ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்காக, நாட்டு மக்களைத் தயார்ப்படுத்தும் வேலைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருகின்றார்.

ஏற்கெனவே நடந்து முடிந்திருக்க வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, திட்டமிட்ட ரீதியில் ஒத்திப்போட வைத்து, போக்குக் காட்டிவரும் ரணில், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், ஜனாதிபதி தேர்தலை நடத்தி, அதில் வெற்றிபெற நினைக்கிறார்.

அதற்காக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து, பிரபலமான முகங்களை எல்லாம் கழட்டி எடுக்கும் வேலைகளில் கவனமாக இருக்கிறார்.

அதன் ஒருகட்டமாக, ஹர்ச டி சில்வா, எரான் விக்கிரமரட்ன, கபீர் ஹாசிம் உள்ளிட்டவர்கள், ரணிலோடு இணைந்து, முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பார்கள் என்று புனைவுச் செய்திகள் பரப்பப்படுகின்றன.

ஹர்சவும் எரானும்

பாராளுமன்றத்தில் இருக்கும் பொருளாதார நிபுணர்களாக கருதப்படுபவர்களில், ஹர்சவும் எரானும் முக்கியமானவர்கள். அவர்களைத் தேர்தல் அரசியலுக்கு அழைத்து வந்தவர் ரணில்தான்.

கடந்த பொதுத் தேர்தலில், ரணிலோடு முரண்பட்டுக் கொண்டு சஜித் அமைத்த ஐக்கிய மக்கள் சக்தியில் அவர்கள் இருவரும் இணைந்தாலும், ரணில் மீது ‘அரசியல் குரு’ என்ற ரீதியில் மரியாதை வைத்திருப்பவர்கள்.

ராஜபக்‌ஷர்களை விரட்டும் போராட்டத்தை அடுத்து, மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகினார்; அப்போது, ரணில் பிரதமரானார்.

அந்தத் தருணத்தில், புதிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டிருந்தால், அதாவது ரணில் தலைமையிலான அரசாங்கம், குறிப்பாக ராஜபக்‌ஷ ஆதரவு இல்லாமல் அமைக்கப்பட்டிருந்தால், அதில் ஐக்கிய மக்கள் சக்தியில் பெருமளவான உறுப்பினர்கள் இணைந்து கொண்டிருப்பார்கள். ஆனால், அது சாத்தியமாகவில்லை.

கோட்டபாய ராஜபக்‌ஷவை

ரணில் பிரதமராகி, தன்னை ஜனாதிபதி பதவிக்காக தயார்படுத்திக் கொண்டிருந்த காலப்பகுதியில், கோட்டபாய ராஜபக்‌ஷவை துரத்தியடிக்கும் போராட்டத்தை ஊக்குவிக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அவர் மஹிந்தவோடு மிக இரகசியமான, திட்டங்கள் வகுத்து இணைந்து இயங்கினார். அதனால்தான், ஜனாதிபதி பதவியில் இருந்து, கோட்டா தப்பியோடும் நிலை ஏற்பட்டது.

மஹிந்தவுக்கும் ரணிலுக்கும் இடையிலான இணக்கப்பாடு என்பது, நாமல் ராஜபக்‌ஷவின் அரசியல் எதிர்காலத்தை பாதுகாப்பது என்ற ஒன்று மட்டுமே ஆகும்.

அதற்காக, ரணில் இழுக்கும் எந்தத் திசைக்கும் நகர்வதற்கு மஹிந்த தயாராக இருந்தார். அதனால்தான், பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்வில், பொதுஜன பெரமுனவின் ராஜபக்‌ஷ கட்டுப்பாட்டில் இருந்த உறுப்பினர்கள் ரணிலை ஆதரித்தார்கள்.

ரணில் வென்றதும், மஹிந்தவின் இல்லம் தேடிச் சென்று, சில மணிநேரம் பேசிவிட்டும் சென்றார்.

ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் இடையிலான இந்த இணக்கப்பாடு, பொது வெளியில் அப்பட்டமாக வெளிப்பட்டதால் மட்டுமே, ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு செல்வதற்கு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தயங்கினார்கள்.

ஏனெனில், பொதுத் தேர்தல் ஒன்று வரும் போது, ராஜபக்‌ஷர்களோடு இணக்கத்தோடு இருக்கும் ரணில் அரசாங்கத்தில் இணைந்து கொண்டவர்களை, மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயங்குவார்கள்.

அதனால், தோல்வியடைய வேண்டி வரலாம் என்று எண்ணினார்கள். அதனால், பொதுத் தேர்தல் வரும் வரையில், எதிரணியில் இருப்பதுதான் தேர்தல் வெற்றியை இலகுவாக்கும்.

இந்த ஒற்றைக் காரணத்தைத் தவிர, சஜித் தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதோ, ராஜபக்‌ஷர்கள் கூட்டை நிராகரிக்க வேண்டும் என்பதோ, ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் பெரும்பாலான உறுப்பினர்களின் எண்ணம் அல்ல.

பதவியைத் தக்க வைப்பது என்பது மட்டுமே ஒற்றைக் குறிக்கோள். அதனால்தான், ரணிலால் ஹரீன் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார தவிர வேறு யாரையும் சஜித்திடம் இருந்து அப்போது பிரிக்க முடியவில்லை.

ஆனால், தற்போது நிலைமை வேறு! அண்மித்த நாள்களில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த ரணில் அனுமதிக்கப் போவதில்லை. அதுபோல, பொதுத் தேர்தலும் இப்போதைக்கு இல்லை. எப்படியும் ஜனாதிபதி தேர்தலை நடத்தி, அதில் வெற்றிபெற்றுவிட்டுத்தான், ஏனைய தேர்தல்கள் குறித்து அவர் சிந்திப்பார்.

அதனால், பொதுத் தேர்தல் ஒன்றை நோக்கி நகர்வதற்கு குறைந்தது ஒன்றரை ஆண்டுகளாவது ஆகும்.

அதுவரை எதுவுமே செய்யாத எதிர்க்கட்சியில் இருப்பதால் பலனில்லை. அதனால் ரணில் அழைப்பை ஏற்று, அமைச்சுப் பதவிகளை ஏற்பதுதான் இப்போது இருக்கும் வழியென்று எதிரணி உறுப்பினர்கள் கருதலாம்.

அதனை, உத்தியாக்கி ஷர்ச, எரான் போன்றவர்களை இழுத்தெடுக்கலாம் என்று காய்களை நகர்த்துகிறார் ரணில். அதில் அவருக்கு பெரும் இலாபமே இருக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் உதவியை ரணில் பெற்றுவந்து இருக்கிறார் என்பதை, பெரிய வெற்றியாக வெடி கொளுத்தி, தென் இலங்கையில் சில பகுதிகளில் கொண்டாடினார்கள்.

ஓர் ஆட்சியாளர் கடன் பெறுவதை, அதுவும் மக்கள் மீது மீள முடியாத வரிகளை விதிக்கும் கண்டிப்பான வரையறைகளுடனான கடனைப் பெறுவதை, வெடி கொளுத்தி கொண்டாடும் நிலைமைதான் நாட்டில் இருக்கிறது என்றால், அதன் யதார்த்தம் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

அப்படிப்பட்ட அரசியலைத்தான் தென் இலங்கை இவ்வளவு காலமும் புகட்டி வந்திருக்கிறது. ராஜபக்‌ஷர்கள் சீனாவிடமும் ஏனைய நாடுகளிடமும் பில்லியன்களில் கடன்களை வாங்கி, தங்களின் தேர்தல் வெற்றிகளை இலக்காக்கி நாட்டை சீரழித்தார்கள்.

அந்தச் சீரழிவின் கொடுங்கரங்களில் இருந்து நாட்டு மக்களால் இன்னும் மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு மீளவே முடியாது.

அந்த உண்மையை சின்னதாக உணர்ந்து கொண்ட தருணத்தில், ராஜபக்‌ஷர்களை விரட்டுவதற்காக வீதிக்கு இறங்கினார்கள். அந்த மக்களில் ஒரு பகுதியினர் இன்றைக்கு, ரணில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கி வந்துவிட்டார் என்பதற்காக அவரை சாதனையாளராக நோக்குகிறார்கள்.

பல நேரங்களில் தென் இலங்கை சக்திகள், நோய்க்கான உண்மையான சிகிச்சைக்குப் பதில், வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதை விரும்புகிறார்கள். அந்த மனநிலையைத்தான், முதலாக வைத்து ரணில், ஜனாதிபதி தேர்தல் கணக்கைப் போடுகிறார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு முதல் தொகுதி கடனை வழங்கியதும், இலங்கை ரூபாயின் பெறுமதி ஒரே நாளில் திடீரென அதிகரித்துக் காட்டப்பட்டது.

ஒரு டொலருக்கு எதிராக 360 ரூபாயாக காணப்பட்ட இலங்கை ரூபாயின் பெறுமதி, 306 ரூபாயாக குறைந்தது. இந்தப் பெறுமதி அதிகரிப்பு என்பது திட்டமிட்ட ரீதியில் போலியாக உருவாக்கப்பட்டது.

இன்றைக்கு 317 ரூபாய் என்கிற அளவில் பேணப்படுகின்றது. மறுபுறம், அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. சமையல் எரிவாயு, எரிபொருட்களின் விலையும் குறைக்கப்பட்டிருக்கின்றன.

இவையெல்லாம், நாட்டின் எதிர்கால பொருளாதார நலன்கள் குறித்து சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல. மாறாக, தேர்தல்களை இலக்கு வைத்து எடுக்கப்பட்ட முடிவுகள். இப்போதும் அந்த உத்தியை ரணில் கையிலெடுத்து இருக்கிறார்.

ஏற்கெனவே, கடன் வாங்கி வந்ததற்கே வெடிகொளுத்தி ஆரவாரம் காட்டிய மனநிலையுடைய மக்களை, விலை குறைப்பு நாடகம் இன்னும் இளக வைக்கும். தனக்கான வாக்காக மாறும் என்பது ரணிலுக்கு தெரியும். அவர், இப்போது அந்த அறுவடைக்காகத்தான் தயாராகி வருகிறார்.

அதனால்தான், எதிர்க்கட்சியில் இருக்கும் பொருளாதாரம் அறிந்தவர்கள் எல்லாம் தன்னோடு இணைந்திருக்கிறார்கள் என்ற விம்பத்தையும் அவர் காட்ட நினைக்கிறார்.

அதற்கு, எப்படியாவது ஹர்ச, ஏரான் உள்ளிட்டவர்களின் வருகையை அவர் அதிகமாக நம்புகிறார். இதன்மூலம், தன்னுடைய பொருளாதார திட்டங்கள் நாட்டை மீட்டெடுக்கும் என்று நம்பியதால்தான் அவர்கள், தன்னோடு இணைந்திருக்கிறார்கள் என்பதை மக்களிடம் பெரிய பிரசார உத்தியாக முன்வைக்க முடியும்.

மறுபுறம், ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கு இடையில் மிகப்பெரிய இழுபறி நீடிக்கிறது. உடலளவில் தளர்ந்துவிட்ட மஹிந்த, நாமல் ராஜபக்‌ஷவிடம் கட்சியை சேர்ப்பித்துவிட நினைக்கிறார்.

அதற்கு தடையாக இருக்கும் பசில் ராஜபக்‌ஷவை அரசியலில் செல்லாக்காசாக்குவதற்கு, ரணில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெல்வது மட்டுமே வழியாக இருக்கும்.

ரணில் வெற்றிபெற்றுவிட்டால், அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அவரது பதவிக்காலத்தில் பசிலால் எதுவும் செய்ய முடியாது போகும்.

அதனால், பொதுஜன பெரமுன முழுவதுமாக நாமலின் கைகளுக்குள் வந்துவிடும். அதனால், அடுத்த ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல்களில் ரணிலுக்கு ஒத்துழைப்பதுதான் அரசியல் ராஜதந்திரம். அதன் மூலம், நாமலுக்கான வழியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

ஏனெனில், ரணிலுக்குப் பின்னால் ஐக்கிய தேசிய கட்சி பெரிய அளவில் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பில்லை. அதற்கு சஜித் குறுக்கே நிற்பார்.

அதுபோக, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வென்று பதவியேற்றாலும், அதன் பின்னர், ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிட வாய்ப்பில்லை.

உடலளவில் அவரும் தளர்ந்துவிடுவார். அதனால், சஜித் எதிர் நாமல் எனும் அரசியல் சூழல் உருவாகும். அந்தப் போட்டியில் ராஜபக்‌ஷர்கள் அடையாளத்தோடு நாமல் வெல்வது இலகுவானது என்பது மஹிந்தவின் நினைப்பு.

அதற்காக, ரணில் இப்போது எந்தப் பக்கம் இழுத்தாலும் அந்தப் பக்கத்துக்குச் செல்வதற்கு அவர் தயாராக இருக்கிறார்.

இப்படியான சூழலை பயன்படுத்திக் கொண்டு, தன்னுடைய வாழ்நாள் கனவான ஜனாதிபதி தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்பதை ரணில் நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறார். அதற்காக, அவர் மக்களின் ஜனநாயக உரிமை, எதிர்காலம் என்று எதனை வேண்டுமானாலும் பலிகொடுக்க தயாராக இருக்கிறார்.

ஒரு காலத்தில் தன்னை ஜனநாயக விரும்பியாக காட்டிய ரணில், இன்றைக்கு ஜனாதிபதி பதவிக்காக சர்வாதிகாரியாக மாறி ஆடிக்கொண்டிருக்கிறார்.

-புருஜோத்தமன் தங்கமயில்-

Share.
Leave A Reply