ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைப்பதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
நியூயார்க்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ட்ரம்ப் வந்து சேர்ந்தார்.
அமெரிக்க அதிபர்கள், முன்னாள் அதிபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ரகசியக் காவல் படையினர் புடைசூழ நீதிமன்றத்திற்கு வந்த ட்ரம்ப், வழக்கமான நீலநிற கோட்டும், சிவப்பு நிற டையும் அணிந்திருந்தார்.
நீதிமன்றத்திற்குள் நுழையும் போதே சற்று மந்தமாக காணப்பட்ட ட்ரம்ப், தனக்காக காத்துக் கொண்டிருந்த வழக்கறிஞர்களை நோக்கி மெதுவாக நடந்து சென்றார்.
அங்கே, ட்ரம்ப் செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை. அவரது உடல் மொழி மற்றும் முக பாவனைகள் பெரிய அளவில் எதையும் வெளிப்படுத்துவதாக இல்லை.
ட்ரம்ப் ஆஜராவதை செய்தியாக்குவதற்காக அங்கே கூடியிருந்த பத்திரிகையாளர்கள் மொபைல் போன் மற்றும் லேப் டாப்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படவில்லை.
நீதிபதி ஜூவான் மெர்ச்சான் வந்ததும் ட்ரம்ப் உள்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.
நீதிமன்றத்திற்கு வெளியே அரசியல் மற்றும் ஊடக வெளியில் மிகவும் பரபரப்பாக இந்த வழக்கு பேசப்பட்டாலும், வழக்கைக் கையாறும் நீதிபதி மெர்ச்சான் ஒருபோதும் குரலை உயர்த்தவே இல்லை. வெகு நிதானமாக வழக்கை கையாண்டார்.
வழக்கறிஞர்களுக்கான காலக்கெடு, அடுத்த விசாரணைக்கான தேதி நிர்ணயம் போன்ற வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளாகவே அது அமைந்தது.
அரசியல் அரங்கில் வெகு ஆடம்பரமாக, ஆரவாரிக்கக் கூடியவரான ட்ரம்ப் நீதிமன்றத்தில் ஒரு சில வார்த்தைகளையே உதிர்த்தார்.
ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசிக்கையில் ட்ரம்ப், “நான் குற்றம் செய்யவில்லை” என்று மட்டுமே பதிலளித்தார்.
ஒரு கட்டத்தில் நீதிபதி மெர்ச்சான், வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளின் போதும் நீங்கள் நேரில் வர அனுமதி உண்டு என்பதை டிரம்பிடம் நினைவூட்டினார். நீங்கள் இதை புரிந்து கொண்டீர்களா என்று நீதிபதி கேட்க, ட்ரம்ப் “ஆம்” என்று ஒரே வார்த்தையில் பதிலுரைத்தார்.
நீதிமன்றத்திற்குள் கட்டுக்கடங்காமல் அல்லது விசாரணையை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டால், விசாரணையில் ஆஜராவதற்கான உரிமையை இழக்க நேரிடும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.
ட்ரம்ப் மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டார் என்று குற்றம்சாட்டிய அரசு தரப்பு வழக்கறிஞர், “என் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டால் உயிரிழப்பும் மற்றும் பேரழிவுமே மிஞ்சும்” என்று குறிப்பிட்டு அவர் பதிவிட்ட ஒரு சமூக ஊடகப் பதிவை சுட்டிக்காட்டினார்.
தன் மீதான குற்றச்சாட்டுகள் ஒரு மிகப்பெரிய அநீதி என்று நம்பும் ட்ரம்ப், மனம் நொந்துபோய் அவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என்று ட்ரம்ப் தரப்பு வழக்கறிஞர்கள் பதிலளித்தனர்.
மிகவும் மோசமான சொல்லாடல்களையும், வார்த்தை பிரயோகங்களையும் விரக்தியில் செய்துவிட்டார் என்று நியாயப்படுத்தும் உங்களை வாதங்களை ஏற்க முடியாது என்று நீதிபதி மெர்ச்சான் கூறினார்.
அவதூறு பேச்சு கூடாது என்ற எனது முந்தைய எச்சரிக்கை ஒரு வேண்டுகோள்தான், உத்தரவு இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, இந்த விவகாரம் மீண்டும் எழுந்தால் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்று எச்சரித்தார்.
ட்ரம்ப் மீதான வழக்கின் நீதிமன்ற நடைமுறைகள் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தன.
ட்ரம்ப் தனது இருக்கையில் இருந்து எழுந்ததுமே ரகசிய காவல் படையினர் அவரை சூழ்ந்து கொண்டனர். ட்ரம்ப் தனது வழக்கறிஞர்களிடம் சன்னமான குரலில் மெதுவாக பேசினார். இதனால், சற்று தொலைவில் அமர்ந்திருந்த பத்திரிகையாளர்களால் அவர் என்ன பேசினார் என்பதை கேட்க முடியவில்லை.
நீதிமன்றத்தின் மையத்தில் இருந்த நடைபாதை வழியே நடந்து சென்று பின்வாசல் வழியே ட்ரம்ப் வெளியேறினார். வெளியே நின்றிருந்த ஊடகத்தினரிடம் அவர் எதையும் பேசவில்லை. அவர் மிகவும் இறுக்கமாக காணப்பட்டார்.
அமெரிக்க அதிபர்களாக பதவி வகித்தவர்களில் குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்ட முதல் நபர் டொனால்டு ட்ரம்ப்தான். அந்த வகையில், நீதிமன்றத்தில் ட்ரம்ப் ஆஜரான அந்த 57 நிமிடங்களும் அமெரிக்க அரசியல் வரலாற்றில், கருப்புப் பக்கங்களாக பதிவாகியுள்ளன.