ரஷ்யா – உக்ரேன் போர் அதன் 397 வது நாளில் (இன்று) காலடி எடுத்து வைக்கிறது. இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தமது நட்பு நாடான பெலாரஸில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்த போவதாக அறிவித்துள்ளார்.
இது சர்வதேச ரீதியில் பல்வேறு பிரதிபலிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இது ரஷ்யாவின் “ஆபத்தான” மற்றும் “பொறுப்பற்ற” செயல் என நேட்டோ கண்டித்துள்ளது.
மேலும் இந்த நிலைமையை “உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது. இதேவேளை ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகிறது என்று தான் நம்பவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
பெலரைஸை பொறுத்தமட்டில் உக்ரேனுடனும், நேட்டோ உறுப்பினர்களான போலந்து, லிதுவேனியா மற்றும் லாட்வியாவுடனும் நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி புட்டினின் அறிவிப்பின் சாத்தியமான அச்சுறுத்தலைத் தீர்க்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என உக்ரேன் கோரியுள்ளது.
அத்துடன் இந்த நடவடிக்கை அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தங்களை மீறுவதாகவும் உக்ரேன் குற்றம் சாட்டியுள்ளது.
எனினும், இந்த குற்றச்சாட்டை ஜனாதிபதி புட்டின் மறுத்துள்ளதுடன் அமெரிக்கா தனது ஆயுதங்களை ஐரோப்பாவில் நிலைநிறுத்துவது எந்த வகையில் நியாயமானது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
மறுபுறம் அணுசக்தி பகிர்வு பற்றிய ரஷ்யாவின் கருத்து “தவறானது” என்று நேட்டோ செய்தித் தொடர்பாளர் ஓனா லுங்கெஸ்கு கூறியுள்ளதுடன் “நேட்டோ நட்பு நாடுகள் தங்கள் சர்வதேச கடமைகளுக்கு முழு கௌரவத்துடன் செயல்படுகின்றன” என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை 2010 இல் கையெழுத்திடப்பட்ட புதிய START உடன்படிக்கையை ரஷ்யா தொடர்ந்து மீறுவதாக இராணுவக் கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது .
2010 இல் கையெழுத்திடப்பட்ட இந்த உடன்படிக்கையானது அமெரிக்க மற்றும் ரஷ்ய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது மாத்திரமன்றி ஒருவருக்கொருவர் ஆய்வு செய்யும் அதிகாரத்தை அளிக்கிறது.
மேலும் , ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல்,கூறுகையில் , புட்டினுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகுமாறு பெலாரஸை வலியுறுத்தியுள்ளார் , அதைச் செயல்படுத்த தவறினால் நாடு மேலும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
இவற்றுக்கு மத்தியில் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகர் , ரஷ்யா பெலாரஸை “அணுசக்தி பணயக்கைதியாக” மாற்றியுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளத்துடன் , ரஷ்யாவின் திட்டங்கள் பெலாரஸில் “உள்நாட்டு ஸ்திரமின்மையை நோக்கிச் செல்லும் என்றும், நாட்டில் ரஷ்ய எதிர்ப்பு உணர்வு மேலும் வலுவடையும் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, நாடுகடத்தப்பட்ட பெலாரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வியாட்லானா சிகானுஸ்காயா, ரஷ்யா தனது நாட்டில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது “பெலாரஷ்ய மக்களின் விருப்பத்திற்கு முற்றிலும் முரணானது” என்றும், பதிலடித் தாக்குதல்களுக்கு அது சாத்தியமான இலக்காக மாறும் என்றும் கூறியுள்ளார்.
உக்ரேனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசகர் யூரி சாக் , ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு உக்ரேன் பழகிவிட்டதாகவும், பெலாரஸில் நிலைநிறுத்தப்படுவது போரின் முடிவை மாற்றாது என்றும் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பில் அவர் விபரிக்கையில் ரஷ்யாவால் இந்தப் போரை வெல்ல முடியாது. ஏனெனில் அவர்களுக்கு நீடிக்க முடியாது.
அவர்களால் உக்ரேனை ஒருபோதும் வெல்ல முடியாது. ஏனென்றால் பெரிய அளவிலான படையெடுப்பின் முதல் நாளிலிருந்தே சாத்தியமான அணுசக்தி தாக்குதலின் கற்பனையான அச்சுறுத்தலுடன் தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார் .
2022ல் போர் தொடங்கியதில் இருந்து பெலாரஸில் இராணுவ தளவாடங்களை நிலைநிறுத்தி வருவதால், ரஷ்யாவின் நடத்தையில் புதிதாக எதுவும் இல்லை என்றும் சாக் தெரிவித்துள்ளார் .
ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் மற்றொரு மூத்த ஆலோசகரான Mykhailo Podolyak, இந்த நடவடிக்கையை “பயமுறுத்தும் தந்திரோபாயங்கள்” என்று வகைப்படுத்தி உள்ள அதேவேளை, இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அணு ஆயுதப் போராக அதிகரிக்கும் அபாயம் “மிகவும் குறைவாக” இருப்பதாக அமெரிக்க சிந்தனைக் குழுவான இன்ஸ்டிடியூட் ஒப் வோர் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அணு ஆயுதங்களை ஏவுவதற்குப் பயன்படுத்தக் கூடிய சிறிய எண்ணிக்கையிலான ஏவுகணை அமைப்புகள் ஏற்கனவே பெலாரஸுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி புடின் சனிக்கிழமை தனது உரையில் தெரிவித்துள்ள நிலையிலேயே பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியீட்டு வருகின்றனர் .
1990 களின் நடுப்பகுதியில் இருந்து மொஸ்கோ நாட்டிற்கு வெளியே அணு ஆயுதங்களை அடிப்படையாகக் கொண்டது இதுவே முதல் முறையாகும்.
1991 இல் சோவியத் யூனியனின் சரிவை அடுத்து , ரஷ்யா, உக்ரேன், பெலாரஸ் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நான்கு புதிய சுதந்திர நாடுகளை அடிப்படையாகக் கொண்டதாக மாற்றமடைந்தது.
இதேவேளை பெலாரஸில் தந்திரோபாய அணு ஆயுதங்களுக்கான சேமிப்புக் களஞ்சியங்களை அமைக்கும் பணி ஜூலை 1ஆம் திக திக்குள் நிறைவடையும் என்று ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மொஸ்கோவிற்கு விஜயம் செய்த சில நாட்களுக்குப் பின்னர் , ரஷ்யாவும் சீனாவும் “அனைத்து அணுசக்தி சக்திகளும் தங்கள் அணு ஆயுதங்களை தங்கள் தேசிய எல்லைகளுக்கு அப்பால் நிலைநிறுத்தக்கூடாது, மேலும் அவர்கள் வெளிநாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து அணு ஆயுதங்களையும் திரும்பப் பெற வேண்டும்” என்று ஒரு கூட்டறிக்கை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வொஷிங்டனை தளமாகக் கொண்ட போர் ஆய்வுக் கழகத்தின் (ISW) ஆய்வாளர்கள் கூறுகையில் உக்ரேன் -ரஷ்ய யுத்தம் அணு ஆயுதப் போராக அதிகரிக்கும் அபாயம் “மிகவும் குறைவாகவே” இருப்பதாகவும் : “புடின் ஒரு ஆபத்து இல்லாத நடிகர் என்றும் , அவர் மேற்கத்திய தீர்மானத்தை சீர்குலைக்கும் நோக்கில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான எந்த நோக்கமும் இல்லாமல் மீண்டும் மீண்டும் அச்சுறுத்துகிறார்.”என்றும் கூறியுள்ளனர்.
இருப்பினும், அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச பிரசாரம் புட்டினின் அறிவிப்பு மிகவும் ஆபத்தானதாக அமையும் “உக்ரேனில் நடந்த போரின் சூழலில், தவறான கணக்கு அல்லது தவறான விளக்கத்திற்கான வாய்ப்பு மிக அதிகம்.
அணு ஆயுதங்களைப் பகிர்வது நிலைமையை மிகவும் மோசமாக்குகிறது மற்றும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும்,” என்று தெரிவிக்கப்படுகிறது.
பெலாரஷ்ய இராணுவம் உக்ரேனில் முறையாகப் போரிடவில்லை என்றாலும், மின்ஸ்க் மற்றும் மொஸ்கோ நெருங்கிய இராணுவ உறவைக் கொண்டுள்ளன. மின்ஸ்க் கடந்த ஆண்டு உக்ரேனுக்கு படையினரை அனுப்ப பெலாரஷ்ய பிரதேசத்தைப் பயன்படுத்த மொஸ்கோவை அனுமதித்தது மற்றும் இரு நாடுகளும் கூட்டு இராணுவப் பயிற்சியை முடுக்கிவிட்டன.
மேலும் ,மொஸ்கோ பீஜிங்குடன் இராணுவக் கூட்டணி ஒன்றினை உருவாக்குகிறது என்ற கூற்றை புட்டின் நிராகரித்தார், அதற்குப் பதிலாக மேற்கத்திய சக்திகள் இரண்டாம் உலகப் போரின்போது ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் இடையேயான கூட்டாண்மையைப் போன்ற ஒரு புதிய “அமைப்பை ” உருவாக்குகின்றன என்று கூறியுள்ளார் தொடர்ந்து அவர் கூறுகையில் “நாங்கள் சீனாவுடன் இராணுவக் கூட்டணியை உருவாக்கவில்லை” இராணுவ-தொழில்நுட்ப தொடர்புத் துறையில் எங்களுக்கு ஒத்துழைப்பு உள்ளது.
இதை நாங்கள் மறைக்கவில்லை. எல்லாம் வெளிப்படையானது, அதில் ரகசியம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். எதிர்பார்த்த அளவுக்கு ரஷ்யா போரில் முனேற்றம் காணாத நிலையில் , ஆப்பிழுத்த குரங்காகவே உள்ளது என்று தான் கூற வேண்டும்.
-ஆர். பி .என் –