தென் கிழக்கு வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, புயலாக மாறி இருந்தது. இந்த புயல் ஒடிஸா – மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆந்திர கடற்கரை அருகே மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக, ஆந்திராவின் கடற்கரை பகுதிகளில், காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது. அதே போல, அதிக கடல் கொந்தளிப்பும், கடல் சீற்றமும் காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது.

கடல் நீரில் மிதந்த தேர்..

இந்நிலையில் தான், ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் அருகே உள்ள சுன்னப்பள்ளி கடற்கரை பகுதியில், தங்க நிறத்திலான தேர் ஒன்று, கடலில் மிதந்த வண்ணம் இருந்துள்ளது.

இதனை கரையில் இருந்து கண்ட மீனவர்கள், ஏதோ பெரிய பொருள் ஒன்று வருவதைக் கண்டு, வியப்பில் ஆழ்ந்தனர். இதன் காரணமாக, ஏராளமான மக்களும் அப்பகுதியில் திரண்டு வேடிக்கை பார்த்தபடி நின்றனர்.

வியப்பில் பார்த்த மக்கள்

இந்த தேர் கரையை ஒட்டி வந்த பிறகு, அதனை கரைக்கு இழுத்து வந்துள்ளனர் மீனவர்கள். ஆனால், இது எங்கிருந்து என்பது பற்றி விவரங்கள் தெரியவில்லை.

அசானி புயல் காரணமாக, எங்கிருந்தோ அடித்துக் கொண்டு வரப்பட்டது என்பதை மீனவர்கள் அறிந்து கொண்டனர்.

கடலில் மிதந்து வந்த தேர் பற்றி, கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட, சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், தேரினை ஆய்வு செய்தனர்.

தேரில் இருந்த வெளிநாட்டு மொழிகள்

அப்போது, இந்த தேரின் மீது வெளிநாட்டு மொழியில் எழுதப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இந்த எழுத்துக்கள் தாய்லாந்து, ஜப்பான் அல்லது மலேசிய நாட்டு எழுத்துக்களாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் கணித்து வருகின்றனர். இதே போல, அந்த தேரில் 16.1.22 எனவும் எழுதப்பட்டு இருந்தது.

எந்த நாட்டில் இருந்து இந்த தேர் வந்தது, எழுத்துக்கள் எதனை குறிக்கின்றது என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னொரு பக்கம், இந்திய கடற்கரை ஓரம், ஏதாவது சினிமா படப்பிடிப்பின் போது பயன்படுத்தப்பட்ட தேர், அங்கிருந்து அதிக அலை காரணமாக, ஸ்ரீகாகுளம் கடற்கரை அருகே ஒதுங்கி இருக்கலாம் எனவும் சில அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

 

இன்னொரு பக்கம், தங்கத்தாலான தேர் என தகவல் பரவி வந்த நிலையில், அது வெறும் வதந்தி தான் என்பது உறுதியாகி உள்ளது.

இது தொடர்பான பதிவுகள் மற்றும் வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. கடலில் தேர் மிதந்து வந்த சம்பவம், பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Share.
Leave A Reply