பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அரசு அந்நாட்டு பாராளுமன்றத்தில் நீதித்துறை சீர்திருத்த மசோதா ஒன்றை தாக்கல் செய்ய விரும்புகிறது இதன்மூலம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை கூட அரசால் கடந்து செல்ல முடியும்.

இந்த சட்டம் உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களை குறைத்து அரசின் அதிகாரங்களை வலுவாக்கும் சட்ட மசோதா என கூறி இஸ்ரேலிய எதிர்கட்சிகள், பொதுமக்களில் ஒரு பெரும் பிரிவினர், ரிசர்வ் படை வீரர்கள் ஆகியோர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி பைடன் இஸ்ரேலிய பிரதமர் இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் இப்படியான இஸ்ரேல் செல்வது நல்லதல்ல எனவும் கூறினார்.

இதற்கு இஸ்ரேலிய பிரதமர், வலதுசாரி கட்சிகள் மற்றும் இஸ்ரேலிய ஆளும் தரப்பு தலைவர்கள் ஆகியோர் கடுமையான பதிலடியை அமெரிக்காவுக்கு கொடுத்து வருகின்றனர்.

இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு நாங்கள் சுதந்திரமான இறையாண்மை மிக்க நாடு இங்கு என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் அதை நாங்கள் தீர்மானித்து கொள்கிறோம் எங்களுக்கு யாரும் பாடம் கற்பிக்க தேவையில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.

அதே போல் பிரதமர் நேதன்யாகுவின் அரசியல் ஆலோசகர்கள் வட்டத்தில் முக்கியமான நபரான அவரது மகன் யயேர் அமெரிக்கா இந்த போராட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதாக விமர்சித்து உள்ளார் இதனை இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் டாம் நைட்ஸ் மறுத்துள்ளார்.

அதே போல் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சரும் தீவிர வலதுசாரி கட்சியான யூத அதிகார கட்சியின் தலைவருமான இதாமார் பென் க்விர் “இஸ்ரேல் அமெரிக்காவின் தேசிய கொடியில் மாநிலங்களை குறிக்கும் விதமாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒன்று அல்ல என காட்டமாக விமர்சனம் செய்து உள்ளார்.

இஸ்ரேலிய கலாச்சார அமைச்சரான மிகி ஸோஹார் அதிபர் பைடன் பொய் செய்திகளை நம்பி பேசி வருவதாக கூறி உள்ளார், மேலும் இஸ்ரேலின் தீவிர வலதுசாரி கட்சியான மதசார்புள்ள ஸியோனிஸ்ட் கட்சியின் தலைவரான பெசாலெல் ஸ்மோத்ரிச்சும் அமெரிக்காவை விமர்சித்து உள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தற்போதைக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை அமெரிக்காவுக்கு அழைக்கப்போவதில்லை அதேபோல் அமெரிக்க. அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் தங்களது இஸ்ரேலிய சகாக்களை சந்திப்பதை தவிர்த்து வருகின்றனர்.

இவையனைத்தும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான பல ஆண்டுகால உறவில் மோசமான விரிசல் ஏற்பட்டுள்ளதை தெள்ள தெளிவாக காட்டுகிறது என்றால் மிகையாகாது.

Share.
Leave A Reply