இரானில் பெண்கள் ‘ஹிஜாப்’ அணிகிறார்களா இல்லையா என்பதை கண்காணிக்க பொது இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.
பொது இடங்களில் ‘ஹிஜாப்’ அணியாமல் வலம் பெண்களுக்கு முதலில் எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்பப்படும் என்று இரான் காவல்துறை கூறுகிறது.
பெண்கள் ஹிஜாப் அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டத்திற்கான எதிர்ப்பைத் தடுக்க இது உதவும் என்று காவல்துறை நம்புகிறது.
‘ஹிஜாப்’ அணியாமல் இருந்தமைக்காக கைது செய்யப்பட்ட மாசா அமினி என்ற குர்திஷ் இளம்பெண் காவல்துறையில் கஸ்டடியில் உயிரிழந்ததன் எதிரொலியாக, இரான் முழுவதும் கடந்த ஆண்டு பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன.
அதற்குப் பிறகு இரானில் ‘ஹிஜாப்’ விதிகளை பெண்கள் மீறும் போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காவல்துறையால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தையும் மீறி பெரு நகரங்களில் பெண்கள் பொது இடங்களில் ‘ஹிஜாப்’ அணியாமல் வலம் வருகிறார்கள்.
இரான் அரசு நடத்தும் இஸ்லாமிக் ரிபப்ளிக் நியூஸ் ஏஜென்சி மூலமாக காவல்துறை இதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
ஸ்மார்ட் கேமராக்கள் மற்றும் பிற தொழில்நுட்ப சாதனங்கள் உதவியுடன் ஹிஜாப் அணியாத பெண்கள் அடையாளம் காணப்பட்டு எச்சரிக்கை குறுந்தகவல்களும் உரிய ஆவணங்களும் அனுப்பப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
1979-ம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு இரானில் பெண்கள் ‘ஹிஜாப்’ அணிவது சட்ட ரீதியாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது கைதும் செய்யப்படலாம்.
இரான் பண்பாட்டின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று ‘ஹிஜாப்’ என்று காவல்துறை கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள் அனைவரும் தங்களிடம் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் ‘ஹிஜாப்’ அணிகிறார்களா என்று அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘ஹிஜாப்’ அணியாத பெண்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தும் நிகழ்வு ஒன்றும் அங்கே புதிதல்ல.
ஈரானில் ஹிஜாப் அணியாமல் கடைக்கு வந்த தாய், மகள் மீது தயிரை ஊற்றிய நபர் – பரபரப்பு வீடியோ
‘ஹிஜாப்’ அணியாத 2 பெண்கள் மீது ஒருவர் யோகர்ட்டை வீசும் வீடியோ கடந்த வாரம் இணையத்தில் வைரலானது. அந்த நபர் கைது செய்யப்பட்டதுடன், ஹிஜாப் அணியாமல் விதிகளை மீறிவிட்டதாகக் கூறி அந்த பெண்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இரானில் கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேருக்கு மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
ஆனாலும், மத அடிப்படைவாதிகள் இது போதாது, ‘ஹிஜாப்’ சட்டத்தை இன்னும் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
‘மத ரீதியிலான தேவை’ கருதி இரானிய பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் எப்ராஹிம் ரெய்சி கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார்.
பெண்கள் ஹிஜாப் அணியச் செய்வதற்காக, அதற்கு எதிரான போராட்டக்காரர்களை ஒடுக்கும் அரசின் வழிமுறை சரியானது அல்ல என்று ஈரான் நீதித்துறை தலைவர் கோலாமோசெய்ன் மெசெனி-ஈஜெய் எச்சரித்துள்ளார்.
“கலாசார பிரச்னைகளுக்கு கலாசார ரீதியிலேயே தீர்வு காணப்பட வேண்டும். கைது செய்து சிறையில் அடைப்பதன் வாயிலாக அதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க விரும்பினால் நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அது எதிர்பார்த்த விளைவுகளைத் தராது.” என்பது அவரது எச்சரிக்கை.