இலங்கையின் தேவேந்திரமுனை பகுதியை அண்மித்துள்ள வனப் பகுதியில் ரேடார் கட்டமைப்பு முகாமொன்றை சீனா அமைக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்தி, இந்தோ பசுபிக் வலயத்தின் பூகோள அரசியலில் மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது.

சீனாவின் உளவு கப்பல் என இந்தியாவினால் அடையாளப்படுத்தப்பட்ட யுவான் வேன் 5 கப்பல், தென்னிலங்கையின் சீன கட்டுப்பாட்டிலுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வருகைத் தந்தமை, அப்போது பேசுப் பொருளாக மாறியிருந்தது.

உத்தேச சீன ரேடார் முகாமின் ஊடாக, தென்னிந்தியா, இந்தியாவின் மூலோபாக சொத்துக்கள்,

இந்திய பெருங்கடலில் இந்திய கடற்படையின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும் என அறிக்கைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு மையங்களாக கருதப்படுகின்ற கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்களையும், அந்த மையங்களுக்கான எரிபொருள் விநியோகத்தையும் இந்த ரேடார் முகாமின் ஊடாக சீனாவிற்கு கண்காணிக்க முடியும் என இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இலங்கையில் ரேடார் கட்டமைப்பு முகாமொன்றை அமைப்பதற்கு சீனாவிற்கு தாம் அனுமதி வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்திய பெருங்கடல் முழுவதும் இந்தியாவின் மூலோபாய நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தில் சீனா, அறிவியல் அகாடெமியின் விண்வெளி தகவல்கள் ஆராய்ச்சியிலும் ஈடுபடக்கூடும் என அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளை நோக்கி பயணிக்கும் இந்திய கடற்படையின் படகுகளின் பயண நடவடிக்கைகளையும், இந்த ரேடார் கட்டமைப்பின் ஊடாக கண்காணிக்க முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பில் இந்திய பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது கவலையை தெரிவித்திருந்தது.

இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில், பிபிசி இலங்கை பாதுகாப்பு அமைச்சை தொடர்புக் கொண்டு வினவியது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் பொறுப்பு வெளிவிவகார அமைச்சுக்கு காணப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த விடயம் தொடர்பில் ஏப்ரல் மாதம் 11ம் தேதி விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரியை தொடர்பு கொள்ள முயற்சித்த சந்தர்ப்பத்தில், அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், சீனாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்படும் சந்தர்ப்பத்தில், சீனா தனது பெல்ட் அன்ட் ரோட் மூலோபாய திட்டத்தின் தெற்காசிய மையமாக குறித்த துறைமுகத்தை பயன்படுத்தும் என இந்தியா இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இறுதியில், குறித்த கடனை மீள செலுத்தும் இயலுமை இல்லாமையினால், 1.12 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருட குத்தகையின் கீழ் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சீனா தொடர்பில் இந்தியா வெளியிட்ட கவலையை பொருட்படுத்தாது, 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் மற்றும் போர் கப்பல் ஆகியவற்றுக்கு கொழும்பு துறைமுகத்திற்குள் வருகைத் தருவதற்கு இலங்கை அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்தனர்.

இதன்படி, சீனா ஜனாதிபதியின் தெற்காசிய சுற்றுப் பயணத்திற்கு ஒத்ததாக நீர்மூழ்கி கப்பலொன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்து 7 கிழமைகளுக்கு பின்னரே, சாங்செங்-2 நீர்மூழ்கி கப்பல் மற்றும் சாங் சிங் தாவோ போர் கப்பல் ஆகியன கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்தன.

குறிப்பாக சீன நீர்மூழ்கி கப்பலின் பயணம் தொடர்பில் இந்தியா கவலை வெளியிட்டதாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நீர்மூழ்கி கப்பல் மற்றும் ராணுவ கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் வருகைத் தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டமையினால், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தவணையாக நடத்திய ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை தழுவும் அளவிற்கு அது பாரிய காரணமாக அமைந்தது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சீனாவின் முதலீட்டு திட்டமான கொழும்பு துறைமுக நகர் திட்டம் தொடர்பிலும், இந்தியா அவ்வாறே தனது கவலையை வெளியிட்டது.

கொழும்பு துறைமுக நகர திட்டமானது, நிதி சலவை மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளுக்கான கேந்திர நிலையமாக எதிர்காலத்தில் மாறக்கூடும் என இந்திய ஊடக நிறுவனங்கள் அவ்வப்போது சுட்டிக்காட்டியிருந்தன.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதலாம் தேதி இந்திய பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விக்ரம் மிஸ்ரியின் தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட உள்ளக கூட்டத்தின் போதும், இந்த விடயம் தொடர்பில் மிக ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

3 தீவுகளில் சீன மின் திட்டங்களுக்கு இந்தியா எதிர்ப்பு

இலங்கையின் வடப் பகுதியிலுள்ள மூன்று தீவுகளில் மின்சக்தி திட்டங்களை ஸ்தாபிப்பதற்கு சீனாவினால் 2021ம் ஆண்டு யோசனையொன்று முன்வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணதை அண்மித்துள்ள நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகியவற்றில் மின்சக்தி கட்டமைப்புக்களை ஸ்தாபிப்பதற்கான திட்டத்தை 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் சீன நிறுவனமான சினோ சோ ஹைப்ரிட் டெக்னாலஜியிடம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த மூன்று தீவுகளும் யாழ்ப்பாணத்தை அண்மித்து அமைந்துள்ளன. இந்த திட்டம் தொடர்பிலும் இந்தியா இலங்கைக்கு தனது கவலையை வெளியிட்டது.

இந்த திட்டம் தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்த போதிலும், குறித்த திட்டத்தை நிறுத்தும் வகையில் இலங்கை அரசாங்கம் பின்னர் நடவடிக்கை எடுத்திருந்தது.

”மூன்றாவது தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினை” காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தேச மின்சக்தி திட்டம் கைவிடப்படும் சந்தர்ப்பத்திலேயே, மாலைத்தீவில் 12 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கத்துடன் நவம்பர் மாதம் 29ம் தேதி ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாக தூதரகம் அறிவித்துள்ளது.

யுவான் வேங் 5 சர்ச்சை

இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி, கடந்த ஆண்டு சீன கண்காணிப்பு கப்பலான யுவான் வேங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருகைத் தந்தமையை அடுத்து, சீனாவின் சந்தேகத்திற்கிடமான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியா இலங்கைக்கு தனது கவலையை வெளியிட்டது.

இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருகைத் தருவதற்கு இலங்கை அனுமதி வழங்கிய நிலையில், எரிபொருள் மற்றும் ஏனைய சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக குறித்த கப்பல் 6 நாட்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தது.

யுவான் வேங் 5 என்ற கப்பல் 2007ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதுடன், அந்த கப்பலானது சீன கொடியின் கீழ் பயணிக்கும் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி கப்பலாகும்.

யுவான் வேங் தரத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்றாவது தலைமுறை கப்பலாக இந்த யுவான் வேங் 5 விளங்குகின்றது. யுவான் வேங் சீனாவின் ஜியாங்னான் கப்பல் கட்டுமான தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட கப்பலாகும்.

2000ம் ஆண்டு காலத்தின் முற்பகுதியில் சீனா சர்வதேச விண்வெளி நிலையத்தின் உறுப்பு நாடாக இணைவதற்கு ஆர்வம் காட்டிய போதிலும், அதன் கோரிக்கைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிராகரிக்கப்பட்டன.

இவ்வாறான பின்னணியில், சீனாவின் விண்வெளி ஆய்வு திட்டங்களுக்கு யுவான் வேங் 5 கப்பல் மிக முக்கியமானது.

சீனாவின் ராணுவ மேம்படுத்தல்களுக்காக, யுவான் வேங் கப்பல் மக்கள் விடுதலை ராணுவத்தின் மூலோபாய படையால் இயக்கப்படுகின்றது என பென்டகனினால் 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவான் வேங் 5 கப்பலானது, விண்வெளி ஆய்வு மற்றும் ஆராய்ச்சி கப்பல் என சீனாவினால் அடையாளப்படுத்தப்பட்ட போதிலும், அந்த கப்பலானது கண்காணிப்பு கப்பல் என இந்திய ஊடகங்கள் அடையாளப்படுத்தியிருந்தன.

விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுவதற்கான சிறப்பு கப்பலாக இந்த கப்பல் கருதப்படுகின்றது.

தமது எதிர்ப்பையும் மீறி, சீனாவின் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நங்கூரமிட்டதை அடுத்து, இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட டோனியர் 228 சமுத்திர கண்காணிப்பு விமானத்தை இந்தியா, இலங்கைக்கு இலவசமாக வழங்கியது.

2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி யுவான் வேங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தருவதற்கு 7 தினங்களுக்கு முன்னர், அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி இலங்கை ஜனாதிபதியை பங்குப்பெற செய்து, இந்தியாவினால் இந்த விமானம் கையளிக்கப்பட்டது.

இலங்கை விமான எல்லை மற்றும் கடல் வலயத்திற்குள் டோனியர் விமானத்தை சிறப்பாக பயன்படுத்தி, சமுத்திர கண்காணிப்பு, சமுத்திர மோசடி கண்காணிப்பு மற்றும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விஸ்தரித்து,

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த விமானம் தொடர்பில் இலங்கை விமானப்படை அறிக்கையொன்றை வெளியிட்டு கூறியிருந்தது.
பென்டகன் அறிக்கையின் வெளிப்பாடு

கடந்த 10 வருட காலத்திற்குள் தெற்காசியாவில் தனது அழுத்தங்களை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ள சீனா, இலங்கையில் ராணுவ முகாமொன்றையும், விநியோக வசதிகளுடனான மத்திய நிலையமொன்றையும் நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டு வருவதாக 2021ம் ஆண்டு அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கை உள்ளிட்ட உலகிலுள்ள பல நாடுகளில் கடல் , வான் மற்றும் தரைப்பரப்புக்களின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, மேலதிக ராணுவ முகாம்கள் மற்றும் விநியோக வசதிகளை மேம்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டு வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களம், 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாவது வாரத்தில் வெளியிட்ட விரிவான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்டகன்

கம்போடியா, மியான்மார், தாய்லாந்து, சிங்கப்பூர், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, சீஷெல்ஸ், தான்சானியா, அங்கோலா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் பெயர்களே அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய நாடுகளாகும். சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் நடவடிக்கைகளுக்காக சீனாவினால் இந்த முகாம்கள் மற்றும் மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நமீபியாவில், சீனா அவ்வாறான முகாமொன்றை நிர்மாணித்து வருவதாக அறிவித்துள்ளது என ஐக்கிய அமெரிக்கா, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொடர்புகளுக்கான சமுத்திர கோடுகளுக்காக சீனாவிலிருந்து ஹார்முஸ் சமுத்திரம், ஆபிரிக்கா மற்றும் பசுபிக் தீவுகள் வரை சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் திட்டமிடுகின்ற தெரிவு செய்யப்பட்ட முக்கிய வலயங்களாகும்.

கடல் தொலைத்தொடர்பு வழி அல்லது வணிகத்திற்காக வழி என கூறப்பட்டாலும், அது தொலைதூர இடத்திலுள்ள வளங்களை அணுகும் மூலோபாயத்தை பெற்றுக்கொள்வதற்கான நெடுஞ்சாலைகள் என அமெரிக்கா கூறியுள்ளது.

குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியன பெரும்பாலும் கடல் மார்க்கமாகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போதைய பூலோள நிலைமை குறித்து பார்க்கும் போது, ரஷ்யா – யுக்ரேன் போர் நிலைமைக்கு மத்தியில், மேற்குல எதிரியும், ரஷ்யாவின் நண்பருமான சீனாவிற்கு இந்த கப்பல் மார்க்கம் மிக முக்கியமானது என அறியப்படுகின்றது.

இதன்படி, வலயத்தின் போட்டியாளர்களது செயற்பாடுகளை கண்காணிப்பதுடன், இலங்கையில் ஸ்தாபிக்கப்படுகின்ற சீன ராணுவ முகாம் அல்லது விநியோக வசதி மத்திய நிலையமானது, தனது கடல் தடங்களுக்கான மூலோபாய மார்க்கமாக பயன்படுத்தப்படக்கூடும் என அமெரிக்க ஆரம்பத்திலிருந்தே சந்தேகம் வெளியிட்டுள்ளது.

Share.
Leave A Reply