ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் 34 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, மேலும் 3 குற்ற வழக்குகளும் டிரம்பைத் துரத்துகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முனைப்பு காட்டும் டிரம்பின் அரசியல் எதிர்காலத்திற்கு அந்த வழக்குகள் வேட்டு வைக்குமா என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

 

ஆபாச நடிகை வழக்கில் ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகள் என்ன?

2007-ம் ஆண்டு டிரம்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டிய ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், அதுகுறித்து பொதுவெளியில் பேசாதிருக்க பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாகவே 34 குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு சற்று முன்னதாக டிரம்பின் வழக்கறிஞர் மிக்கேல் கோஹன் வாயிலாக இந்த பணம் ஸ்டார்மி டேனியல்சுக்கு வழங்கப்பட்டது.

நீதிமன்ற ஆவணங்களில் வழக்கறிஞர் மிக்கேல் கோஹன், வழக்கறிஞர் ஏ என்றும், ஸ்டார்மி டேனியல்ஸ் பெண்-2 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குற்றப்பத்திரிகையுடன் இணைந்துள்ள உண்மை அறிவிக்கையின் முதல் வரிகள், அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளை குறிப்பிடுகிறது.

“2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது வாக்களிக்கும் மக்களிடம் இருந்து தனக்கு எதிரான தகவல்களை மறைப்பதற்காக குற்றச் செயல் நடந்துள்ளது.

அதனை மறைக்க நியூயார்க் வணிக ஆவணங்களை டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் தவறாக பதிவு செய்தார்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்ப் அதிபராக இருந்த போது தவறிழைத்ததாக குற்றச்சாட்டு

நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த வழக்கறிஞர் மிக்கேல் கோஹனுக்கு பணத்தை டிரம்ப் திருப்பிக் கொடுத்த விதம் குறித்து அரசுத் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

2017-ம் ஆண்டு, டிரம்ப் அதிபராக பதவியேற்ற 10 மாதங்களுக்குப் பிறகு கோஹனை வெள்ளை மாளிகையில் டிரம்ப் சந்தித்தார்.

அதற்குப் பிறகு அடுத்த வந்த 10 மாதங்களில் டிரம்பின் சொந்த வங்கிக் கணக்கில் இருந்தும், அவரது சொத்துகளை நிர்வகிக்கும் அறக்கட்டளை வாயிலாகவும் கோஹனுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன என்கிறது அரசுத் தரப்பு.

அந்த காசோலைகள் அனைத்தும் ‘வழக்குக் கட்டணம்’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கோஹனோ, நடிகை ஸ்டார்மிக்கு தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருவதற்கான நடவடிக்கை அது என்று கூறுகிறார்.

“நியூயார்க் வர்த்தக ஆவணங்களில் டிரம்ப் நிறுவனத்தின் பணப் பரிமாற்ற பதிவுகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளன.

உண்மையில், அங்கே வழக்கறிஞரை பயன்படுத்துவதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை.

2017-ம் ஆண்டு சட்டரீதியான நடவடிக்கைகளுக்கான வழக்கறிஞர் ஏ-வுக்கு பணம் செலுத்தப்படவில்லை. பிரதிவாதியான டொனால்ட் ட்ரம்ப், தன்னுடைய மற்றும் பிறரது குற்றச் செயல்களை மறைக்க வணிக ஆவணங்களை தவறாக பதிவு செய்துள்ளார்” என்று அரசுத்தரப்பு குற்றம்சாட்டுகிறது.

‘பெட்டி கேஸ்’ பெரிய குற்றமாக மாறியது எப்படி?

குற்றச்செயலுக்கு ஆதரவாக இருப்பதால்தான் டிரம்ப் தனது பணப் பரிவர்த்தனையின் உண்மையான நோக்கத்தை மறைத்துவிட்டார் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் ப்ராக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

நடிகைக்கு அவர்கள் பணம் கொடுத்தது சட்டப்படி தவறானது அல்ல என்ற போதிலும், அதிபர் தேர்தல் பிரசாரத்திற்கு உதவும் வகையில் செய்த செலவுத் தொகையை மறைத்தது பெடரல் பிரசார நிதிச் சட்டத்தை மீறிய செயல் என்பது அவரது வாதம்.

நடிகை ஸ்டார்மிக்குப் பணம் கொடுத்ததை மறைத்த புகாரில் வழக்கறிஞர் கோஹன் மீதான குற்றச்சாட்டுகள் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்டன.

கோஹனுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்ததன் மூலம் அந்த குற்றச் செயலுடன் டிரம்பும் உடந்தையாகி விடுகிறார்,

இதுவே ஆவணங்களை தவறாக பதிவிடுவது என்ற தவறான நடத்தையை தீவிரமான குற்றச்செயலாகி விடுகிறது எனகிறார் அரசுத்தரப்பு வழக்கறிஞர் ப்ராக்.

ஆனால், டிரம்ப் தரப்பு வழக்கறிஞர்களோ, இது சட்டத்தை வளைக்கும் செயல், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று விமர்சிக்கிறார்கள்.

“ஒரே மாதிரியான குற்றச் செயல்கள்”

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப், தனது இமேஜைக் காப்பாற்ற மேலும் 2 பேருக்கு பணம் கொடுத்ததாக அரசு வழக்கறிஞர் ப்ராக் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல சர்ச்சையில் இருந்து தப்பிக்க நடிகைக்கு கோஹன் பணம் கொடுத்தது டிரம்பிற்கு தெரிந்திருந்தது என்பதை மேற்சொன்ன 2 நிகழ்வுகளும் கூடுதல் வலுவோடு காட்டுகின்றன என்று ப்ராக் கூறுகிறார்.

“2016 அதிபர் தேர்தலின் போது பிரதிவாதி தனது இமேஜைப் பாதிக்கும் எதிர்மறை தகவல்களை தேடிக் கண்டுபிடித்து, அவை ஊடகங்களில் வெளிவராமல் பார்த்துக் கொள்வதை ஒரு திட்டமாகவே முன்னெடுத்துள்ளார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் அவர் ஆதாயம் அடைந்துள்ளார்.” என்று குற்றப்பத்திரிகை கூறுகிறது.

“சட்டத்திற்கு விரோதமாக டிரம்ப் கடைபிடித்த திட்டச்செயல் முறையில் பங்கேற்ற அனைவருமே தேர்தல் விதிகளை மீறியவர்கள் மட்டுமின்றி, நியூயார்க் வர்த்தக ஆவணங்களில் பல தவறான பதிவுகள் இடம் பெற காரணமானவர்களும் கூட,” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்புக்கு எதிரான மேலும் 2 குற்றச்சாட்டுகளில் ஒன்று, டிரம்புக்கு திருமண பந்தத்திற்கு வெளியே உள்ள குழந்தை ஒன்றுக்கு 30,000 டாலர் வழங்கப்பட்டதை நான் அறிவேன் என்று வாயிற்காப்பாளர் கூறியதாக சொல்கிறது.

மற்றொன்று, டிரம்புடன் தொடர்பு இருப்பதாக கூறிய ஒரு பெண்ணுக்கு 1,50,000 டாலர் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடுகிறது. ஆனால், அதுபோன்ற தொடர்புகள் ஏதும் தனக்கு இல்லை என்று டிரம்ப் மறுத்துள்ளார்.

‘National Enquirer’ என்ற டேப்ளாய்ட் இதழின் முன்னாள் பதிப்பாளரான டேவிட் பெக்கரிடம் இருந்து இந்த பணப் பட்டுவாடாக்கள் நடந்திருப்பதாக அரசுத் தரப்பு கூறுகிறது.

இந்த தவறுகளை வெளியுலகிற்கு தெரியாமல் மறைக்க டிரம்புடன் கைகோர்த்து டேவிட் பெக்கர் செயல்பட்டார் என்பது அரசுத்தரப்பு குற்றச்சாட்டு. அதற்கு வெகுமதியாகவே, டிரம்ப் அதிபராக பதவியேற்ற விழாவிற்கு டேவிட் பெக்கர் அழைக்கப்பட்டார் என்று அரசுத்தரப்பு வாதிடுகிறது.

அமெரிக்காவில் இதுபோன்ற நிகழ்வுகளில் நீதிமன்றத்திற்கு வெளியே பணம் கொடுத்து சமரசம் செய்து கொள்வது குற்றம் அல்ல. ஆனால், அந்த பணத்தை ட்ரம்ப் செலுத்திய விதமும், அது நடந்தேறிய காலமும் தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளன.

ஆனால், ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் வழக்கு மட்டுமல்ல, மேலும் 3 வழக்குகள் ட்ரம்பை நெருக்கி வருகின்றன. இந்த 4 வழக்குகளும் டிரம்பின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியலிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை.

அரசு ஆவணங்களை சொந்த எஸ்டேட்டுக்கு எடுத்துச் சென்றதாக புகார்

2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோற்ற பிறகு டிரம்ப் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறும் போது அரசு ஆவணங்களை புளோரிடாவில் உள்ள தனது எஸ்டேட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டார் என்ற குற்றச்சாட்டை அமெரிக்க நீதித்துறை உன்னிப்பாக கவனிக்கிறது.

அந்த ஆவணங்கள் எவ்வாறு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன? யார்யாரெல்லாம் அவற்றை அணுகினார்கள்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த எஸ்டேட்டில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள், சுமார் 11 ஆயிரம் ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

அவற்றில் 100 ஆவணங்கள் வகைப்படுத்தப்பட்டவை. சில மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அரசு ஆவணங்கள்.

அந்த ஆவணங்களில் என்ன இருந்தன என்பது இப்போதைய நிலையில் பொதுவெளியில் தெரியவராது. ஏனெனில், பொதுவெளியில் பகிரப்படுவது தேசப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என்று கருதப்படும் ஆவணங்கள்தான் வகைப்படுத்தப்பட்டவையாக பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்க வல்ல இந்த ஆவணங்களை எடுத்துச் சென்றதன் மூலம், உளவு பார்த்தல் சட்ட விதிகளை டிரம்ப் மீறிவிட்டதாக அமெரிக்க நீதித்துறை கருதுகிறது.

எப்.பி.ஐ. சோதனை செய்த ட்ரம்பின் எஸ்டேட்
அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை வழக்கில் டிரம்ப் மீது புகார்

அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிப்பதை நிறுத்தி வைக்கும் முயற்சியாக, 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதில் டிரம்பிற்கும் பங்கு இருக்கிறதா என்று அமெரிக்க பெடரல் புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன.

டிரம்பின் செயல்பாடுகள் குறித்த அமெரிக்க நாடாளுமன்ற கமிட்டி விசாரணை சுமார் 18 மாதங்கள் நீடித்தது கண்கூடு. தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக டிரம்ப் முன்வைத்த குற்றச்சாட்டுகளே நேரடியாக வன்முறைக்கு வித்திட்டன என்ற வகையில் அந்த வழக்கு இருந்ததை தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்ட அதன் விசாரணைகள் உணர்த்துகின்றன.

அந்த விசாரணைகளுக்குப் பிறகு, கிளர்ச்சி மற்றும் மற்ற குற்றச் செயல்களை டிரம்ப் தூண்டியதாக அந்த கமிட்டி குற்றம்சாட்டியது.

அமெரிக்க நீதித்துறையும் இதுதொடர்பாக தனியாக ரகசிய விசாரணை நடத்தி வருகிறது. அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகப்பெரிய போலீஸ் விசாரணை இதுவே. ஆனால், அதன் பிரதான இலக்கு டிரம்ப் தானா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

2021-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நுழைந்த போது எடுக்கப்பட்ட படம்

ஜார்ஜியா மாகாணத்தில் தேர்தல் முடிவை மாற்ற முயன்றதாக வழக்கு

2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற ஜார்ஜியா மாகாணத்தில் தேர்தல் முடிவை மாற்ற முயன்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி அந்த மாகாணத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியுடனான தனது ஒரு மணி நேர தொலைபேசி உரையாடலை பகிரங்கப்படுத்தியதற்காக அவர் மீது குற்ற விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளை சுமார் 8 மாதங்கள் விசாரித்த குழு அறிக்கையை சமர்ப்பித்த பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் கலைக்கப்பட்டுவிட்டது. அந்த அறிக்கை இன்னும் சீல் வைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.

2024 அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடுவதில் சிக்கல் எழுமா?

ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் வழக்கு மட்டுமின்றி, நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு, அரசு ஆவணங்களை எடுத்துச் சென்ற வழக்கு, தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டு என மொத்தம் 4 குற்ற வழக்குகள் டிரம்புக்கு எதிராக நிலுவையில் இருக்கின்றன.

அமெரிக்காவில் அதிபர் பதவியை வகித்தவர்களில் குற்ற வழக்கு விசாரணையை எதிர்கொண்ட முதல் நபர் என்ற அவப்பெயரையும் அவர் சம்பாதித்துள்ளார்.

ஆனாலும் கூட, 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதிற்கான டிரம்பின் முனைப்பு அப்படியே இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால், ஸ்டார்மி டேனியல்ஸ் வழக்கில் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராகச் செல்லும் போது கையில் விலங்கிட்டு காவல்துறை தன்னை அழைத்துச் செல்வதையே டிரம்ப் விரும்பினார் என்று அங்குள்ள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன் மூலம், அடுத்து வரும் அதிபர் தேர்தலில் மக்கள் ஆதரவை வெல்ல முடியும் என்று அவர் நினைத்தாகவும் கூறப்படுகிறது.

ஏனெனில், தற்போதைய குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல, தண்டனையே விதிக்கப்பட்டாலும் கூட, அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டிரம்ப் தொடர்வதைத் தடுக்க முடியாது.
ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகள் என்ன?

 

என்ன நடந்தாலும், தான் பின் வாங்கப்போவதில்ல என்பதற்கான சமிக்ஞைகளை டிரம்பே கொடுத்துள்ளார். எனவே, அவர் தொடர்ந்து பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வேட்பாளரை பிரசாரம் செய்வதில் இருந்தும், அதிபராகப் பணியாற்றுவதில் இருந்தும், ஏன் கைதாவதில் இருந்தும் கூட தடுக்க முடியாது.

1920இல் யூஜின் டெப்ஸ் என்பவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு 9 லட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தார். எனவே சிறை தண்டனை பெற்றாலும் அவர் போட்டியிட முடியும்.

எனினும், டிரம்ப் கைது செய்யப்பட்டால், அதிபர் தேர்தலுக்கான அவரது பிரசாரத்தில் அது சிக்கலை ஏற்படுத்தும். அமெரிக்க அரசியல் அமைப்பிற்குள் ஏற்கெனவே உள்ள அப்பட்டமான பிளவுகளை இது மேலும் ஆழமாக்கும்.

Share.
Leave A Reply