சென்னையில் உள்ள புகழ்பெற்ற கலாக்ஷேத்ரா அமைப்பில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீது அங்கு பயிலும் மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சென்னையில் செயல்பட்டுவரும் காலாக்ஷேத்ரா ஃபவுண்டேஷன் தமிழகத் தலைநகரின் மிக முக்கியமான கலாசார அடையாளங்களில் ஒன்று. இங்கு, பரதநாட்டியம், கதகளி, வாய்ப்பாட்டு, வாத்திய இசை ஆகிய கவின் கலைகளில் நான்காண்டு கல்வியை முடிப்பவர்களுக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

1993இல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அமைப்பாக கலாக்ஷேத்ரா அங்கீகரிக்கப்பட்டது.

இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மீதுதான் தற்போது பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பாக, சமூக ஊடகங்களின் பிரத்யேக குழுக்களில் (Closed groups) இது தொடர்பான புகார்கள் பதிவுசெய்யப்பட்டன.

ஆனால், ஊடகங்களிடம் வெளிப்படையாகப் பேச யாரும் அந்தத் தருணத்தில் முன்வரவில்லை. அனிதா ரத்னம் போன்ற பிரபல நடனக் கலைஞர்கள் தங்களுடைய சமூக ஊடகப் பக்கங்களில் இதுகுறித்து சுட்டிக்காட்டினர்.

அதாவது, கலாக்ஷேத்ராவில் பணியாற்றும் நான்கு ஆண் ஆசிரியர்கள் பெண்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்துவதாகவும் இது தொடர்பாக நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும்தான் இந்தக் குற்றச்சாட்டுகளின் சாராம்சம்.

மார்ச் 21ஆம் தேதியன்று தேசிய பெண்கள் ஆணையமும் இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. நோட்டீசும் அனுப்பப்பட்டது.

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம்.

அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.

இதையடுத்து கலாக்ஷேத்ரா அமைப்பு மத்திய அரசின் மூலம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

“இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய கலாசார அமைச்சகத்திற்கு இதுதொடர்பாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தது கலாக்ஷேத்ரா.

அதேநேரம், “கடந்த சில மாதங்களாகவே சமூக ஊடகங்கள் மூலம் சில ஆசிரியர்கள் குறித்தும் கலாக்ஷேத்ரா குறித்தும் அவதூறு பரப்பப்படுகின்றன.

காலக்ஷேத்ராவில் மிக தீவிரமாகச் செயல்படும் உள் விசாரணைக் குழு (ICC) இந்தப் புகார்கள் குறித்துத் தாமாக முன்வந்து இரண்டரை மாதங்களுக்கு விசாரித்தது. ஆனால், அந்தப் புகார்கள் அடிப்படையற்றவை என்பது தெரியவந்தது,” என்றுகூறி, அந்தப் புகார்களைப் புறம்தள்ளியது.

இதையடுத்து, உள் விசாரணைக் குழு நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட மாணவியே புகாரை மறுத்திருப்பதால் இந்த விவகாரத்தை இத்தோடு மூடிவிட முடிவு செய்திருப்பதாக தேசிய பெண்கள் ஆணையம் மார்ச் 25ஆம் தேதி தெரிவித்தது.

புதன்கிழமையன்று கலாக்ஷேத்ராவுக்கு தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

ஆனால், அவரிடம் சரியாகப் பேச அனுமதிக்கவில்லை என்றும் அனைவர் முன்பாகவும் விசாரணை நடத்தப்பட்டதாகவும் மாணவிகள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில்தான் வியாழக்கிழமையன்று, மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். அங்கு வந்த செய்தியாளர்களுக்கு முதலில் அனுமதி மறுத்த கலாக்ஷேத்ரா நிர்வாகம், பிறகு அவர்களை உள்ளே அனுமதித்தது.

ஊடகங்களிடம் பேசிய மாணவிகள் பொதுவாக சில குற்றசாட்டுகளை முன்வைத்தார்கள். சில ஆசிரியர்களின் நடத்தைகள் குறித்தும் புகார்களைத் தெரிவித்தனர்.

போராட்டம் தொடர்ந்த நிலையில், கல்லூரி மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை மூடப்படுவதாக கலாக்ஷேத்ரா அறிவித்தது.

விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் இரண்டு நாட்களுக்குள் விடுதியைக் காலி செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டது. இந்த நாட்களில் நடக்கும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் புதிய தேதிகள் பிறகு அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த விடுமுறை அறிவிப்பை, தங்களது போராட்டத்தை முடக்குவதற்கான முயற்சியாகப் பார்த்த மாணவிகள் வியாழக்கிழமை இரவில் விழித்திருந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கலாக்ஷேத்ரா

 

வருவாய்க் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் அங்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த காலக்ஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரனை மாணவிகளும் பத்திரிகையாளர்களும் சூழ்ந்துகொண்டபோது, “மாணவிகளின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். அவர்கள் சொல்லும் புகார் குறித்து எல்லோரிடமும் கலந்தாலோசித்து விசாரிப்போம்,” என்றார்.

ஆனால், “இரண்டரை மாதங்களுக்கும் மேல் விசாரித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” எனக் கேட்டபோது, அவர் பதிலளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டார்.

வியாழக்கிழமை நள்ளிரவில் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மாணவிகள் புகார்கள் எதையும் தங்களிடம் பதிவு செய்யவில்லை என்றும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

பிறகு, போராட்டத்தை நாளை காலை தொடரப் போவதாகக் கூறிவிட்டு அதிகாலை இரண்டு மணிவாக்கில் மாணவிகள் தங்கள் அறைகளுக்குத் திரும்பினர்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதற்கிடையில் இந்த விவகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இன்று எதிரொலித்தது. எஸ்.எஸ். பாலாஜி, தி. வேல்முருகன், கு. செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இதுகுறித்துக் கேள்வியெழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.

கலாக்ஷேத்ரா மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டு

இந்த நிலையில், மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் விளைவாக, கலாஷேத்திரா ஃபவுன்டேஷனில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளைவிட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.

அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அங்கு ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அரசைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார்.

இதற்கிடையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா , “கலாஷேத்ரா கல்லூரியில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் தொல்லை தொடர்பாக இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் வரவில்லை. புகார் அளிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்” என்று கூறினார்.

தமிழக பெண்கள் ஆணையத்தின் தலைவி ஏஎஸ். குமாரி கலாக்ஷேத்ராவுக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அதற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய அவர், “இந்த விவகாரம் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்போவதாக” கூறினார்.
கலாக்ஷேத்ரா மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டு

மாணவிகளைப் பொறுத்தவரை பாலியல் தொந்தரவு அளித்ததாக நான்கு பேரின் பெயர்களைச் சொல்கின்றனர்.

2008ஆம் ஆண்டிலிருந்தே இதுபோன்ற பாலியல் தொந்தரவு இருப்பதாகக் கூறியும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள் மாணவர்கள்.

வியாழக்கிழமை இரவில் அங்கு சில மாணவர்களின் பெற்றோர் வந்திருந்தனர். அவர்களிடம் பேசியபோது, அங்கு நிலவும் ரகசியத்தன்மை குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

“எங்கள் குழந்தைகளை இங்கே சேர்த்துவிடும்போது உள்ளே சென்றதுதான். அதற்குப் பிறகு நாங்கள் உள்ளே செல்ல முடியாது. படிப்பின் நிறைவில் ஒரு கலை நிகழ்ச்சி நடக்கும். அப்போது ஆடிட்டோரியத்திற்குச் செல்லலாம்.

மற்றபடி எங்கேயும் செல்ல முடியாது, எதுவும் கேட்க முடியாது. பிள்ளைகளின் படிப்பு பாழாகிவிடும் என்பதால் பேசாமல் இருக்க வேண்டியிருக்கிறது,” என்று கூறினார் கேரளாவில் இருந்து வந்திருந்த பெற்றோர் ஒருவர்.

1936ஆம் ஆண்டில் ருக்மிணி தேவி அருண்டேல் மற்றும் ஜார்ஜ் அருண்டேல் ஆகியோரால் அடையாறில் உள்ள பிரம்மஞான சபையின் தோட்டத்தில் துவங்கப்பட்டது கலாக்ஷேத்ரா. 1962இல் இருந்து தற்போது திருவான்மியூரில் உள்ள இடத்திற்கு மாறியது. 1993இல் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின்படி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது.

Share.
Leave A Reply