அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய நாணயமான ரூபாயைத் தந்து, வெளிநாடுகளில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்ய முடியுமா, அப்படி ஒரு காலம் இந்திய ரூபாய்க்கு வருமா என்கிற எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாக நம் நாட்டில் பலருக்கும் இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இப்போது நிஜமாகத் தொடங்கி உள்ளது.

சர்வதேச அரங்கில் இந்தியாவின் இடம் நாளுக்கு நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிக்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் டாலருக்கு பதிலாக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தை ரூபாயிலேயே மேற்கொள்ளலாம் என்ற ஒப்பந்தத்துக்கு ரஷ்யா, சீனா, சிங்கப்பூர், ஜெர்மனி, மலேசியா, மொரிஷியஸ், இலங்கை, மியான்மர், இஸ்ரேல் உள்ளிட்ட 18 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

அதன்படி, இந்த நாடுகளுடனான ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்துக்கு டாலரில் பணத்தைத் தர வேண்டும் என்கிற அவசியமில்லை. இந்திய ரூபாயைத் தந்து பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.

ஒரு நாட்டின் வலிமையை அந்த நாட்டின் நாணய மதிப்பை வைத்தும், அந்த நாணயத்தின் பயன்பாட்டை வைத்தும் மதிப்பிடலாம். அந்த வகையில், உலகின் எந்த மூலையிலும் அமெரிக்க டாலருக்கு மதிப்பு உண்டு.

அமெரிக்க டாலரைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. எந்த நாட்டிலும் டாலரை வாங்க மாட்டோம் என்று சொல்ல மாட்டார்கள்.

எனவே, அதன் மதிப்பு நீண்ட காலத்தில் உயர்ந்துகொண்டே வருகிறது. தவிர, உலகம் முழுக்க பயன்படுத்தும் முக்கியமான கரன்ஸி என்பதால், அதன் மதிப்பு தினம்தினம் ஏறும் அல்லது இறங்கும்.

இந்த நிலையில், டாலருக்கு பதிலாக இந்திய நாணயமான ரூபாயைத் தந்து, வெளிநாடுகளில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்ய முடியுமா, அப்படி ஒரு காலம் இந்திய ரூபாய்க்கு வருமா என்கிற எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாகவே நம் நாட்டில் பலருக்கும் இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இப்போது நிஜமாகத் தொடங்கி இருக்கிறது.

அதன் முதல்முயற்சியாக ரிசர்வ் வங்கி 18 நாடுகளுடனான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை ரூபாயில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

உலக நாடுகள் முழுவதிலும் டாலர் நெருக்கடி என்ற பிரச்னை நிலவி வருகிறது. இதற்குத் தீர்வாக, பல நாடுகள் சொந்த நாணயங்களிலேயே வர்த்தகத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கின்றன.

உலகின் பல நாடுகள் தற்போது இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ள நிலையில், இந்தியா ஏற்றுமதி செய்ய அமெரிக்க டாலரை மட்டுமே நம்பியிருக்கத் தேவையில்லை.

நாம் தரும் இந்திய ரூபாயை நமக்குப் பொருள்களைத் தரும் நாடுகள் ரிசர்வ் வைத்து அதைப் பயன்படுத்தி வர்த்தகத்தை மேற்கொள்ளலாம்.
கமாலுதீன்

சரி, இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு என்ன பலன் என்று பிரபல ஏற்றுமதியாளர் கே.எஸ்.கமாலுதீனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்து சொன்னார் அவர்.

“இதுவரையிலும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தாங்கள் ஏற்றுமதி செய்யும் அல்லது இறக்குமதி செய்யும் பொருள்கள், சேவைகளுக்கான பரிவர்த்தனையை டாலரில் மேற்கொண்டு வந்தார்கள்.

Exchange Earners Foreign Currency (EEFC) என்ற கணக்கு மூலமாக டாலரில் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.

ஏற்றுமதி செய்த பொருள்களுக்கு டாலராகப் பணத்தை வாங்கி இந்தக் கணக்கில் டாலரை இருப்பு வைத்து இறக்குமதி செய்யும் போது அந்த டாலரைப் பயன்படுத்தியே பொருள்கள், சேவைகளை வாங்கி வருகிறோம்.

தற்போது 18 நாடுகளுடன் இந்திய ரூபாயிலேயே வர்த்தகம் மேற்கொள்ளலாம் என்ற முயற்சியினால் வர்த்தகர்கள் டாலரை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும், டாலரில் வர்த்தகம் செய்யும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கத்தைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

ஏனெனில் டாலர் மூலம் வர்த்தகம் செய்யும்போது கரன்ஸி மதிப்பு ஏற்ற, இறக்கத்தால், அதிக பலனை அடைய நமக்குப் பணம் தருபவர்கள் நினைப்பார்கள். ஆனால், இப்போது ரூபாயிலேயே வர்த்தகம் செய்யலாம் என்கிறபோது வர்த்தகப் பரிவர்த்தனைகள் மிகவும் விரைவாக நடைபெறும்.

அது மட்டுமல்லாமல், ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ளும்போது ரூபாயின் மதிப்பு சர்வதேச அரங்கில் வலுவடையும். அவ்வாறு ரூபாய் மதிப்பு வலுவடையும் பட்சத்தில் நம்முடைய பொருளாதாரமும் ஒட்டுமொத்தமாக வலுவடையும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும், நம்மிடம் இருக்கும் டாலர் இருப்பைக் குறையாமல் சிறப்பாக நிர்வகிக்க முடியும். டாலர் ரிசர்வ் மீதான அழுத்தங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

”தனிநபர்கள் ரீடெய்ல் பரிவர்த்தனைகளுக்கு ரூபாயை மற்ற நாடுகளில் பயன்படுத்த முடியாது. பிற நாடுகளில் அந்தந்த நாடுகளின் நாணயங்களை மாற்றிக்கொண்டுதான் செலவுகளை மேற்கொள்ள முடியும்…”

அதே சமயம், டாலரில் வர்த்தகம் செய்யும்போது ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கத்தைப் பார்த்து அதற்கேற்ப டாலரைப் பயன்படுத்தும்போது கிடைக்கக்கூடிய லாபம் ரூபாயில் வர்த்தகம் செய்யும்போது இருக்காது.

இறக்குமதி செய்யும்போது கைவசம் இருப்பில் இருக்கும் டாலரை வைத்தே இறக்குமதி செய்வோம். ஆனால், ரூபாயில் வர்த்தகம் செய்ய ஆரம்பித்த பிறகு இறக்குமதி செய்ய அதிகளவு ரூபாயைக் கொடுக்க வேண்டி வரலாம்.

தற்போது ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்துக்கு மட்டுமே ரூபாயில் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றபடி, தனிநபர்கள் ரீடெய்ல் பரிவர்த்தனைகளுக்கு ரூபாயை மற்ற நாடுகளில் பயன்படுத்த முடியாது. பிற நாடுகளில் அந்தந்த நாடுகளின் நாணயங்களை மாற்றிக்கொண்டுதான் செலவுகளை மேற்கொள்ள முடியும்” என்று அவர் கூறினார்.

ஏற்றுமதி பிசினஸ்

18 நாடுகளுடனான ரூபாய் அடிப்படையிலான வர்த்தகம் பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்போது ரூபாயின் மதிப்பு உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறலாம். தற்போது அமெரிக்காவின் டாலர், ஐரோப்பிய யூனியனின் யூரோ, ஜப்பானின் யென் ஆகிய நாணயங்கள் சர்வதேச அளவில் மதிப்புமிக்க கரன்சிகளாக இருக்கின்றன. அந்த வரிசையில் இந்திய ரூபாயும் இன்னும் சில ஆண்டுகளில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்!

Share.
Leave A Reply