திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கணவாய்ப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் கோபி. திண்டுக்கல்லில் ஆட்டோ டிரைவராக இருந்தார்.
இவரின் மனைவி தமயந்தி (42). தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
கோபிக்கும், அதே பகுதியில் வசித்துவரும் அவரின் அண்ணன் ராஜாங்கத்துக்கும் இடையே 2 ஏக்கர் பூர்வீகச் சொத்தை பாகப் பிரிவினை செய்வது தொடர்பாக தகராறு இருந்துவந்திருக்கிறது.
இந்தச் சொத்துப் பிரச்னை தொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், இன்று மாலை 4 மணியளவில் வழக்கறிஞரைச் சந்திப்பதற்காக, தமயந்தி திண்டுக்கல்லுக்குத் தனியார் பேருந்தில் புறப்பட்டார்.
உலுப்பக்குடியிலிருந்து திண்டுக்கலை நோக்கிச் சென்ற பேருந்தில் தமயந்தி ஏறிய அதே பேருந்தில், ராஜாங்கம் அவரின் 14 வயது மகனுடன் ஏறினார்.
கொலையான பெண்
அந்தப் பேருந்து கோபால்பட்டியை அடுத்த வடுக்கப்பட்டி அருகே வந்தபோது, ராஜாங்கம் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து தமயந்தியின் கழுத்தில் வெட்டினார்.
இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டதால் உடனடியாக டிரைவர் பேருந்தை நிறுத்தினார். இதற்கிடையே ராஜாங்கம், மகனை விட்டுவிட்டு, பேருந்திலிருந்து இறங்கி தப்பி ஓடினார்.
பலத்த காயமடைந்த தமயந்தி பேருந்து சீட்டில் உட்கார்ந்திருந்த நிலையிலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சாணார்பட்டி போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று தமயந்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
பேருந்தில் பயணித்தவர்கள்
நிகழ்விடத்துக்கு வந்த திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தனிப்படை அமைத்து தப்பியோடிய ராஜாங்கத்தைத் தேடிப் பிடிக்க உத்தரவிட்டிருக்கிறார்.
மாலை நேரத்தில் பேருந்துக்குள் வைத்து நடந்த கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.