய அதேவேளை கொவிட் -19 பெருந்தொற்று பரவலால் பொருளாதார ரீதியில் மேலும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்ட உதாரணமாக அர்ஜென்டினா 2014 மற்றும் 2020 இல் பெற்ற கடன் செலுத்தவில்லை. அதன் தேசிய கடனுடன் பல தசாப்தங்களாக போராடி வருகிறது.
இதற்கிடையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் அதன் நாணய வீழ்ச்சியை கண்டன .
இலங்கையும் 2021 இல் சீனாவிடமிருந்து பணத்தைக் கடனாகப் பெற்றது குறிப்பிடத்தக்கது. எனினும் கடனை மீள செலுத்துவற்காக சீனா வழக்கும் உதவி நிதிக்கான வட்டி விகிதங்கள் மலிவானவை அல்ல என்பதையும் புறக்கணிக்க முடியாது .
மீட்புக் கடன்களுக்கான சர்வதேச நாணய நிதியம் வழங்கும் 2 சதவீத வட்டியுடன் ஒப்பிடும்போது சீன வங்கிகள் 5 சதவீத வட்டி கோருகின்றன என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
பெரும்பாலான கடன்கள் சீனாவின் வங்கித் துறைக்கு மிக முக்கியமானதாக கருதப்படும் நடுத்தர வருமான நாடுகளுக்கு நீடிக்கப்படுகின்றது.
அதேசமயம் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு அதற்குப் பதிலாக கடன் மறுசீரமைப்பு வழங்கப்படுகிறது.
இதேவேளை ‘பீஜிங் இறுதியில் அதன் சொந்த வங்கிகளை மீட்க முயற்சிக்கிறது. அதனால்தான் கடனை மீள செலுத்துவற்காக கடன் வழங்கும் ஆபத்தான வணிகத்தில் இறங்கியுள்ளது ‘ என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஒரு தசாப்த காலமாக ‘ஒரே மண்டலம் ஒரே பாதை செயற் திட்டம் ‘ மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பீஜிங்கின் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை செயற் திட்டம் குறித்த உட் கட்டமைப்பு திட்டங்களின் கீழ் ,பப்புவா நியூ கினி மற்றும் கினியாவிலிருந்து கென்யா வரை நெடுஞ்சாலைகளை அமைத்தல் இலங்கையிலிருந்து மேற்கு ஆபிரிக்கா வரை துறைமுகங்களை நிர்மாணித்தல் மற்றும் மக்களுக்கு மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகளை லத்தீன் அமெரிக்கா முதல் தென்கிழக்கு ஆசியா வரை வழங்குதல் என ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டொலர்களை கொட்டியுள்ளது.
இலங்கையில் துறைமுக நகரம் (Port City) என அழைக்கப்படும் கொழும்பு சர்வதேச நிதி நகரமும் இந்த ஒரே மண்டலம் ஒரே பாதை செயற்றிட்டத்தின் கீழ் அமையும் ஓர் அபிவிருத்தி திட்டமாகும். காலிமுகத்திடலுக்கு அண்மையாக நிர்மாணிக்கப்பட்டு வரும் இதற்கான நில மீட்புப் பணிகள் 2018 ஜனவரியில் நிறைவடைந்தன.
முழுத் திட்டத்திற்குமான செலவு 15 பில்லியன் அமெரிக்க டொலராக 2017 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது. இந்நகரம் கொழும்பு துறைமுக விரிவாக்க செயற்றிட்டத்தின் கட்டுமான வளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பிரதான நகரமாக அமையும்.
சீனத் தலைவர் ஜி ஜின்பிங் முதன் முதலில் 2013 இல் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை செயற்திட்டத்தை முன்வைத்தார்.
இந்த முயற்சியானது உலகிக்கு சீனாவின் கூர்மையான உயர்வைகாட்டுவதாக கருதப்படுகிறது. மார்ச் 2021 நிலைவரப்படி, 139 நாடுகள் இந்த திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதமாக காணப்படுகிறதாக அமெரிக்க சிந்தனைக் குழுவான வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதேவேளை ‘ஒரே மண்டலம் ஒரே பாதை செயற்திட்டத்தின் மூலம் முதலீடுகளின் முக்கியப் பெறுநரான ஆபிரிக்காவை சீனா ஓர் ‘கடன் பொறிக்குள் தள்ளுகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன .
எனினும் சீன வெளியுறவு அமைச்சர் க்வின் கங் அதனை நிராகரித்தார்.’ஆபிரிக்கா அதன் கடன் சுமையை குறைக்க சீனா எப்போதும் உறுதியுடன் உள்ளது’ என்று அவர் கூறியுள்ளதுடன் பல ஆபிரிக்க நாடுகளுடன் பீஜிங்கின் கடன் நிவாரண ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் ‘கடன் பொறி என்று அழைக்கப்படுவதில் சீனா கடைசியாக குற்றம் சாட்டப்பட வேண்டும்,’ என்றும் அவர் கூறினார். அத்துடன் வளரும் நாடுகளில் கடனை மோசமாக்குவதற்கு அமெரிக்க வட்டி உயர்வுகளே காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.
ஏதோ ஒருவகையில் அமெரிக்காவும்,சீனாவும் உலக நாடுகளுக்குள் ஊடுருவி மறுக்கவோ மறைக்கவோ முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது என்பதே யதார்த்தம்.
ஆர். பி.எ ன்.