நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு மக்கள் எதிர்கொண்ட பாரிய பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் மற்றும் பல்வேறு சவால்களுக்கு பின்னர் 2023ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தின் பின்னரான நிலைமை மக்கள் பொருளாதார ரீதியில் மூச்சுவிடக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கியமாக சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் ஒரு வருட காலமாக நடத்தி வந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக தற்போது நீண்ட கால கடன் வசதி திட்டத்துக்குள் இலங்கை பிரவேசித்திருக்கிறது.

அதனடிப்படையில், 48 மாதங்களுக்கு   இலங்கை 2.9 பில்லியன் டொலர்களை பெற தகுதியடைந்திருக்கிறது. 

அதன்படி, முதலாவது கடன் தவணைப்பணம் இலங்கைக்கு கிடைத்திருக்கிறது. 2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட கடுமையான நெருக்கடிகளுக்கு பின்னர் தற்போது நாணய நிதியத்தின் பிணை வழங்கும் திட்டத்துக்குள் இலங்கை சென்றிருக்கின்றமையானது இலங்கை  நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரு சமிக்ஞையை காட்டியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, ரூபாயின் பெறுமதியும் ஸ்திரமடைய ஆரம்பித்திருக்கிறது. எரிபொருட்களின் விலைகள் குறைவடைய ஆரம்பித்துள்ளதுடன், உணவு உற்பத்திகள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள், சேவைகளின் கட்டணங்கள் குறைவடைந்து வருகின்றன.

மறுசீரமைப்புக்கள் 

இந்த பின்னணியில் தற்போது நாட்டின் பொருளாதார ரீதியான மறுசீரமைப்புக்கள்  தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே கடன் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.  அவற்றில் மிக முக்கியமான நிபந்தனையாக அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடு காணப்படுகிறது.

அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாட்டை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இது மிகவும் சவால்மிக்க விடயமாகவே காணப்படுகிறது. நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்து, அதன் முகாமைத்துவங்களை மாற்றியமைப்பது என்பது இலகுவான விடயமல்ல.

மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கா டெலிகொம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாட்டை அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது.

மறுசீரமைப்பு செயற்பாடுகள் சவால்மிக்கதாக அமைந்திருக்கின்றன. விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழ ஆரம்பித்திருக்கின்றன.

எனவே, அவற்றை முகாமைத்துவம் செய்து சகல தரப்புக்களுடனும் பேசி பொது இணக்கப்பாட்டுடன் பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதிலேயே இலங்கையின் பொருளாதார மீட்சி தங்கியிருக்கிறது.

2022 நெருக்கடி 

2022ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதற்கான காரணங்கள் தெரியும். எனவே, அந்த காரணங்களை சரிசெய்து மீண்டும் பொருளாதார மீட்சியை நோக்கி நகர்வதற்கான மீட்புத் திட்டங்கள் சரியான முறையில் இடம்பெற வேண்டும்.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்ற நந்தலால் வீரசிங்க பொருளாதார வாகனம் தற்போது தரையை நோக்கி விழுந்துகொண்டிருக்கிறது. அது தரையில் விழுவதற்கு முன்பாக தடுத்து நிறுத்தவேண்டும்.

அதன் பின்னர் படிப்படியாக அதனை மேலே கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அவரது கூற்றுப்படி, தற்போது  பொருளாதார வாகனம் தரையில் விழாமல் தடுக்கப்பட்டிருக்கின்றது. அதனை இனி படிப்படியாக மேலே கொண்டுவர வேண்டிய தேவை காணப்படுகிறது.

அதனால் இங்கு அடுத்து என்ன நடக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.   தெளிவான திட்டங்கள், தேசிய கொள்கைகள் இதற்கு அவசியமாகின்றன.

காரணம், 2022ஆம் ஆண்டில் மக்கள் எந்தளவு தூரம் நெருக்கடியை எதிர்கொண்டார்கள் என்பது தெரியும். அதனை  யாரும் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது.

அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகள்,  காத்திருத்தல், ஏமாற்றங்கள், பொருளாதார பிரச்சினைகள், பாடசாலை ஸ்தம்பிதம், வர்த்தக செயற்பாடுகள் பாதிப்பு, மின்வெட்டு நெருக்கடி, தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் பாதிப்பு, போக்குவரத்து ஸ்தம்பிதம், எரிபொருள் பற்றாக்குறை, எரிபொருள் விலை அதிகரிப்பு, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் தோற்றம் பெற்றன.

டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருள் இறக்குமதியில் சிக்கல், எரிபொருள் விலை உயர்வு, மின்சார நெருக்கடி, அத்தியாவசிய  பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சிக்கல்கள், அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டன.

பல்வேறு பொருட்களின் விலைகள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் அதிகரித்தன. இதனால் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டனர்.

இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு அடுத்த கட்டமாக இலங்கை எவ்வாறான வேலைத்திட்டங்களை, தேசிய கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது இங்கு மிக முக்கியத்துவம் மிக்கதாகவுள்ளது.   முதலாவதாக, பொருளாதார மறுசீரமைப்பு செயற்பாடுகள் சரியான முறையில் இடம்பெற வேண்டும்.

தேசிய வருமானம் 

இதில் மிகவும் தீர்க்கமாக காணப்படுவது வரி வருமானமாகும். புதிய வரிமுறை தொடர்பாக பல விமர்சனங்கள் காணப்படுகின்றன.

ஆனால்,   நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பிரகாரம், அரச வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 15  வீதமாக உயர்வடைய வேண்டும்.

தற்போது அது 8 வீதமாக இருக்கிறது. எனவே, அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும். ஆனால், அது குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களை பாதிக்காத வகையில் இருக்கவேண்டும்.

மேலும், வரி ஊடாக பெறப்படுகின்ற நிதி சரியான முறையில் பயன்படுத்தப்படுவதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அதனூடாகவே மக்கள் மத்தியில் வரி தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

அத்துடன் அந்நிய செலாவணியை உள்ளே கொண்டு வருவதற்கான திட்டங்கள் சரியான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.   அவற்றில் பல விடயங்கள் காணப்படுகின்றன.

முக்கியமாக, டொலர் உள்வருகையை அதிகரிப்பதற்கான பல மூலங்கள் காணப்படுகின்றன. அதில் முதலாவதாக ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல்,  இறக்குமதி செலவை குறைத்தல்,  சுற்றுலாத்துறை ஊடான வருமானத்தை அதிகரித்தல், வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அனுப்புகின்ற அந்நிய செலாவணி வருகையை அதிகரித்தல், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரித்தல்,  சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட துறைகளில் இலங்கை மிக வேகமாக கவனம் செலுத்த வேண்டும்.

ஏற்றுமதி 

மிக தீர்க்கமானதாக இலங்கையின் ஏற்றுமதி வருமானம் காணப்படுகிறது. ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்.

ஏற்றுமதி வருமானத்தின் மூலக்கூறுகள் பரிசீலனை செய்யப்பட்டு, அவற்றுக்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, அதனை அதிகரித்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பது கட்டாயம்.

ஏற்றுமதி வருமானத்தை பொறுத்தவரையில் இலங்கை வருடம் ஒன்றுக்கு 12 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்கின்றது. 10 முதல் 12 பில்லியன் டொலர்கள் கிடைப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஏற்றுமதி வருமானம்  கிட்டதட்ட 15 பில்லியன் டொலர்களை நெருங்கவேண்டும்.

சுற்றுலாத்துறை

அடுத்த மிக முக்கிய டொலர் வருகை மூலமாக சுற்றுலாத்துறை காணப்படுகிறது. 2018ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை வருமானமாக 4.4 பில்லியன் டொலர்கள் கிடைத்தன.

அதன் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக தற்போது 500 மில்லியன்களுக்கும் குறைவான டொலர்களையே சுற்றுலா  வருமானமாக கிடைத்தது. அதனை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.

அதனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுவது மிக அவசியமாகும்.   இதனூடாக 6 பில்லியன்களை கடந்து வருமானம் பெற முடியும்.

அந்நிய செலாவணி  

வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அனுப்புகின்ற அந்நிய செலவானி வருடம் ஒன்றுக்கு ஏழு பில்லியன்கள் வரை வந்து கொண்டிருந்தது.

ஆனால், 2021ஆம் ஆண்டு ஐந்து பில்லியன்களாக குறைவடைந்திருக்கின்றது. அதனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்   எடுக்கப்பட வேண்டும். வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் சரியான முறையில் இலங்கைக்கு டொலர்களை அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநாட்டு நேரடி முதலீடூகள் 

அதேபோன்று வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கவர்வதற்கான வேலைத்திட்டம் அவசியமாகும்.  ஒற்றை ஜன்னல் என்ற ஒரே அறையின் கீழ் வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள் இலங்கையில் இலகுவாக முதலீடுகளை மேற்கொள்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும். புதிய முதலீடுகளை இலங்கையில் கவர்வதற்கான ஊக்குவிப்புக்களை வெளிப்படுத்துவதும் இன்றியமையாதது.

கடன் மறுசீரமைப்பு 

இலங்கை கிட்டத்தட்ட 52 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை கொண்டிருக்கிறது. கடன் ஸ்திரத்தன்மை இங்கு முக்கியமாகும். 

தற்போது கடன் மறுசீரமைப்பு செய்து, அவற்றை மீள் செலுத்தும் காலத்தை நீடித்துக்கொள்ள முடியும். அதேபோன்று எதிர்காலத்தில் கடன்களை பெறுகின்றபோது அவை செயற்றிறனுடன் இடம்பெற வேண்டும்.

முக்கியமாக, கடன்களிலேயே தங்கியிருக்காமல் வருமானத்தையும் முதலீட்டையும் அதிகரித்துக்கொள்ளும் வழிகளே   அவசியமாகும். எனவே, கடன் தொடர்பான ஒரு ஸ்திரமான நீண்ட கால திட்டமும் இலங்கைக்கு மிக அவசியமாகிறது.

எங்கே செல்வது? 

எனவே, இங்கு கொள்கைத் திட்டங்கள் சரியான முறையில் உருவாக்கப்பட்டு, புதிய நிலைமைகள் எதிர்கொள்ளப்பட வேண்டும்.

கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, தென்கொரியா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள் கடந்த காலங்களில் நெருக்கடியை சந்தித்தபோதும் நீண்ட கால பொருளாதார திட்டங்களை வகுத்து முன்னேறின.

எனவே, இலங்கையும் 30 வருடங்கள் அல்லது 25 வருடங்கள் என நீண்ட காலத் திட்டங்களை  வகுக்க வேண்டும். அரசாங்கங்கள் மாறினாலும் நீண்டகால பொருளாதார திட்டங்களில் மாற்றம் ஏற்படக்கூடாது.

மறுசீரமைப்புத் திட்டங்கள் இடம்பெற வேண்டும். சகல தரப்புடனும்  பேச்சுவார்த்தை நடத்தி சகல தரப்பு ஆலோசனைகளுடனும் இணைக்கப்பாட்டுடனும் மறுசீரமைப்புக்களில் இறங்கினால் மீட்சியை நோக்கி நகர முடியும்.

(ரொபட் அன்டனி)

 

Share.
Leave A Reply