திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இதுவரை 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அப்பகுதியில் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட கைகலப்பு இனங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தியிருப்பதாக தெரியவருகின்றது.

இதனால் அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

வியாழக்கிழமை (06) திருக்கடலூர் கடற்கரையில் அதிகமான சூடை மீன் ஒதுங்கியுள்ளது. இந்த மீனை பிடிப்பதில் ஏற்பட்ட தகறாரின் காரணமாக இரு இனங்களுக்கிடையே வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனை கட்டுப்படுத்துவதற்காக ஆரம்பத்தில் பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

பின்னர் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு மேலதிக பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதன்போது வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை குறித்த கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டு வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் வன்முறைச் சம்பவத்துடன் தொடர்பானவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் மேலும் 6பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவரை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.

குறித்த வன்முறைச் சம்பவத்தின் காரணமாக திருகோணமலை வைத்தியசாலையில் ஒரு பெண் உட்பட 7 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பலர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடமளிக்கப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

Share.
Leave A Reply