“அமெரிக்காவின் Interesting Engineering ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நீர்மூழ்கி வடிவமைப்புக்கு இலங்கையில் இருந்து ஆட்கள் திரட்டப்படுகின்றனர் என்றால், அவர்கள் யார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது”

அண்மைய அறிவியல் முன்னேற்றங்கள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், பொறியியல் சாதனைகள் போன்றவற்றை உள்ளடக்கி, Interesting Engineering (சுவாரஸ்யமான பொறியியல்) என்ற ஊடகம் வெளியாகிறது.

இதன் முகநூலை சுமார் 14.3 மில்லியன் பயனர்கள் பின்தொடர்கிறார்கள் என்றால், அது எந்தளவுக்குப் பிரபலமானது என்பதை ஊகித்துக் கொள்ள முடியும்.

அமெரிக்காவின் சான் பிராச்சிஸ்கோவில் இருந்து வெளியாகும், இந்த ஊடகத்தில் மார்ச் 26ஆம் திகதி ஒரு கட்டுரையும், அதன் காணொளி வடிவமும் வெளியாகியிருக்கிறது.

கொலம்பியாவின், போதைப்பொருள் கடத்தல்காரர்களால், பயன்படுத்தப்படுகின்ற, நீர்மூழ்கி வாகனங்கள் தொடர்பான ஒரு பதிவே அது. தென்அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும், கொகைன் போதைப்பொருளை, ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளுக்குக் கொண்டு சென்று சேர்ப்பதற்குத் தான், நீர்மூழ்கி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

1990களிலேயே கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல் காரர்கள், இவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இப்போது அது மோசமடைந்திருக்கிறது.

2019இல், அதிகாரிகளால் 23 நீர்மூழ்கி கப்பல்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.

2021இல், 31 நீர்மூழ்கி கப்பல்களை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதைக் கொண்டே, இவற்றின் பயன்பாடு – அதாவது இவற்றின் மூலமான போதைப்பொருள் கடத்தல் எந்தளவுக்கு அதிகரித்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இவற்றை உருவாக்க இரண்டு மில்லியன் டொலர்கள் வரை செலவாகும் என்று குறிப்பிட்டுள்ள Interesting Engineering, அவற்றில் சில ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடியவை என்றும் கூறுகிறது.

அவை, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பின்னர், கடலில் கைவிடப்படுகின்றன.  இரண்டு மில்லியன் டொலர் செலவிட்டு, கட்டுகின்ற ஒரு நீர்மூழ்கி கப்பலை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஒரு முறை அல்லது சில முறை பயன்படுத்தி விட்டு தூக்கியெறிந்து விட்டுப் போகிறார்கள் என்றால், அதிலிருந்து அவர்களுக்கு கொட்டுகின்ற இலாபம் எந்தளவு என்பதை கணக்கிடலாம்.

இவற்றில் கடத்தப்படும் போதைப்பொருளின் பெறுமதி 400 மில்லியன் டொலர் வரை இருக்கும் என்கிறது Interesting Engineering. முழுமையாக அல்லது அரைவாசி நீரில் மூழ்கிப் பயணம் செய்யக் கூடிய இந்தக் கப்பல்கள், அலைகளுக்கு அடியில் வெளியே தெரியாமல் பயணிக்க கூடியவை.

அவை ரேடர்களில் சிக்காது. பிற வழிகளில் அவற்றைக் கண்டறிவதும் கடினம்.

இந்தக் கப்பல்களை மிகவும் பயிற்சி பெற்றவர்கள் தான் இயக்குவார்கள். அதிநவீன வழிசெலுத்தல் அமைப்புகள் மற்றும் கண்டுபிடிக்க முடியாத தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களினால் பயன்படுத்தப்படும் இந்த முழு அல்லது அரை நீர்மூழ்கி கப்பல்களின் வடிமைப்பு குறித்து Interesting Engineering வெளியிட்டுள்ள தகவல்கள் தான் இப்போது முக்கியமானவை.

“இந்த நீர்மூழ்கி கப்பல்கள் படகு பொறியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்படுகின்றன.

அவர்கள் பெரும்பாலும் ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர்.

அவர்கள் கொலம்பியாவில் உள்ள தொலைதூர காடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் இவற்றின் உற்பத்தியை மேற்பார்வையிடுகின்றனர்.” என்று அதில் கூறப்பட்டிருக்கிறது.

ரஷ்யா நீர்மூழ்கி கப்பல்களை உற்பத்தி செய்கின்ற ஒரு நாடு. அந்த நாட்டில், திறமைக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்பது நீண்டகாலமாக இருந்து வருகின்ற ஒரு குறைபாடும் கூட.

எனவே, நீர்மூழ்கி உற்பத்திகளுடன் தொடர்புடைய நிபுணர்கள், அதிக வருமானம் கிடைக்கும் என்பதால், கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல்கார்ர்களுக்கு உதவ முன்வந்திருக்கலாம்.

அடுத்து, பாகிஸ்தான், சொந்தமாக நீர்மூழ்கிகளை தயாரிக்கின்ற நாடு அல்ல. அதன் பயன்பாட்டில் உள்ள, 8 நீர்மூழ்கிகளில், கொஸ்மோஸ் வகையை சேர்ந்த மினி நீர்மூழ்கிகள் 3 தான் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை. அவை கூட, இத்தாலிய நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு, கராச்சியில் கட்டப்பட்டவை.

அதேவேளை, பாகிஸ்தான் தொழில்நுட்பத் திருட்டுகள், விற்பனைக்கு பெயர்போன நாடு. அந்த நாட்டின் பொறியியலாளர்கள், நீர்மூழ்கி தொழில்நுட்பத்தை கொலம்பிய போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது அவற்றின் உற்பத்தியை மேற்பார்வையிடலாம்.

கொலம்பியா போதைப்பொருள் கடத்தல்காரர்களால், நீர்மூழ்கிகளை வடிவமைப்பதற்காக ஆட்சேர்ப்புச் செய்யப்படும் மூன்றாவது நாடாக, அமெரிக்க ஊடகத்தினால் குறிப்பிடப்பட்டிருப்பது இலங்கை.

இதுதான் ஆச்சரியமான விடயம். ஏனென்றால் இலங்கையில் கடற்படையிடம் நீர்மூழ்கி கப்பல்கள் பயன்பாட்டில் இல்லை. அவற்றை பயன்படுத்தக் கூடிய அல்லது உருவாக்குகின்ற பொறியியல் தொழில்நுட்பங்களும் கடற்படையிடம் கிடையாது.

அப்படியிருக்க, கொலம்பியா காடுகளில் வடிவமைக்கப்படும் நீர்மூழ்கிகளை மேற்பார்வையிடுவதற்கு இலங்கையில் இருந்து யார் ஆட்சேர்ப்புச் செய்யப்படுகின்றனர்? என்ற கேள்வி எழுகிறது.

இறுதிக்கட்டப் போரின் போது, விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் வடிவமைக்கப்பட்ட பல நீர்மூழ்கி மற்றும் அரை நீர்மூழ்கி வாகனங்கள், அரச படையினரால் கைப்பற்றப்பட்டன.

உடையார்கட்டுப் பகுதியில் இருந்த படகு கட்டுமான தளத்தில் இருந்து பல்வேறு வடிவமைப்புகளில் உருவாக்கப்பட்ட, நீர்மூழ்கிகளை இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர்.

எனினும், அவை இயங்கு நிலையில் இருந்ததாக அறிவிக்கப்படவில்லை. அவற்றில் பல வடிவமைப்பு பணிகள் முழுமை பெறாதவையாக இருந்தன.

 

  • புலிகளால் இது வரைக்கும் முழுமையாக் கட்டப்பட்ட ஒரே ஒரு நீர்மூழ்கி:

புலிகளால் கட்டப்பட்ட முதல் செயல்படும் மெய்யான நீரில் மூழ்கக்கூடியவற்றில் ஒன்று . இது ஓராள் செலவாகக் கூடிய நீர்மூழ்கியாகும். புறம்போக்கி குழாயின் அளவு மற்றும் பற்றாக்குறை இது மின்கலம் மூலம் இயக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.

(இதைத் தவிர வேறு ஏதேனும் முற்றாக கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் நீர்மூழ்கிகள் இருந்தனவா என்பது தெரியவில்லை)

அந்த நீர்மூழ்கி வாகனங்கள், ஒரே வகையானதாக இருக்கவில்லை. பல்வேறு வடிவங்களைக் கொண்டதாக காணப்பட்டன.

சாலைக் கடற்பகுதியில் அரை நீர்மூழ்கி கப்பல் ஒன்றை மூழ்கடித்ததாக கடற்படை 2009 ஏப்ரலில் உரிமை கோரியிருந்தது.

கடற்புலிகள், அரை நீர்மூழ்கி அல்லது முழு நீர்மூழ்கிகளை பயன்படுத்தியிருந்தனர். எனினும், அவற்றை அவர்கள் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தியதாக தகவல் இல்லை.

அதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர்கள், தப்பிச் செல்வதற்கும் அவற்றைப் பயன்படுத்தியிருக்கவில்லை.

14 ஆண்டுகளுக்கு முன்னரே, விடுதலைப் புலிகள் நீர்மூழ்கிகளை பயன்படுத்த ஆரம்பித்திருந்தனர் அல்லது அதற்கான கட்டுமானங்களின் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தனர்.

அவர்கள் அதனை உள்ளூர் வளங்களைக் கொண்டே உருவாக்கியிருந்தனர். படகு வடிவமைப்பாளர்கள், பொறியியலாளர்களும், அவர்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.

போரின் முடிவில், கடற்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நீர்மூழ்கிகள் மற்றும் தாக்குதல் படகுகளை பார்த்து அரச படையினர் அதிர்ச்சியடைந்திருந்தனர்.

ஏனென்றால் அந்தளவுக்கு விடுதலைப் புலிகளின் படகு கட்டுமானம் தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி பெற்றிருந்தது.

கடற்படையினர், வெறும் 50 கலிபர் துப்பாக்கியைப் பொருத்திச் சண்டையிட்ட, நீரூந்து விசை ரோந்துப் படகுகளை, ஆழ்கடல் சண்டைகளுக்குப் பயன்படுத்தியவர்கள் அவர்கள். அவற்றில், 14.5 மில்லி மீற்றர் மற்றும் 25 மில்லி மீற்றர் பீரங்கிகள், மற்றும் வேறு பல ஆயுதங்களைப் பொருத்தி கடற்படையை மிரட்டியவர்கள் புலிகள்.

ஒரு படகை அல்லது ஆயுதத்தை அதன் வரையறுக்கப்பட்ட திறனுக்கு அப்பால் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம், மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதை அரச படையினருக்கு கற்றுக் கொடுத்தவர்கள் புலிகள்.

புலிகளிடம் இருந்து கைப்பற்றிய படகுகள், நீர்மூழ்கிகள் இன்னமும் கடற்படை அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முக்கிய கடற்படை அதிகாரிகள் இலங்கை வரும் போது அவற்றைப் பார்வையிடுவதற்கும் தவறுவதில்லை.

புலிகளின் படகு கட்டுமானத் தொழில்நுட்பங்களை பின்னர் கற்றுக்கொண்ட கடற்படையினர், இப்போது அவற்றைப் பயன்படுத்தி உற்பத்திகளை மேற்கொள்கின்றனர். சிலவற்றை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

இவ்வாறான நிலையில், அமெரிக்காவின் Interesting Engineering ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நீர்மூழ்கி வடிவமைப்புக்கு இலங்கையில் இருந்து ஆட்கள் திரட்டப்படுகின்றனர் என்றால், அவர்கள் யார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அதுபற்றி அந்த ஊடகம் விலாவாரியான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.

ஆனால், இலங்கையில் நீர்மூழ்கித் தொழில்நுட்பங்களை அறிந்திருந்தவர்கள் விடுதலைப் புலிகளும், அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட கடற்படையினரும் தானே?

-சுபத்திரா-

தொடர்புடைய செய்தியை பார்வையிட  இங்கே அழுத்தவும்: கடற்புலிகளின்-நீர்மூழ்கிகள்-மற்றும்-தாழ்-தோற்றுருவ-கடற்கலன்கள்-ஆவணம்/

 

Share.
Leave A Reply