தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட சொத்துகளை ஏலம் விடுவது தொடர்பான வழக்கில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்(சிபிஐ) ஆஜராக சிறப்பு அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமித்துள்ளது.

இதுதொடர்பாக நகர வழக்கறிஞர் டி.நரசிம்ம மூர்த்தி தாக்கல் செய்த மனுவை ஏப்ரல் 11ஆம் தேதியன்று விசாரிக்க உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 27ஆம் தேதி வழக்குரைஞரை நியமித்து உத்தரவிட்டுள்ளது கர்நாடக அரசு.

“208/2004 எண்ணிட்ட இந்த வழக்கில், சொத்துகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது,” என்று நரசிம்ம மூர்த்தி பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக கர்நாடக அரசு கிரண் எஸ்.ஜாவலியை நியமித்துள்ளது.

131 சூட்கேஸ்கள், 750 செருப்புகள், தங்கம், வைரம்…

11,344 புடவைகள், 44 ஏசி, 33 தொலைபேசிகள்/இன்டர்காம்கள், 131 சூட்கேஸ்கள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர்க் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள், 34 டீபாய்கள், 31 மேசைகள், 24 கட்டில்கள், 9 டிரெஸ்ஸிங் டேபிள்கள், 81 தொங்கு விளக்குகள், 20 சோஃபா செட்டுகள், 750 செருப்புகள், 31 டேபிள் கண்ணாடிகள், 215 கிரிஸ்டல் கட் கண்ணாடிகள், 3 இரும்பு லாக்கர்கள், 250 ஆடியோ டெக், 250 சால்வைகள், 10 தொலைக்காட்சிப் பெட்டிகள், 8 விசிஆர்கள், ஒரு வீடியோ கேமரா, நான்கு சிடி பிளேயர்கள், ரொக்கமாக 1.34 லட்சம் ரூபாய் மற்றும் 32,688 ரூபாய்.

இவைபோக, தங்கம், வைரம், மாணிக்கம், மரகதம், முத்து, நீலப்பச்சை நிறத்திலான ரத்தினக் கல் (turquoise), பலவண்ண கற்கள், வளையல்கள், காப்புகள், காதணிகள், நெக்லஸ், மூக்குத்தி, வாள், மயில், தங்கத்திலான மனித சிற்பம், தங்கத் தாள், தங்கத் தட்டு, தங்கக் காசுமாலை, ஒட்டியாணம், தங்கத்தில் ஆன கடவுள் சிலைகள், தங்க மாம்பழம், தங்க கைக்கடிகாரங்கள், தங்கச் சங்கிலி, 700 கிலோ வெள்ளி என்று 468 மதிப்புவாய்ந்த பொருட்களும் அந்தப் பட்டியலில் உள்ளன.

1996ஆம் ஆண்டு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் புகாருக்குப் பிறகு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு ஜெயலலிதா மீது பதிவு செய்யப்பட்டது.

2014ஆம் ஆண்டு ஆறாவது முறையாக அவர் தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன் பிறகு, அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றம் அந்த வழக்கில் அவரை தண்டனையில் இருந்து விடுவித்ததை அடுத்து 2016ல் அவர் மீண்டும் முதல்வரானார்.

டிசம்பர் 5, 2016 அன்று அவர் உயிரிழந்தார். அவரது மரணத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் மீண்டும் அந்த வழக்கில் குற்றத்தை உறுதி செய்து சசிகலா உள்ளிட்டோரை சிறையில் அடைத்தது. ஆனால், ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை

Share.
Leave A Reply